பாகிஸ்தான் நிதி நெருக்கடிகள்: சோலார் சீதனமும், வீடியோ வியூஸுக்கு வரியும்!

பிரதிநிதித்துவப் படம்

பிரதிநிதித்துவப் படம்

Updated on: 
3 min read

பொருளாதாரச் சரிவின் விளிம்பில் நிற்கும் ஒரு நாடு, தன் மக்களைக் காப்பாற்ற வழியின்றித் தவிக்கும்போது என்னவெல்லாம் நடக்கும் என்பதற்கு இன்றைய பாகிஸ்தானே சாட்சி.

அடிப்படைத் தேவைகளான மின்சாரத்துக்கும் வாழ்வாதாரத்துக்கும் கூட போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டால் சாமானிய மக்கள் என்ன செய்வார்கள்? நாட்டின் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க யூடியூபர்கள், சோஷியல் மீடியா கிரியேட்டர்கள் என அனைவரையும் வரி வலையில் வீழ்த்தி வதைக்கிறது பாகிஸ்தான் அரசு.

கடுமையான மின் கட்டணத்தால் வாழ்வாதாரத்தை அரசு உறிஞ்சுவதற்கு அஞ்சி, தங்கத்தை விட சோலார் பேனல்களே தங்களின் எதிர்காலத்தைக் காப்பாற்றும் என திருமணச் சீதனமாகவே சோலார் தகடுகளை வழங்க மக்கள் தொடங்கிவிட்டனர்.

பாகிஸ்தான் அரசின் வரி வேட்டையும், சாமானிய மக்களின் சோலார் முன்னெடுப்பும் அந்நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பரிதாபத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

யூடியூப் வீடியோவுக்கு அதிகமாக லைக்ஸ் மற்றும் வியூஸ் வந்தாலும் அதற்கு வரி போட்டு அரசு பிழிந்தெடுக்கிறது. அரசின் கஜானாவை நிரப்ப மக்கள் மீது சுமத்தப்படும் இந்த வரிகளும், மக்களின் அவல நிலையும் ‘பாகிஸ்தான் எங்கே சென்று கொண்டிருக்கிறது?’ என்ற கேள்வியை எழுப்புகிறது.

சோலாருக்கு மாறுவது ஏன்?

பாகிஸ்தான் அரசு மிகப் பெரிய கடன் சுமையில் சிக்கியுள்ளது. சீனா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) போன்றவை வழங்கும் கடன்கள் மூலம்தான் அரசாங்கமே இயங்குகிறது. எரிபொருள் விலையும் சர்வதேச சந்தையில் கடுமையாக உயர்ந்துவிட்டதால், செலவைக் குறைக்கவும் மின்சாரச் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது.

பாகிஸ்தான் சூரிய ஆற்றல் பயன்பாட்டை நோக்கி மிக வேகமாக மாறி வருகிறது. இந்த மாற்றம் எந்த அளவுக்குச் சென்றுள்ளது என்றால், தற்போது திருமணங்களின்போது வரதட்சணையாக சோலார் தகடுகள் (Solar Panels) வழங்கப்படும் நிலைக்கு வந்துவிட்டது.

மின்சாரம் உற்பத்தி செய்யக் கடும் செலவாகிறது. கட்டணமும் அதற்கேற்ப மிக அதிகம். இதனால், சமாளிக்க முடியாத மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் சீரற்ற மின் விநியோகத்தைச் சமாளிக்க வீடுகளும், வணிக நிறுவனங்களும் சோலார் மின்சக்திக்கு மாறிவருகின்றன.

சீனாவின் உதவி

பாகிஸ்தான் மிக வேகமாக சூரிய ஒளி மின்சாரத்துக்கு மாறுவதற்கு மலிவான விலையில் சோலார் பேனல்கள் சீனாவில் இருந்து கிடைப்பது முக்கியக் காரணமாகும்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ‘2022-ம் ஆண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட அளவை விட சுமார் ஐந்து மடங்கு அதிகமாக, 2024-ம் ஆண்டில் 16.6 ஜிகாவாட் (GW) அளவிலான சூரியசக்தித் திறன் கொண்ட உபகரணங்களை பாகிஸ்தானுக்கு சீனா ஏற்றுமதி செய்துள்ளது. அதே காலகட்டத்தில், பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட சோலார் பேனல்களின் ஒரு வாட் திறனுக்கான சராசரி விலை 54 சதவீதம் குறைந்துள்ளது.

