

புதுடெல்லி: டெல்லியில் மைன்புரியைச் சேர்ந்த ஒருவர் சமூக ஊடகத்தில் வந்த விளம்பரத்தைப் பார்த்து உலர் பழங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார்.
செயலி ஒன்றின் மூலம் மோசடியாளர்கள் அவரைத் தொடர்பு கொண்டு, பொருளை டெலிவரி செய்ய இயலவில்லை எனக் கூறி, அதற்குப் பதிலாக பணத்தைத் திருப்பித் தருவதாக கூறினர். அவர்களது வழிமுறைகளின்படி செயல்பட்ட அந்த நபர், தனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.47,971-ஐ இழந்தார். இதுகுறித்து அவர் காவல் துறையில் புகாரளித்தார்.
விசாரணையில், மோசடிப் பணம் டெல்லி திரிலோக்புரியைச் சேர்ந்த சன்னியின் வங்கிக் கணக்குக்குச் சென்றது தெரியவந்தது. கமிஷன் ஆசையில் சன்னி தனது வங்கிக் கணக்கை மோசடிப் பணத்தைப் பெறப் பயன்படுத்த அனுமதித்துள்ளார். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மொபைல் போன் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில், காவல் துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் பயன்படுத்திய வெள்ளை நிற காரும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்ற காவலில் அனுப்பப்பட்டுள்ளனர்.