Are You There God? It's Me, Margaret. - கடவுளை நோக்கிய மார்கரெட்டின் கேள்விகள் | திரை தேவதைகள் 33

Are You There God? It's Me, Margaret. - கடவுளை நோக்கிய மார்கரெட்டின் கேள்விகள் | திரை தேவதைகள் 33
Updated on
7 min read

1926-ல் வெளியான கலீல் கிப்ரானின் ‘மணலும் நுரையும்’ (Sand and Foam) புத்தகத்தில், “சந்தேகம் என்பது தனிமையான ஒரு வலி. நம்பிக்கை தான் தன் இரட்டைச் சகோதரன் என்று அது அறியாது” என்றொரு பொன்மொழி இடம்பெற்றிருக்கும்.

மேலோட்டமாகப் பார்த்தால் கொட்டிக் கிடக்கும் பொன்மொழிகளில் இதுவும் ஒன்று. சிந்தையில் ஆழ்ந்து அசைபோட்டால், இதுவொரு தத்துவம். ஆம், சந்தேகம் இல்லாமல் நம்பிக்கை பிறக்காதுதானே!

சந்தேகம் கேள்விகளைத் தூண்டும். கேள்விகள் விடை தேடி பயணிக்க வைக்கும். அந்தத் தேடலில் இரண்டு பதில்கள் மட்டுமே கிடைக்கும். ஒன்று ஆம், இன்னொன்று இல்லை. இந்த இரண்டு ஆப்ஷன்களில் நமக்கானது எதுவென்பதைத் தீர்மானிப்பதற்காவது நாம் சந்தேகப்பட வேண்டும்.

சந்தேகம் என்று இங்கு நான் குறிப்பிடுவது, நேர்மறையான அர்த்தத்தில். ஓர் உண்மையை அறியும் நோக்கில் ஆக்கபூர்வமாக கேள்வி கேட்பதையே சந்தேகம் என்று குறிப்பிடுகிறேன்.

அப்படியொரு சிறுமி சந்தேகப்படுகிறாள். ‘கடவுளே, நீங்கள் இருக்கிறீர்களா? நான்தான் மார்கரெட்’ என்று சதா சர்வகாலம் கடவுளை நோக்கி கேள்வி கேட்கிறாள். அவளுடைய சந்தேகத்தில் பிறந்த கேள்விகள். அதற்கான பதிலைத் தேடுகையில் அவளுக்குக் கிடைத்த அனுபவங்கள், புரிதல்கள், பாடங்கள் எல்லாம் சேர்ந்தது தான் 2023-ல் வெளியான Are You There God? It's Me, Margaret. படத்தின் சாராம்சம். இதுவொரு கமிங் ஆஃப் ஏஜ் காமெடி டிராமா ஜானர் அமெரிக்க திரைப்படம்.

திரை தேவதைகள் தொடரின் மூலம் யுவதி ‘Bad Girl’ ரம்யா, பேரிளம் பெண் ‘Good Luck to You, Leo Grande’ நான்சியும் பலருக்கும் பரிச்சயமாகி இருக்கலாம். அந்த வரிசையில் குட்டி தேவதையான மார்கரெட் சைமனையும் வாசகர்கள் பார்வையில் நிறுத்தவேண்டியது எனது தார்மிக பொறுப்பு என்று தோன்றவே, Are You There God? It's Me, Margaret. ஓர் அத்தியாயமாக இணைந்திருக்கிறது.

அத்தியாயத்தை ஒரு டிஸ்க்ளைமருடன் தொடங்க விரும்புகிறேன். கடவுள் இருக்கிறார், இல்லை என்று நிறுவவேண்டும் என்ற முயற்சியும், உள்நோக்கமும் இதன் பின்னணியில் இல்லை என்பதை கூறிக் கொண்டு கதைக்குள் அழைத்துச் செல்கிறேன். கதைக்களம் 1970-களில் நடப்பதுபோல் அமைக்கப்பட்டுள்ளது.

ஒரு குழந்தை பிறக்கும்போது அதன் மனதுக்குள் சாதி, மதம், கடவுள் நம்பிக்கை உள்ளிட்ட எந்த சிந்தனைகளும், அது சார்ந்த விருப்பு வெறுப்புகளும் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அதே குழந்தை வளர வளர பெற்றோர், குடும்பம், உற்றார் உறவினர், கல்வி நிலையம், நண்பர்கள் என பல்வேறு புறக்காரணிகளும் அக்குழந்தையை பல்வேறு குழுக்களில் பொருத்தி விடுகிறது.

யோசித்துப் பார்த்தால் ஒரு வெற்றுப் பலகையாக இருக்கும் குழந்தைகள் மீது அது பிறந்த சமூகம்தான் நீ இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர், யூதர்... (இன்னும் பிற மதங்கள்), உன் வர்ணம் இது, உன் குலம் இது, உன் கோத்திரம் இது என்று எழுதுகிறது.

தான் யார் என்று ஒரு குழந்தை அறிந்துகொள்ள தொடங்குவதற்கு முன்னரே அதன் தலையில் பல அடையாளங்கள் குவிந்து, பின்னாளில் அதன் வாழ்வில் ஆதிக்கம் செலுத்தவும் தொடங்கிவிடும்.

