

வாஷிங்டன்: ஈரான் மீது அமெரிக்க ராணுவம் திடீர் தாக்குதலை தொடுத்திருப்பது தொடர்பான பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்கா, ஈரான் இடையே இருதரப்பு அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்ய ஓமன் வெளியுறவு அமைச்சர் பஃதர் பின் ஹமாத் அல் புசைடி நேரடியாக அமெரிக்காவுக்கு சென்றார். மேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
இந்தச் சூழலில் யாரும் எதிர்பாராத வகையில் அமெரிக்க நேரப்படி வெள்ளிக்கிழமை நள்ளிரவில் (ஈரானில் காலை 9.30 மணி) ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீரென உத்தரவிட்டார். அந்த நேரத்தில் ஆளும் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி தலைவர்கள் தூக்கத்தில் இருந்ததால் யாருக்கும் தகவல் தெரியவில்லை.
தகவல் இல்லாமல் தாக்குதல்:
ஈரான் தாக்குதல் தொடர்பாக மத்திய கிழக்கில் உள்ள நட்பு நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கும் அமெரிக்க அரசு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை. அமெரிக்க அதிபர் ட்ரம்பும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் மட்டும் கலந்தாலோசித்து ஈரான் மீது திடீர் தாக்குதல் நடத்தியிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக, ‘அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த ஈரான் 10 நாட்களுக்குள் ஒப்புக் கொள்ளவில்லை என்றால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது பதில் தாக்குதல் நடத்துவோம் என ஈரான் கூறியது.
அணு ஆயுத தயாரிப்பை நிறுத்த ஈரான் நீண்டகாலமாக மறுத்து வருவதால், அதன் மீது தாக்குதல் நடத்தி அங்கு ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவதுதான் தீர்வு என அமெரிக்க அதிபர் டரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்காக அமெரிக்க போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு செல்ல அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், கத்தார், குவைத் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க முகாம்களில் அமெரிக்க விமானப் படையின் போர் விமானங்களும், சரக்கு விமானங்களும் குவிக்கப்பட்டன.
இந்நிலையில்தான், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள அயத்துல்லா அலி காமேனியின் அலுவலகங்கள், அதிபர் மசூத் பெஜஸ்கியான் ஆகியோரது அலுவலகங்கள், இல்லங்களை குறிவைத்து இஸ்ரேல், அமெரிக்க படைகள் நேற்று வான் தாக்குதல் நடத்தின. இதில் காமேனியின் இல்லம் அருகே பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதை செயற்கைக்கோள் படங்கள் உறுதி செய்தன.
பதில் தாக்குதல்:
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதும், ஈரான் பதில் தாக்குதலில் இறங்கியது. இஸ்ரேல் நோக்கி ஈரான் தொலைதூர ஏவுகணைகளை வீசியது. இவற்றை இடைமறித்து அழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகள் ஈடுபட்டன.
இதனிடையே, “உலகின் தீவிரவாத மையமாக ஈரான் உருவெடுத்து உள்ளது. அண்மையில் ஈரான் அரசுக்கு எதிராக போராடிய ஆயிரக்கணக்கான மக்களை அந்த நாட்டு ராணுவம் கொன்று குவித்தது. அணு ஆயுத திட்டத்தை கைவிட அந்த நாடு மறுக்கிறது.
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு ஈரான் மிகப் பெரிய அச்சுறுத்தலாக நீடிக்கிறது. இந்த அச்சுறுத்தலை முறியடிக்கவே தற்போது அந்த நாடு மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு இருக்கிறது” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.