

கீவ்: செர்னோபில் அணு உலை விபத்தின் 40-வது ஆண்டு நினைவு தினம் வரும் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், செய்தி நிறுவனத்திடம் உக்ரைனின் தலைமை அரசு வழக்கறிஞர் ருஸ்லான் கிராவ்சென்கோ கூறியுள்ளதாவது: கடந்த 2024 ஜூலை முதல் உக்ரைன் மீது ரஷ்யா தீவிர ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. குறிப்பாக, செர்னோபில் அணு உலையின் கதிர்வீச்சு பாதுகாப்பு கவசத்துக்கு 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் குறைந்தது 92 ரஷ்ய ட்ரோன்கள் பறந்ததை எங்களது ரேடார்கள் கண்டறிந்துள்ளன.
உக்ரைனை அச்சுறுத்தவும், தீவிரவாதத்தை பரப்பவுமே அணு உலைகளுக்கு மேல் ரஷ்யா இதுபோன்று ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவி வருகிறது. கடந்த 1986-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி வெடித்துச் சிதறிய செர்னோபில்லின் 4-வது அணு உலையிலிருந்து கதிர்வீச்சு கசியாமல் தடுப்பதற்காக பிரம்மாண்ட பாதுகாப்பு கவசம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 பிப்ரவரியில் ட்ரோன் தாக்கியதில் இந்த கவசத்தின் உள் மற்றும் வெளி அடுக்குகளில் 6 மீட்டர் விட்டம் கொண்ட ஓட்டை ஒன்று விழுந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இது மீண்டும் ஒரு அணு உலை பேரழிவுக்கு வழிவகுக்கும். இவ்வாறு கிராவ்சென்கோ கூறியுள்ளார்.
இதுகுறித்து செர்னோபில் நிலைய இயக்குநர் செர்ஜி தாரகனோவ் கூறுகையில், "இந்தக் கட்டமைப்பின் அருகே ஏவுகணை விழுந்தால் அது ஒரு சிறிய நிலநடுக்கத்தையே ஏற்படுத்தும். இந்தப் பாதுகாப்பு கவசம் நிலைத்து நிற்கும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை" என எச்சரித்துள்ளார்.