

மாஸ்கோ: மேற்காசியாவில் அமைதியை உறுதி செய்ய ரஷ்யா தயார் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி உடனான சந்திப்பில் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து தாக்குதல் மேற்கொண்டன. அதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க நேச நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதோடு ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில், ஏப்ரல் 8 அன்று அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. தற்போது அதை காலவரையின்றி அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நீட்டித்துள்ளார். இரண்டு தரப்பும் இது தொடர்பாக இறுதி உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இதில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருகிறது. பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க அமெரிக்காவுக்கு மூன்று நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது.
இந்தச் சூழலில் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ரஷ்யா பயணித்துள்ளார். அங்கு அந்நாட்டு அதிபர் புதினை அவர் சந்தித்தார். இந்தப் போரில் தங்களுக்கு ஆதரவாக ரஷ்யா இருப்பதற்கு புதினிடம் அரக்சி நன்றி தெரிவித்தார். “மேற்காசியாவில் அமைதியை விரைந்து உறுதி செய்ய எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட அனைத்தையும் செய்ய ரஷ்யா தயாராக உள்ளது” என்று அப்போது புதின் தெரிவித்துள்ளார். இதை ரஷ்ய அரசு செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளார்.