

வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர்நிறுத்தத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி, அமைதிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரான் குறித்து மீண்டும் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், “இந்த போர் ஈரானை முற்றிலும் பலவீனப்படுத்திவிட்டது. இனிமேல் அந்த நாட்டிற்கு என்று தனியாக விமானப் படையோ, கடற்படையோ, விமான எதிர்ப்புப் பாதுகாப்பு உபகரணங்களோ, ரேடார்களோ அல்லது வேறு எந்தப் பாதுகாப்பு அமைப்புகளுமே நடைமுறையில் கிடையாது" என்று ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். மேலும், நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது ஈரான் வலுவான நிலையில் இருப்பதாகக் கூறும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினரை “அவர்கள் எவ்வளவு முட்டாள்களாக இருக்க முடியும்?” என்று சாடியுள்ளார்.
மற்றொரு பதிவில், “நாங்கள் ஒன்றும் அவநம்பிக்கையில் ஈரானை சந்திக்கவில்லை, ஈரான் தான் தவிப்புடன் எங்களை நாடியது. அவர்கள் கதை முடிந்தது. அடுத்த 60 நாட்களுக்கான பேச்சுவார்த்தைக் காலத்தை நாங்கள் தொடர்வோம். ஆனால், அவர்களுக்கு ஒரு பைசா கூட நிதி நிவாரணமாகத் தரப்படாது” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்பந்தத்திற்காக அவநம்பிக்கையோடு காத்துக்கொண்டிருக்கிறார். அதற்காகவே அனைத்து விதமான அழுத்தங்களையும் பிரயோகித்தார்” என்று விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.