

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்
வாஷிங்டன்: ரஷ்யா மற்றும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை கொள்முதல் செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது 100 சதவீதம் வரை கூடுதல் சுங்க வரி விதிக்க வகை செய்யும் மசோதாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. ரஷ்யா மற்றும் ஈரான் மீது தடைகளை விதிக்கும் ‘லின்ட்சே ஓ கிரகாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடை சட்டம் 2026’-க்கு அதிபர் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை அன்று கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தச் சட்டம் மூலம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கொள்முதல் செய்யும் முக்கிய நாடுகள் மீது 100 சதவீதம் வரை வரி விதிக்கும் அதிகாரத்தை அதிபர் ட்ரம்ப் பெற்றுள்ளார். இதன் மூலம் எந்தெந்த நாடுகளுக்கு வரி விதிப்பது, வரி விதிப்பு விகிதம், விதிகளை தளர்த்தி வரி விலக்கு அளிப்பது உள்ளிட்டவற்றை ட்ரம்ப் தீர்மானிக்க முடியும் என தகவல்.
இந்தச் சட்டம் அதிபர் ட்ரம்ப் ஒப்புதல் அளித்ததில் இருந்து 30 நாட்களுக்குள் நடைமுறைக்கு வரும் என அமெரிக்க வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும் முதல் 5 நாடுகளான சீனா, இந்தியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகள் உள்ளன.
இருப்பினும் இந்த நாடுகளின் பெயர்கள் அமெரிக்க மசோதாவில் குறிப்பிடப்படவில்லை. ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும் முதல் 5 நாடுகள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் - இந்தியா உறுதி
நாட்டின் 140 கோடி மக்களின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பல்வேறு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெயைக் கொள்முதல் செய்வது தொடரும்.
நாட்டின் வர்த்தக, பொருளாதார நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அதன் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்திய தொழில் அமைப்புகளுடன் இணைந்து அரசு செயல்படும். இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. இந்தியாவின் முதன்மை கச்சா எண்ணெய் விநியோகஸ்தராக ரஷ்யா உள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 51.1 சதவீதத்தை ரஷ்யாவே வழங்கியுள்ளது.
இது ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, வெனிசுலா, பிரேசில், ஓமன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அனைத்தும் இணைந்து வழங்கியதை விட அதிகமாகும். இருப்பினும், எரிசக்தி கொள்முதலைப் பரவலாக்கும் முயற்சியாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடமிருந்தும் கொள்முதல் செய்வதை இந்தியா அதிகரித்து வருகிறது என்று இந்திய வெளியுறவு துறை அண்மையில் தெரிவித்திருந்தது.