ட்ரம்ப்பை கொலை செய்ய முயற்சித்த நபருக்கு ஆயுள் தண்டனை!

ரியான் ரூத்

ரியான் ரூத்

Updated on
1 min read

வாஷிங்டன்: 2024 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு டொனால்டு ட்ரம்பைக் கொல்ல சதி செய்த குற்றச்சாட்டில் ரியான் ரூத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புளோரிடாவில் உள்ள ஒரு கோல்ஃப் மைதானத்தில் 2024ஆம் ஆண்டு டொனால்டு ட்ரம்ப் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​ஒரு துப்பாக்கியுடன் ரியான் ரூத் (59) புதர்களில் கிட்டத்தட்ட 10 மணி நேரம் மறைந்திருந்ததாகவும், பின்னர் உளவுத்துறையினரால் அவர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் போது தனது தரப்பிலான வழக்கறிஞராக தானே செயல்பட்ட ரௌத், ட்ரம்ப்பால் நியமிக்கப்பட்ட நீதிபதியிடம் 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை கோரினார். ஆனால், ரூத்தின் குற்றங்கள் “அமெரிக்க ஜனநாயகத்தை சீர்குலைப்பதை” நோக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறிய அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள், ஆயுள் தண்டனையை பரிந்துரைத்திருந்தனர்.

வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி அய்லி கேனன், “ஒரு மனித உயிரைப் பறிப்பதற்காக நீங்கள் திட்டமிட்டு, ஒரு சதியில் ஈடுபட்டது எனக்குத் தெளிவாகத் தெரிகிறது” என்று தனது தீர்ப்பில் கூறினார்.

இந்தச் சம்பவம் செப்டம்பர் 15, 2024 அன்று புளோரிடாவின் வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள ட்ரம்ப் சர்வதேச கோல்ஃப் கிளப்பில் நடந்தது. இதற்கு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு, பென்சில்வேனியாவின் பட்லரில் நடந்த ஒரு பேரணியில் ட்ரம்பின் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சி சம்பவத்தில், மர்ம நபரின் துப்பாக்கி குண்டு ட்ரம்ப்பின் காதை உரசிச் சென்றது.

சம்பவம் நடந்த நாளுக்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு ரூத் புளோரிடாவுக்கு வந்து, ஒரு டிரக் நிறுத்தத்தில் தங்கியிருந்து, ட்ரம்பின் நடமாட்டம் மற்றும் பயண அட்டவணை குறித்த தகவல்களை சேகரிக்க முயன்றதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ட்ரம்ப்பைக் கொல்லும் நோக்கம் தனக்கு இல்லை என்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ரூத் தெரிவித்தார். மேலும், சிறையில் இருக்கும்போது உளவியல் சிகிச்சைக்கு உட்படுத்திக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில், ட்ரம்பைக் கொல்ல சதி செய்த குற்றச்சாட்டில் ரியான் ரூத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>ரியான் ரூத்</p></div>
‘இந்தியாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது’ - கச்சா எண்ணெய் விவகாரத்தில் ரஷ்யா கருத்து

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in