வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி தனது நல்ல நண்பர் என்றும், இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் ஏற்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு ட்ரம்ப், “பல ஆண்டுகளாக அமெரிக்காவை இந்தியா சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டது. அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா அதிக இறக்குமதி வரிகளை விதித்தது. ஆனால், அமெரிக்கா பதிலுக்கு எதையும் செய்யவில்லை. நிலைமை இப்போது தலைகீழாக மாறியுள்ளது.
இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதன் மூலம் தற்போது நாங்கள் அதிக பணம் சம்பாதிக்கிறோம். இந்தியாவுடன் நாங்கள் ஓர் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவோம். ஏனெனில் உங்கள் பிரதமரை எனக்குப் பிடிக்கும்.
ஒரு காலத்தில், தனது இரு சக்கர வாகனங்களை இந்தியாவுக்குள் விற்க முடியாத நிலையை புகழ்பெற்ற அமெரிக்க நிறுவனமான ஹார்லி - டேவிட்சன் எதிர்கொண்டது. ஏனெனில், இந்தியா 200% இறக்குமதி வரியை விதித்தது. இதனால், ஹார்லி - டேவிட்சன் நிறுவனத்தால் சந்தையில் நுழைய முடியவில்லை.
இதன் காரணமாக அந்த நிறுவனம் இந்தியாவுக்குள் தனது தொழிற்சாலையை அமைத்தது. அப்படி நடந்தது துரதிருஷ்டவசமானது. ஆனால் அது எனது ஆட்சிக்காலத்தில் நடக்கவில்லை. அதற்கு முன்பாக நடந்தது. அதேநேரத்தில் இந்திய நிறுவனங்கள், அமெரிக்காவில் மோட்டார் சைக்கிள்களை விற்றன. அதற்கு நாங்கள் எந்த இறக்குமதி வரியையும் விதிக்கவில்லை” என ட்ரம்ப் தெரிவித்தார்.