2026-ஆம் ஆண்டிலும் இந்த இறக்குமதி தொடர்ந்தது. பாகிஸ்தான் ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் 6.78 ஜிகாவாட் சோலார் பேனல்களை இறக்குமதி செய்திருக்கிறது. இதன்மூலம், 2025 மற்றும் 2026-ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களுக்கான மொத்த இறக்குமதி 28.2 ஜிகாவாட்டாக உயர்ந்தது’ என தெரிவித்துள்ளது.

2018-ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் சூரிய ஒளி மின்தகடுகள் இறக்குமதி 1 ஜிகாவாட்டுக்கும் குறைவாக இருந்த நிலையில், 2026-ஆம் ஆண்டில் 51 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் இறக்குமதியைத் தவிர்க்கும் வகையில் சூரிய ஒளி மின்சாரத்துக்கு மாறி வருகிறது பாகிஸ்தான். 2026 பிப்ரவரியிலிருந்து ஏறக்குறைய 12 பில்லியன் டாலர் கச்சா எண்ணெய் இறக்குமதியை பாகிஸ்தான் தவிர்த்துள்ளது.

மக்கள் மனதில் மாற்றம் ஏன்?

பாகிஸ்தான் அரசு கடுமையான மின் கட்டண உயர்வை அமல்படுத்தியதால்தான் மக்கள் வேறு எரிசக்திக்குத் தங்களை மாற்றத் தொடங்கினர். வழக்கமான மின் கட்டணத்தில் இருந்து கால்பங்கு கூடுதலாக மக்கள் புதிய மின் கட்டணத்தின்படி செலுத்த வேண்டிய நிலை, அவர்களைக் கடுமையான கடன் சுமையில் தள்ளியது.

2021-ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் 4 சதவீதமாக இருந்த சூரிய மின்சக்தியின் பங்கு, 2024-ஆம் ஆண்டில் மொத்த மின் விநியோகத்தில் 14 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்தது. 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத் தகவலின்படி, பாகிஸ்தானில் உள்ள சுமார் கால்வாசி குடும்பங்கள் சூரிய மின்சக்திக்கு மாறிவிட்டனர் என்று அல்ஜசீரா செய்தி தெரிவிக்கிறது.

யூடியூப் லைக்ஸுக்கு வரி!

இதனிடையே, பாகிஸ்தானில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. யூடியூப்பர்களின் வருமானம் கணக்கில் வராததால், அவர்களின் வருமானத்துக்கு வரி விதிக்கும் புதிய முறையைக் கொண்டு வந்திருக்கிறது பாகிஸ்தான் அரசு. அதன் விவரம்:

வங்கி மூலம் 5% பிடித்தம்:

யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற தளங்களில் இருந்து கிரியேட்டர்களின் வங்கி கணக்குகளுக்கு வரும் வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைகளில் 5 சதவீதத்தை வங்கிகளே நேரடியாக வரியாகப் பிடித்துக் கொள்ளும்.

வியூவ்ஸ், லைக்ஸ்க்கு வரி:

யூடியூப் போன்ற தளங்களில் ஒவ்வொரு 1,000 பார்வைகள் / லைக்குகளுக்கு ரூ.195 தொகையை அடிப்படை வருமானமாகக் கணக்கிடும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது, பாகிஸ்தான் மத்திய வருவாய்த் துறை (FBR).

1,000 லைக்குகளுக்கும் ரூ.195 வருவாயாகக் கிடைக்கிறது எனில், இதில் 30% செலவுக் கணக்காகக் கழித்தால், மீதமுள்ள 70% வருவாய்க்கு வரி செலுத்த வேண்டும். இந்த வரி விகிதம் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் ஆகியவற்றுக்கும் பொருந்தும் என்று பாகிஸ்தான் வருவாய் துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு பிடிபட்ட 5% வரியானது ‘குறைந்தபட்ச வரி’யாக (Minimum Tax) கருதப்படும். ஒருவேளை கிரியேட்டர் தனது உண்மையான வருமானம் மற்றும் செலவுக் கணக்குகளைச் சமர்ப்பித்து வரி குறைவாக வருகிறது எனக் காட்டினாலும், பிடிபட்ட 5% வரித் தொகையை அரசாங்கம் திரும்பத் தராது.

பாகிஸ்தான் பார்வையாளர்களைக் கவரும் வண்ணம் கன்டென்ட் உருவாக்கும் வெளிநாடுகளில் வாழும் கிரியேட்டர்களுக்கும் குறிப்பிட்ட வரம்பைத் தாண்டும்போது இந்த வரி பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் மட்டும் 1.40 லட்சம் யூடியூப் சேனல்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

<div class="paragraphs"><p>பிரதிநிதித்துவப் படம்</p></div>
அமெரிக்க அரசின் கிரீன் கார்டு ‘கறார்’ - டிசிஎஸ் முதல் இன்போசிஸ் வரை பாதிப்பு என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in