

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்
பியாங்யாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு ஏதாவது நேர்ந்தால், எதிரி நாடுகள் மீது தானாகவே அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்று அந்த நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது வடகொரியாவின் ‘டெட் ஹேண்ட்' என்றழைக்கப்படுகிறது.
கடந்த 1980-களில் சோவியத் யூனியன் (ரஷ்யா) ‘டெட் ஹேண்ட்' என்ற அணு ஆயுத கட்டளை அமைப்பை உருவாக்கியது. எதிரி நாடுகளின் அணு ஆயுத தாக்குதலால் ரஷ்யா அழிந்து, அதன் தலைவர்கள் உயிரிழந்தால் ‘டெட் ஹேண்ட்' தானாக செயல்பட்டு எதிரி நாடுகள் மீது அணு ஆயுத தாக்குதல்களை நடத்தும். இந்த ‘டெட் ஹேண்ட்' அணு ஆயுத கட்டளை அமைப்பை தற்போதைய ரஷ்ய அரசு நவீன தொழில்நுட்பத்துடன் புதுப்பித்து வைத்திருக்கிறது. இதே பாணியில் வடகொரியாவும் ‘டெட் ஹேண்ட்' அமைப்பை உருவாக்கி உள்ளது. இதுகுறித்து சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் கூறியதாவது:
வடகொரியாவின் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதன்படி பாதுகாப்பு சார்ந்த சட்டங்களிலும் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக ரஷ்யாவை பின்பற்றி வடகொரியாவிலும் ‘டெட் ஹேண்ட்' அணு ஆயுத கட்டளை அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. எதிரி நாடுகளின் தாக்குதலில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு ஏதாவது நேர்ந்தால் ‘டெட் ஹேண்ட்' அமைப்பு தானாக செயல்பட்டு, எதிரி நாடுகளின் மீது அணு ஆயுத தாக்குதல்கள் நடத்தப்படும்.
அமெரிக்கா, ஈரான் போர், வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ சிறைபிடிக்கப்பட்டது ஆகியவற்றை கருத்தில் கொண்டு ‘டெட் ஹேண்ட்' அமைப்பு உருவாக்கப்பட்டிருப்பதாக வடகொரியா விளக்கம் அளித்திருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.
ஒருவேளை அதிபர் கிம் ஜாங் உன்னின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ‘டெட் ஹேண்ட்' அமைப்பால் தென்கொரியாவுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். வடகொரியாவின் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஹ்வாசாங் ரக ஏவுகணைகள் சுமார் 15,000 கிமீ. தொலைவு சீறிப் பாயக்கூடியவை என்று கூறப்படுகிறது. இதனால் வெகுதொலைவில் உள்ள அமெரிக்காவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படும். இவ்வாறு சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.