

நகோயா: 20-வது ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணங்களில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. வரும் அக்டோபர் 4 வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 45 நாடுகளை சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் 43 வகையான விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். இவர்களுடன் விளையாட்டுத்துறை அதிகாரிகள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என சுமார் 6 ஆயிரம் பேரும் ஜப்பான் வந்து சேர்ந்துள்ளனர்.
தொடக்க விழா இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பாலோமா மிசுஹோ மைதானத்தில் கோலாகலமாக நடைபெறுகிறது.
2023-ல் ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 28 தங்கம், 38 வெள்ளி மற்றும் 41 வெண்கலம் உள்பட மொத்தம் 107 பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்தியா, இந்த முறை கூடுதல் பதக்கங்களை கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டக்கூடும். இந்தியாவில் இருந்து இம்முறை 267 வீரர்கள், 234 வீராங்கனைகள் என 501 பேர் ஆசிய விளையாட்டில் பங்கேற்கின்றனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேரும் அடங்குவர். இந்திய அணி 36 வகையிலான விளையாட்டுகளில் கலந்துகொள்கிறது.
இந்தியா, பதக்கப் பட்டியலைத் தாண்டிய பெரிய லட்சியங்களுடன் ஆசிய விளையாட்டு போட்டிகளை எதிர்கொள்கிறது. கடந்த 2023-ம் ஆண்டு சீனாவின் ஹங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 106 பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தது. ஆசிய விளையாட்டு போட்டி வரலாற்றில் 100 பதக்கங்களுக்கு மேல் இந்தியா குவித்தது அதுவே முதன்முறையாகும். இதனால் இம்முறை எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
2036-ம் ஆண்டுக்குள் முதல் 10 முன்னணி விளையாட்டு நாடுகள் வரிசையில் இடம்பிடிப்பதும், 2047-ம் ஆண்டுக்குள் முதல் ஐந்து இடங்களுக்குள் நுழைவதும் இந்தியாவின் லட்சியமாக உள்ளது. இவை நீண்ட கால இலக்குகள் என்றாலும், ஒவ்வொரு பெரிய அளவிலான விளையாட்டுத் திருவிழாவும் நமது செயல் திறன் எவ்வாறு உள்ளது, இலக்குக்கு எவ்வளவு அருகில் இருக்கிறோம் என்பதற்கான ஒரு கண்ணோட்டத்தை வழங்குகிறது.
எனவே, இந்தப் போட்டிகள் வெறும் பதக்கப் பட்டியலை அதிகரிப்பதற்கானது மட்டுமல்ல, இந்திய விளையாட்டுத் துறையின் ஆழம், வலிமை மற்றும் அழுத்தம் மிக அதிகமாக இருக்கும்போது திறமையைச் சாதனைகளாக மாற்றும் திறன் ஆகியவற்றுக்கான மற்றொரு சோதனையாகும். ஆசிய விளையாட்டில் இதுவரை இந்தியாவுக்கு அதிக பதக்கங்களை வென்றுதரக்கூடிய விளையாட்டுகளாக தடகளமும், துப்பாக்கி சுடுதலும் இருந்து வருகின்றன. இம்முறையும் அது தொடரக்கூடும்.
துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற மனு பாகர் தலைமையில், இளமையும் அனுபவமும் கலந்த பலமான அணியாக இந்தியா களமிறங்குகிறது. 30 துப்பாக்கி சுடுதல் வீரர்களைக் கொண்ட இந்திய அணி, ரைபிள், பிஸ்டல் மற்றும் ஷாட்கன் பிரிவுகளில் மீண்டும் ஒரு தீவிர சவாலை எதிர்கொள்ளும் அளவுக்குப் பலத்துடன் உள்ளது. இருப்பினும், இந்த எதிர்பார்ப்பு யதார்த்தமான பார்வையுடனேயே வருகிறது ஏனெனில் துப்பாக்கி சுடுதலில் சீனா தற்போதும் அச்சுறுத்தலான சக்தியாக உள்ளது.
