

ஹைதராபாத்: மேற்காசிய போர் சூழல் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எரிபொருள் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுமாறு நாட்டு மக்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார்.
அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. அதன் எதிரொலியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை சில நாடுகளில் உயர்ந்துள்ளது. இந்தியாவில் சில தனியார் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி உள்ளன. எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: கரோனா பெருந்தொற்று காலத்தில் வீட்டில் இருந்து பணியாற்றுவது, ஆன்லைனில் ஆலோசனை கூட்டம் நடத்துவது போன்ற நடைமுறைக்கு நாம் பழகிக் கொண்டோம். தற்போது மீண்டும் அதை நாம் நம் தேசத்தின் நலன் கருதி பின்பற்ற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. அது இன்றைய காலத்தின் கட்டாயமும் கூட. இதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள முடியும்.
பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை உலக அளவில் விலை உயர்ந்துள்ளது. இத்தகைய சூழலில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்காகச் செலவிடப்படும் அந்நியச் செலாவணியை, பெட்ரோல் மற்றும் டீசலைச் சேமிப்பதன் மூலம் அதை மிச்சப்படுத்துவது நம் எல்லோரது பொறுப்பாகும். இதே நிலைதான் சமையல் எண்ணெய்க்கும் உள்ளது. அதன் பயன்பாட்டை நாம் குறைத்துக் கொள்ள வேண்டி உள்ளது. இது தேசபக்திக்கு சிறந்தவொரு பங்களிப்பாக இருக்கும். மேலும், இது நமது குடும்பம் ஆரோக்கிய ரீதியாவும், தேசத்துக்கு பொருளாதார ரீதியாகவும் நலன் சேர்க்கும்.
அதேபோல அடுத்த ஓராண்டு காலத்துக்கு திருமணம் உள்ளிட்டவற்றுக்கு தங்கம் வாங்குவதை மக்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். தங்கத்தை அதிகளவில் இறக்குமதி செய்வதால் அதிலும் நாம் அந்நிய செலவாணியை அதிகம் செலவிடுகிறோம்.
வேளாண்துறையில் ரசாயன உரங்கள் வாங்க அதிகளவில் அந்நியச் செலாவணியை பயன்படுத்துகிறோம். அதன் மூலம் பெரிய அளவில் வெளிநாடுகளில் இருந்து உரங்களை இறக்குமதி செய்கிறோம். அதை பாதி அளவிலாவது குறைத்துக் கொள்ள வேண்டும். இயற்கை முறை விவசாயத்துக்கும் மாற வேண்டும். இதன் மூலம் பூமாதேவியை நாம் பாதுகாக்க முடியும் என தெரிவித்தார்.
மேற்காசிய போர் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள காரணத்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 126 அமெரிக்க டாலர் என்ற விலையை எட்டி உள்ளது. இதன் தாக்கம் எரிபொருள் விலையில் உலக அளவில் எதிரொலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.