“ஈரான் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றால் இஸ்ரேல் அழிந்திருக்கும்” - ட்ரம்ப்

“ஈரான் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றால் இஸ்ரேல் அழிந்திருக்கும்” - ட்ரம்ப்
Updated on
1 min read

வாஷிங்டன்: ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திய ராணுவத் தாக்குதல்களே இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

லெபனான் அதிபர் ஜோசப் அவ்ன் பதவியேற்ற பிறகு முதன்முறையாக வெள்ளை மாளிகைக்கு வருகை தந்திருந்தார். அவருடனான சந்திப்பில் பேசிய ட்ரம்ப், "நாங்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்தாமல் இருந்திருந்தால், இன்று இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருந்திருக்காது" என்று தெரிவித்தார்.

ஈரானின் ராணுவத் திறனைக் குறைக்க அமெரிக்கா நடத்திய தாக்குதல்கள், மத்திய கிழக்கில் தனது முக்கியக் கூட்டாளியான இஸ்ரேலைப் பாதுகாக்க உதவியதாக அவர் கூறினார்..

அமெரிக்காவின் ஆதரவுடன் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு, அங்கு லெபனான் தேசிய ராணுவத்தின் கட்டுப்பாடு விரிவாக்கப்பட்டு வருகிறது. இது குறித்துப் பேசிய ட்ரம்ப், இஸ்ரேல் படைகளைத் திரும்பப் பெறும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதேவேளையில், தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறுவதை உறுதி செய்ய அமெரிக்கா அதிக அழுத்தம் தர வேண்டும் என லெபனான் அதிபர் ஜோசப் அவ்ன் கேட்டுக்கொண்டார்.

மேலும், ஹிஸ்புல்லா அமைப்பைக் கட்டுப்படுத்தவும், தெற்குப் பகுதியில் அமைதியை ஏற்படுத்தவும் லெபனான் ராணுவத்திற்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“ஈரான் மீது தாக்குதல் நடத்தவில்லை என்றால் இஸ்ரேல் அழிந்திருக்கும்” - ட்ரம்ப்
“நாடாளுமன்றத்துக்குள் கும்பல் தாக்குதல் நடக்குமோ என பயந்தோம்” - கங்கனா பகிர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in