நேபாள வெள்ள உயிரிழப்பு 750 ஆக அதிகரிப்பு: 3000 பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ள உயிரிழப்பு 750 ஆக அதிகரிப்பு: 3000 பேரை தேடும் பணி தீவிரம்
Updated on
1 min read

காத்மாண்டு: நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஞாயிற்றுக் கிழமை நிலவரப்படி 750 ஆக அதிகரித்துள்ளது. இந்தப் பேரிடர் நிகழ்ந்து 5 நாட்கள் ஆன நிலையில் 3000 பேரை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியெங்கும் சேறும் சகதியும், குப்பைகள் குவிந்து கிடக்க மீட்புப் பணி மிகப்பெரிய சவாலாகவே அமைந்துள்ளது. அதேபோல் மீட்கப்பட்டவர்களுக்கும் போதுமான உதவிகள் சென்று சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த சாலைகள், பாலங்கள் மீட்பு, நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு கொண்டு செல்வதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ரசுவா, நுவாகோட், தடிங், சித்வான் ஆகிய பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

287 இந்தியர்கள் மாயம்: இந்திய வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சீனாவின் திபெத் பகுதியில் சிக்கித் தவித்த 120 பேர் பத்திரமாக நேபாள பகுதிக்கு வந்துள்ளனர். அங்கிருந்து அவர்கள் விரைவில் இந்தியாவுக்குத் திரும்புவார்கள். நேபாளத்தில் இதுவரை 88 இந்தியர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். 287 இந்தியர்களைக் காணவில்லை. மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 128 இந்திய வம்சாவளியினரையும் காணவில்லை" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2 பனிமலை ஏரி: இமயமலையின் லாங்டாங் லிருங் சிகரத்தில் உருவான பனிமலை ஏரி உடைந்ததால் கடந்த 26-ம் தேதி நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்டது. கடந்த 27-ம் தேதி அதே பகுதியில் மற்றொரு பனிமலை ஏரி உடைந்து மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட்டது. தற்போது லாங்டாங் லிருங் சிகர பகுதிகளில் புதிதாக 2 பனிமலை ஏரிகள் உருவாகி உள்ளன.

இதில் ஒரு ஏரி நிரம்பி தண்ணீர் வெளியேறி கொண்டிருக்கிறது. மற்றொரு ஏரி வேகமாக நிரம்பிக் கொண்டிருக்கிறது. இந்த 2 பனிமலை ஏரிகளின் மீது மிகப்பெரிய பனிப்பாறைகள் விழுந்தால் ஏரிகள் உடைந்து மீண்டும் நேபாள நதிகளில் பெருவெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாகச் சீன, நேபாள புவியியல் வல்லுநர்கள் 2 ஏரிகளின் நிலவரத்தைச் செயற்கைக்கோள்கள் மூலம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

4வது விமானம்:

இதற்கிடையில், 11 டன் நிவாரண பொருட்களுடன் இந்திய ராணுவத்தின் 4வது விமானம் காத்மாண்டு சென்றடைந்தது. அதில், தேடல் மற்றும் மீட்பு உபகரணங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், சுரங்க மீட்பு பணிக்கான தொழில்நுட்பக் குழுவையும் இந்தியா அனுப்பிவைத்துள்ளது.

ஏற்கெனவே, நேபாள போலீஸ், ராணுவத்தைச் சேர்ந்த 14,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இரவு, பகலாக மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் உணவு பொட்டலங்கள், குடிநீர் பாட்டில்கள் விநியோகிக்கப்படுகின்றன.

நேபாள வெள்ள உயிரிழப்பு 750 ஆக அதிகரிப்பு: 3000 பேரை தேடும் பணி தீவிரம்
Are You There God? It's Me, Margaret. - கடவுளை நோக்கிய மார்கரெட்டின் கேள்விகள் | திரை தேவதைகள் 33

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in