“இந்தியா உடனான உறவுகளை ரஷ்யா தொடர்ந்து விரிவுபடுத்தும்” - புதின் உறுதி

“இந்தியா உடனான உறவுகளை ரஷ்யா தொடர்ந்து விரிவுபடுத்தும்” - புதின் உறுதி
Updated on
2 min read

செயின்ட் பட்டர்ஸ்பர்க்: இந்தியா ஒரு நம்பகமான நட்பு நாடு என்றும், அதனுடனான உறவுகளை தங்கள் நாடு தொடர்ந்து விரிவுபடுத்தும் என்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உறுதிபட தெரிவித்துள்ளார்.

உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களின் தலைவர்களுடன் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கலந்துரையாடினார். அப்போது எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அதன் விவரம்:

“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் அதன் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையும் பாராட்டுக்குரியவை. இந்தியா உலகின் முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

மேலும், ஈர்க்கக்கூடிய அளவிலான பொருளாதார வளர்ச்சியை வெளிப்படுத்தி வருகிறது. இது திடீரென நிகழ்ந்த ஒன்றல்ல. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்திய அரசு மேற்கொண்டு வரும் கடின உழைப்பின் விளைவே இது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் வரும் ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற மைல்கல்லை எட்டும்.

ரஷ்யாவுடனான உறவை குறைத்துக்கொள்ளுமாறு இந்தியாவை மேற்கத்திய நாடுகள் வலியுறுத்துகின்றன. எனினும், இந்திய - ரஷ்ய உறவில் எந்தவித எதிர்மறையான விளைவுகளையும் நாங்கள் காணவில்லை. சில துறைகளில் ரஷ்யாவுடனான ஒத்துழைப்பை குறைத்துக்கொள்ள அமெரிக்கா அழுத்தம் கொடுக்க முயல்கிறது. ஆனால், உலகின் மிகப் பெரிய மக்கள் தொகையைக் கொண்ட நாடான இந்தியா மீது, பிரதமர் நரேந்திர மோடி மீது அழுத்தம் கொடுப்பது சர்வதேச உறவுகளுக்கும் இருதரப்பு உறவுகளுக்கும் தீங்கு விளைவிக்கும். இதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர்.

இந்தியாவுடனான ரஷ்யாவின் உறவில் எந்த தீவிரமான பாதிப்புகளும் ஏற்படவில்லை. இந்தியாவுடனான உறவுகளை நாங்கள் மேம்படுத்தி வருகிறோம். அதை தொடர்ந்து செய்வோம்.

இந்தியா தனது சொந்த தேசிய நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கும். அமெரிக்கா உடனான இந்தியாவின் தூதரக உறவுகள், ரஷ்யா உடனான அதன் நீண்டகால உறவுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்காது.

தனது தேச நலன்களுக்கு முக்கியமானதாகக் கருதும் அனைத்து நாடுகளுடைனும் இந்தியா தனது உறவுகளை வளர்த்துக் கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியா ஒரு நம்பகமான நட்பு நாடு. இந்தியா ஒரு சிறந்த ஜனநாயக நாடு. அதனுடனான உறவுகளை ரஷ்யா தொடர்ந்து விரிவுபடுத்தும்.

உக்ரைன் பிரச்சினைக்குத் தீர்வு காண ரஷ்யா தயாராக இருக்கிறது. ஆனால், இதற்கு உக்ரைன் இணங்க வேண்டும். அதற்கான பணியைத்தான் நாங்கள் இப்போது மேற்கொண்டு வருகிறோம்.

ரஷ்ய அதிபரின் பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. அவர்கள் தேர்தல் நடத்துவார்களா என்ற கேள்வியைத்தான் நாம் கேட்க வேண்டும். உக்ரைன் விவகாரத்தைப் பொறுத்தவரை அது உள்ளூர் விவகாரம். ஆனால், ஈரான் விவகாரம் ஒரு சர்வதேச பிரச்சினை. மேற்கு ஆசியாவில் பதற்றத்தைத் தணிக்க உதவும் எந்த ஒரு முடிவையும் ஆதரிக்க ரஷ்யா தயாராக இருக்கிறது” என்று விளாதிமிர் புதின் தெரிவித்தார்.

“இந்தியா உடனான உறவுகளை ரஷ்யா தொடர்ந்து விரிவுபடுத்தும்” - புதின் உறுதி
‘நீட் தேர்வை மீண்டும் எழுதும் துணிவு இல்லை’ - உயிரை மாய்த்துக் கொண்ட ம.பி. மாணவி கடிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in