“சரணடைவது மட்டுமே ஒரே தீர்வு” - ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

“சரணடைவது மட்டுமே ஒரே தீர்வு” - ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
Updated on
1 min read

வாஷிங்டன்: ஈரானுடனான போர் தீவிரமடைந்த நிலையில், நிபந்தனையற்ற சரணாகதி தவிர வேறு எந்த ஒப்பந்தத்திற்கும் இடமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

அதிபர் ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பதிவில், “நிபந்தனையற்ற சரணாகதியைத் தவிர ஈரானுடன் வேறு எந்த ஒப்பந்தமும் கிடையாது. அதற்குப் பிறகு, சிறந்த மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்கத் தலைவர்(கள்) தேர்ந்தெடுக்கப்பட்டால், நாங்களும் எங்களது அற்புதமான மற்றும் மிகவும் துணிச்சலான கூட்டாளிகளும் இணைந்து, ஈரானை அழிவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்க அயராது உழைப்போம். 

இதன் மூலம் ஈரானைப் பொருளாதார ரீதியாக முன்னெப்போதையும் விடப் பெரியதாகவும், சிறந்ததாகவும் மற்றும் வலிமையானதாகவும் மாற்றுவோம். ஈரானுக்கு ஒரு சிறந்த எதிர்காலம் அமையும். ஈரானை மீண்டும் சிறந்த நாடாக்குவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை அன்றும் ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசின. அதற்கு ஈரான் தரப்பும் பதிலடி கொடுத்து வருகிறது. இஸ்ரேல் மீதும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகள் மீதும் ஈரான் பதில் தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

கடந்த வாரம் தொடங்கிய இந்தப் போரில் அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவத்தின் கூட்டுத் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்தார். மேலும், ஈரான் ராணுவ முகாம்கள் மற்றும் அணுசக்தி சார்ந்த திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களையும் அமெரிக்கா, இஸ்ரேல் தரப்பு தாக்கி வருகின்றன. ஈரானில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1,000-ஐ கடந்துவிட்டதும் கவனிக்கத்தக்கது.

இது ஒருபுறமிருக்க, மத்திய கிழக்கில் போர் நீடித்து வருவதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் பெரும் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. இது குறித்து முதலீட்டாளர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை என்றும், நிலைமை விரைவில் கட்டுக்குள் வரும் என்றும் அமெரிக்காவின் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

“சரணடைவது மட்டுமே ஒரே தீர்வு” - ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை
மத்தியஸ்த முயற்சியை சில நாடுகள் தொடங்கியுள்ளதாக ஈரான் அதிபர் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in