ஈரான் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் ரத்து: ட்ரம்ப் திடீர் அறிவிப்பு

ஈரான் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் ரத்து: ட்ரம்ப் திடீர் அறிவிப்பு
Updated on
2 min read

வாஷிங்டன்: மத்திய கிழக்கில் கடந்த சில நாட்களாக உச்சகட்டத்தை எட்டியிருந்த அமெரிக்கா - ஈரான் போர் பதற்றத்தில் தற்போது முக்கியத் திருப்பமாக, ஈரானுக்கு எதிராக வியாழக்கிழமை இரவு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த வான்வழித் தாக்குதல்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். ஈரானின் உயர்மட்டத் தலைவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இது குறித்துத் தனது ட்ரூத் சோசியல் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், “ஈரான் இஸ்லாமியக் குடியரசுடனான பேச்சுவார்த்தைகள் அந்த நாட்டின் மிக உயர்மட்டத் தலைமை வரை கொண்டு செல்லப்பட்டு, அவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில், அமெரிக்க அதிபர் என்ற முறையில், இன்று ஈரான் மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த வான்வழித் தாக்குதல்களையும் குண்டுவீச்சுகளையும் நான் ரத்து செய்துள்ளேன்.

இந்த விவாதங்களும் இறுதிப் புள்ளிகளும், அடிப்படைக் கருத்துருவிலும் சரி, மிக விரிவான விவரங்களிலும் சரி, இதில் தொடர்புடைய அமெரிக்கா, இஸ்ரேல், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் , கத்தார், துருக்கி, பாகிஸ்தான், பஹ்ரைன், குவைத், ஜோர்டான், எகிப்து மற்றும் பிற நாடுகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த உடன்படிக்கை முழுமையாக இறுதி செய்யப்படும் வரை, கடற்படை முற்றுகை எவ்வித மாற்றமும் இன்றி முழு வீச்சில் தொடரும். இதற்கான அதிகாரபூர்வ கையெழுத்து நடைபெறும் நேரம் மற்றும் இடம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் இந்த அதிரடி அறிவிப்பு, உலகளவில் கச்சா எண்ணெய் சந்தையிலும் சர்வதேச அரசியல் அரங்கிலும் நிலவி வந்த போர் அச்சத்தை சற்றே தணித்துள்ளதாக தெரிகிறது.

ட்ரம்ப் அறிவிப்புக்கு முன்பு நடந்தது என்ன?

அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்​பந்​தம் ஏற்படுவதில் இழுபறி நீடித்த ​நிலை​யில் ஹார்​முஸ் ஜலசந்தி​யில் ரோந்து சென்ற அமெரிக்​கா​வின் அபாச்சி ரக ஹெலிகாப்​டரை ஈரான் சுட்டு வீழ்த்​தி​யது. இதற்கு பதிலடி​யாக ஈரானின் தீவு பகு​தி​களில் உள்ள வான் பாது​காப்பு ரேடார்​கள் மீது அமெரிக்​கப்​படை குண்டு வீசி​யது.

இந்நிலையில், ஈரான் தலைநகர் டெஹ்​ரான், பந்​தர் அப்​பாஸ் துறை​முக நகரம், மற்​றும் ஹார்​முஸ் ஜலசந்​தியை ஒட்​டி​யுள்ள ராணுவ தளங்​கள் மீது அமெரிக்கா நேற்று காலை 2-வது நாளாக தாக்​குதல் நடத்​தி​யது. ஆனால், இதில் ஏற்​பட்ட பாதிப்​பு​கள் குறித்த தகவலை ஈரான் வெளி​யிட​வில்​லை.

இதற்கு பதிலடி​யாக பஹ்ரைன், குவைத் மற்​றும் ஜோர்​டானை நோக்கி ஈரான் ஏவு​கணை தாக்​குதல் நடத்​தி​யது. இதனால் குவைத் வான்​வெளி நேற்று பல மணி நேரம் மூடப்​பட்​டது. ஜோர்டானில் உள்ள அமெரிக்க விமானப்​படை தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணை தாக்​குதல் நடத்​தி​யது. இதில் 20 ஏவு​கணை​கள் நடு​வானில் இடைமறித்து அழிக்​கப்​பட்​டன. இதனால் யாரும் பாதிப்படைய​வில்​லை.

இதன் தொடர்ச்சியாக, சமூக ஊடகத்​தில் நேற்று கருத்து தெரி​வித்த அதிபர் ட்ரம்ப், “ஈரானை அமெரிக்கா மிக பயங்​கர​மாக தாக்கி கார்க் தீவை கைப்​பற்​றும். வெனிசுலா​வில் எரிசக்தி ஏற்​றும​தியை முழு கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்டு வந்​தது போல், ஈரானின் கார்க் தீவு கச்சா எண்​ணெய் முனை​யத்​தை​யும் கட்​டுப்​பாட்​டுக்​குள் கொண்டு வரும் காலம் வெகு தொலை​வில் இல்​லை” என தெரிவித்துள்​ளார்.

கடந்த ஏப்​ரல் மாதம் அதிபர் ட்ரம்ப் விடுத்த எச்​சரிக்​கை​யில், “போர் நிறுத்த ஒப்​பந்த நிபந்​தனை​களுக்கு சம்​ம​திக்​க​வில்லை என்​றால், ஈரானின் ஒட்​டுமொத்த நாகரிக​மும் ஒரே இரவில் அழியப் போகிறது. அதை ஒரு​போதும் மீண்டு கொண்டு வர முடியாது” என கூறியிருந்​தார். இந்​நிலை​யில் கார்க் தீவை கைப்பற்​று​வோம் என அவர் மிரட்​டி​யிருந்தார்.

ஈரானின் கார்க் தீவு, ஈரானிலிருந்து 33 கி.மீ தொலை​வில் உள்​ளது. இங்​கிருந்​து​தான் ஈரானின் கச்சா எண்​ணெய் மற்​றும் எரிவாயுக்கள் ஏற்​றுமதி செய்​யப்​படு​கின்​றன. இதை அமெரிக்க படைகள் கைப்பற்றி​னால், அதன் மீது ஈரான் ஏவு​கணை​கள் மற்றும் ட்ரோன் மூலம் தாக்​குதல் நடத்​து​வது எளி​தாக இருக்​கும். இதனால் அமெரிக்க படைகளுக்கு அதிக பாதிப்​பு​கள் ஏற்​படும் சூழல் ஏற்​படும் என்ற அச்சம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஈரான் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் ரத்து: ட்ரம்ப் திடீர் அறிவிப்பு
திக்குமுக்காடும் திரிணமூல் காங்கிரஸ்... மம்தா திணறுவது ஏன்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in