தடகளப் போட்டியில் ஈட்டி எறிதல் நட்சத்திரமான நீரஜ் சோப்ரா, காயம் காரணமாக இம்முறை பங்கேற்கவில்லை. இதனால் தொடர்ச்சியாக 3-வது முறையாக பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டுள்ளார். இருப்பினும், அவர் இல்லாதது இந்தியத் தடகள அணியின் லட்சியத்தைக் குறைக்கவில்லை. 78 பேர் கொண்ட தடகள அணியில் பதக்கத்துக்காக போராடத் தகுதியான பல வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆடவர் குண்டு எறிதலில் தஜிந்தர்பால் சிங் தூர் தொடர்ந்து மூன்றாவது முறையாக தங்கப் பதக்கத்தை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறார்.
நீளம் தாண்டுதலில் முரளி ஸ்ரீ சங்கர், ஓட்டப் பந்தயத்தில் குல்வீர் சிங், ஈட்டி எறிதலில் ரோஹித் யாதவ், டெகத்லானில் தேஜஸ்வின் சங்கர், மகளிருக்கான நீளம் தாண்டுதலில் அன்சி சோஜன் ஆகியோரும் பதக்கம் வெல்லக்கூடியவர்களாக திகழ்கின்றனர். உயரம் தாண்டுதலில் சர்வேஷ் குஷாரே, 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் ஜோதி யார்ராஜி, மும்முறை தாண்டுதலில் பிரவீன் சித்ரவேல் ஆகியோரும் பதக்கம் வெல்லக்கூடிய போட்டியாளர்களாக உள்ளனர். ஹாங்சோவில் 6 தங்கம், 14 வெள்ளி, 9 வெண்கலம் என 29 பதக்கங்களை தடகள அணி வென்றிருந்தது. இம்முறை இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரிக்கெட்:
2028-ம் ஆண்டு நடைபெற உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம் பெற்றுள்ளதால் இம்முறை ஆசிய விளையாட்டில் கிரிக்கெட் போட்டி கவனம் பெற்றுள்ளது. நடப்பு சாம்பியனான ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி அரை இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
ஆடவர் கிரிக்கெட்டில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. பாட்மிண்டனிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் மீது எதிர்பார்ப்புகள் உள்ளன. இரட்டையர் பிரிவில் சாட்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடி கடந்த முறை தங்கம் வென்றிருந்தது. இம்முறை அதேபோன்று உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் இந்த ஜோடி முனைப்பு காட்டக்கூடும். ஒற்றையர் பிரிவில் அனுபவம் வாய்ந்த பி.வி.சிந்து, இளைய தலைமுறை வீராங்கனையான உன்னதி ஹூடா ஆகியோரும் பெருமை தேடிதரக்கூடும்.
ஹாக்கி:
ஆசிய விளையாட்டில் ஹாக்கி போட்டிகள் இந்தியாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இந்தத் தொடரில் தங்கப் பதக்கம் வெல்லும் அணி லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். ஆடவர் ஹாக்கியில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையிலான நடப்புச் சாம்பியனான இந்திய அணி சமீப காலங்களில் உலகக் கோப்பை மற்றும் புரோ லீக்கில் அடைந்த தோல்விகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதில் கவனம் செலுத்தக்கூடும்.
இந்திய மகளிர் ஹாக்கி அணி ஹாங்சோவில் கடந்த முறை நடைபெற்ற ஆசிய விளையாட்டில் வெண்கலம் பதக்கம் கைப்பற்றியிருந்தது. இந்த பதக்கத்தை மேம்படுத்துவதில் மகளிர் அணி தீவிரம் காட்டக்கூடும். உலகக் கோப்பையில் 5-வது இடத்தைப் பிடித்தது உள்ளிட்ட அவர்களின் சமீபத்திய செயல்பாடுகள் நம்பிக்கையை வழங்குகின்றன.
வில்வித்தை, குத்துச்சண்டை மற்றும் கபடியில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடரக்கூடும். கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்களின் வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகின்றனர். கபடியில், இந்தியாவின் ஆடவர் அணி ஆசிய விளையாட்டுத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளில் ஒன்றாக உள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டில் இந்திய கபடி அணியின் வெற்றிப் பயணம் தடைபட்டிருந்தது. எனினும் ஹங்சோவில் மீண்டும் தங்க பதக்கத்தை வென்றிருந்தனர். இம்முறை பதக்கத்தை தக்கவைப்பதில் இந்திய அணி கவனம் செலுத்தக்கூடும்.
ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு இந்தியாவுக்கான புதிய அளவுகோலை நிர்ணயித்தது. நகோயா அடுத்த சோதனை களமாக உள்ளது. 2036-ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்தும் உரிமையை பெறுவதற்கான நடவடிக்கையில் களமிறங்கி உள்ள இந்தியா, நகோயாவில் அதை நோக்கி மற்றொரு அடியை எடுத்து வைக்கிறது.
1951-ல் 2-வது இடம்
1951-ல் முதன் முறையாக நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா 15 தங்கம், 16 வெள்ளி, 8 வெண்கலம் என 51 பதக்கங்களை வென்று 2-வது இடம் பிடித்திருந்தது. இன்று வரையிலும் ஆசிய விளையாட்டில் இந்தியாவின் சிறப்பான செயல்திறனாக இது அமைந்துள்ளது. கடைசியாக 2023-ம் ஆண்டு ஹாங்சோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டில் இந்தியா 28 தங்கம், 38 வெள்ளி, 40 வெண்கலம் என 106 பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்திருந்தது.
தடகளத்தில் தடம் பதித்துள்ள இந்தியா
ஆசிய விளையாட்டில் இந்தியா தடகளம் மற்றும் துப்பாக்கி சுடுதலில் வலுவாக திகழ்ந்து வருகிறது. இதுவரை இந்தியா தடகளத்தில் 85 தங்கம், 102 வெள்ளி, 96 வெண்கலம் என 283 பதக்கங்களை வென்றுள்ளது. அதேவேளையில் துப்பாக்கி சுடுதலில் 16 தங்கம், 30 வெள்ளி, 34 வெண்கலம் என 80 பதக்கங்களை இந்தியா கைப்பற்றி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக மல்யுத்தத்தில் 65 பதக்கங்களும், குத்துச்சண்டையில் 61 பதக்கங்களையும் இந்தியா வென்றுள்ளது.
469 பதக்கங்கள்
ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டில் 469 பதக்கங்களுக்கு 43 விளையாட்டுகளில் 71 பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.
தேசிய கொடியை ஏந்திச் செல்லும் மனுபாகர்
ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகரும், கபடி வீரர் பவன் ஷெராவத்தும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் நடைபெறும் அணிவகுப்பில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏந்திச் செல்ல உள்ளனர். தொடக்க விழாவில் இந்திய அணியில் இருந்து 158 பேர் கலந்து கொள்கின்றனர்.
ஜப்பானில் 3-வது முறையாக...
ஆசிய விளையாட்டு போட்டியை ஜப்பான் நடத்துவது இது 3-வது முறையாகும். இதற்கு முன்னர் 1958-ல் டோக்கியோவிலும், 1994-ல் ஹிரோஷிமாவிலும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளை ஜப்பான் நடத்தி உள்ளது.
ஒலிம்பிக் போட்டிக்கான பாதை
ஆசிய விளையாட்டு வில்வித்தையில் ஆடவர், மகளிருக்கான தனிநபர் ரீகர்வ் பிரிவில் தங்கம், வெள்ளி வெல்லும் வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவார்கள். இதேபோன்று ரீகர்வ், காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும். ஹாக்கியில் ஆடவர், மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளும் நேரடியாக ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறும். ஸ்குவாஷ், டென்னிஸில் ஆடவர், மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களும் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவார்கள். இதில் டென்னிஸில் தரவரிசையில் 500 இடங்களுக்குள் இருக்க வேண்டும் என விதி உள்ளது.
புதிய விளையாட்டுகள்
ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டில் கலப்பு தற்காப்பு கலை, டெக்பால், பேடல் டென்னிஸ், விர்ச்சுவல் தேக்வாண்டோ, அலைச்சறுக்கு, பிஎம்எஸ் ஃப்ரீஸ்டைல் சைக்கிள் சாகசம் ஆகியவை புதிதாக இடம் பெற்றுள்ளன. இ-ஸ்போர்ட்ஸ், பிரேக்கிங் (ஸ்ட்ரீட் டான்ஸ்), 3X3 கூடைப்பந்து ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளது.
314 பேர் அறிமுகம்
ஐச்சி-நகோயா ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியில் 501 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் 267 வீரர்களும், 234 வீராங்கனைகளும் அடங்குவர். இந்திய அணியில் இடம் பெற்றுள்ளவர்களில் 314 பேர் முதல்முறையாக ஆசிய விளையாட்டில் களமிறங்குகின்றனர்.