

இலங்கை எம்.பி மனோ கணேசன், அனோஜன் சிவராசா
கொழும்பு: இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இந்துக்கள் சில மாதங்களுக்கு முன்பு கதிர்காமம் முருகன் கோயிலுக்கு புனித பாத யாத்திரையை மேற்கொண்டனர். அவர்களோடு சுப்பிரமணியம் என்று பெயரிடப்பட்ட நாயும் சென்றது. அந்த நாயை, முஸ்லிம் இளைஞர் ஒருவர் தாக்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து முஸ்லிம் இளைஞர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையானார்.
ஆனால் இந்த விவகாரம் இலங்கை சமூக வலைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியது. சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசாவும் சமூக வலைதள விவாதத்தில் பங்கேற்று பதிவுகளை வெளியிட்டு வந்தார். அப்போது நபிகள் நாயகம் குறித்து அவர் அவதூறாக விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக சவுதி போலீஸார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சவுதி அரேபிய நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7.55 கோடி அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் அனோஜன் சிவராசாவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்து உள்ளது.
இந்த சூழலில் இலங்கையை சேர்ந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் எம்.பி.யுமான மனோ கணேசன் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் சவுதி அரேபிய பட்டத்துக்கு இளவரசர் சல்மானுக்கும் இடையே மிக நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. எனவே இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியிடம் பேச வேண்டும். அவரது உதவியுடன் அனோஜன் சிவராசாவை மீட்க வேண்டும்” என கூறியுள்ளார்.