

தோஹா: வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கத்தாரின் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஏற்றுமதித் திறன் 17 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆண்டுக்கு சுமார் 20 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்படும் என கத்தார் எனர்ஜி நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், அந்நாட்டின் எரிசக்தித்துறை அமைச்சருமான சாத் அல்-காபி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: ஒரு சகோதர முஸ்லிம் நாடான ஈரானிடமிருந்து, அதுவும் இந்த புனிதமான ரமலான் மாதத்தில் இத்தகைய வேதனை மிகுந்த தாக்குதலை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இது ஒட்டுமொத்த பிராந்தியத்தின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது. போர் நிறுத்தம் ஏற்பட்டால் மட்டுமே மீண்டும் உற்பத்தியைத் தொடங்க முடியும்.
இந்தத் தாக்குதலில் கத்தாரில் சேதமடைந்த கட்டமைப்புகளைச் சீரமைக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும். இதனால் ஆண்டுக்கு 12.8 மில்லியன் டன் எரிவாயு விநியோகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் பெரும் எரிசக்தி தட்டுப்பாட்டை உருவாக்கும் என அஞ்சப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.