

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்
மாஸ்கோ: உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல்களை நடத்துவோம் என்று ரஷ்யா பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. கடந்த வியாழக்கிழமை ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகே அமைந்துள்ள கச்சா எண்ணெய் கிடங்கு மீது ஒரே நேரத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட உக்ரைன் ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின. இதில் எண்ணெய் கிடங்கு முழுமையாக தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறும்போது, “மீண்டும் ஒரு தீவிரவாத தாக்குதலை உக்ரைன் நடத்தி உள்ளது. இதற்கு பதிலடியாக உக்ரைன் மீது மிகப்பெரிய தாக்குதல்களை நடத்துவோம். இந்த தாக்குதல்கள் உக்ரைன் படைகளை நிலைகுலையச் செய்யும்” என்று தெரிவித்தார்.
ரஷ்ய ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா நிதானத்தை கடைப்பிடித்து வருகிறது. உக்ரைனின் அத்துமீறல்கள் தொடர்ந்தால் அந்த நாட்டின் அனைத்து உள்கட்டமைப்புகளும் தரைமட்டமாக்கப்படும். முக்கிய சாலைகள், ரயில் பாதைகள், பாலங்கள், சுரங்கப்பாதைகள், ரயில் நிலையங்கள், விமானநிலையங்கள் தகர்க்கப்படும். அனைத்து முனைகளிலும் போரை தீவிரப்படுத்துவோம். உக்ரைன் மீது அலை, அலையாக தாக்குதல் நடத்தப்படும்.
இவ்வாறு ரஷ்ய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, “எங்கள் நகரங்கள் மீது தீவிர தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதற்கு பதிலடியாகவே ரஷ்ய தலைநகர் மாஸ்கோ உள்ளிட்ட நகரங்கள் மீது மிகப்பெரிய தாக்குதலை நடத்தி உள்ளோம். எங்களுக்கு ஆதரவு அளிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.