11 வயதான மார்கரெட் சைமனுக்கு வயதுக் கோளாறுகள் ஒருபுறம் அழுத்தம் தர, மதம் எனும் அழுத்தம் மறுபுறம் சுமத்தப்பட, அவளது மனப் போராட்டங்கள் மூலம் வளரிளம் பருவத்தினரின் சிக்கலகளை அழகாக, ஆழமாக அதே நேரத்தில் நகைச்சுவை ததும்ப பேசியிருக்கிறது இப்படம். நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

நியூயார்க் நகரில் ஒரு வசதி படைத்த குடும்பத்தில், அப்பா, அம்மா, பாட்டியுடன் வாழ்கிறாள் மார்கரெட். தந்தை ஹெர்ப் யூதர். தாய் பார்பரா ஒரு கிறிஸ்துவப் பெண். காதலால் இணைந்து, காதல் குறையாமல் கைகோத்து வாழும் தம்பதி.

இருவரும் வெவ்வேறு மதம் என்பதால், பெற்றோர் செல்ல மகள் மார்கரெட் சைமனுக்கு மதத்தை அறிமுகம் செய்யவில்லை. மாறாக, அவள் 18 வயதை எட்டும்போது அவளே அதை முடிவு செய்துகொள்ளட்டும் என விடுகிறார்கள்.

சிலர் வெறும் பகட்டுக்காக அப்படிச் சொல்லிவிட்டு, இது நம் கலாச்சாரம், பாரம்பரியம், குடும்பப் பழக்கம் என்று ஒருவழியாக தாங்கள் பின்பற்றும் நம்பிக்கைக்குள் குழந்தைகளை வளைத்துப் போடுவதுபோல் மார்கரெட்டை அவள் பெற்றோர் வற்புறுத்தவில்லை.

மகிழ்ச்சிக்கு குறைவில்லாது வாழும் மார்கரெட்டுக்கு தனக்குப் பிடித்த நியூயார்க் நகரைவிட்டுப் போக மனமில்லை. அப்போதுதான் முதன்முதலில் மார்கரெட் கடவுளைக் கூப்பிடுகிறாள், “கடவுளே நீங்க இருக்கிறீங்களா? நான்தான் மார்கரெட்.” என்று அழைத்து, “எனக்கு நியூயார்க்கைவிட்டு, பாட்டியை விட்டு எங்கும் செல்ல வேண்டாம்” என்று புலம்புகிறாள். ஆனால் தந்தையின் வேலை நிமித்தமாக நியூஜெர்சிக்கு குடிபெயர்ந்தே விடுகின்றனர்.

உங்களுடைய புலம்பலை முன்முடிவின்றி, மகிழ்ச்சியை பொறாமையின்றி உள்வாங்கிக் கொள்ளும் ஒரு நபரை நீங்கள் உங்கள் வாழ்வில் சம்பாதித்திருந்தால் அவள் அல்லது அவர் கடவுளே!

மார்கரெட்டுக்கும் கடவுள் அப்படியானவர் என்றுதான் தோன்றியதுபோல. அவள் எதற்கெல்லாம் கடவுளைக் கூப்பிடுகிறாள் என்று கதையின் போக்கில் வெளிப்படுகையில் நீங்கள் சரியாக இந்தக் கருத்தை அத்துடன் முடிச்சுப் போட்டுப் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.

புது இடத்தில் மார்கரெட்டுக்கு புதிய நட்பு வட்டம் கிட்டுகிறது. உலக சுகாதார நிறுவனக் கூற்றின்படி 10-ல் இருந்து 19 வயது வரையில் வளரிளம் பருவம். குழந்தைப் பருவ குறும்புகளில் இருந்து முதிர்சியான மனநிலைக்குள் பயணிக்கக் கூடிய அந்தப் பருவத்தில் உடல் சார்ந்து, மனம் சார்ந்து பல்வேறு கேள்விகளும், பயமும், போராட்டமும் எழும்.

ஒரு குழந்தைக்கு அன்பான குடும்பமும், வறுமையில்லா சூழலையும் விட சிறந்த நலன் வேறேதும் இருந்துவிட முடியாது.

உடலும், மனமும் போராட்டமாகும்போது மார்கரெட்டின் குடும்பம் அவளுக்கு தேவைப்படும் இடங்களில் எல்லாம் சிறந்த வடிகாலாக இருக்கிறது.

ஆனாலும், பெற்றவர்கள், வீட்டில் உள்ள நம்பிக்கைக்குரிய பெரியவர்கள் எல்லோருமே வயதிலும், உருவத்திலும் தன்னைவிட பெரியவர்கள். இந்தத் தடைதான் வளரிளம் பருவத்தினரை பெரிதும் தங்கள் வயது ஒத்தவர்களிடமே தங்களின் வினாக்களை முன்வைக்கத் தூண்டுகிறது.

இருந்தாலும், மேலைநாடுகளில் ஒரு இன்ச் சுதந்திரமும், விழிப்புணர்வும் அதிகமாகத்தான் இருக்கிறது என்று சொல்ல வேண்டும். இந்தப் படத்தில் அதை உறுதிப்படுத்தும் காட்சிகள் நிறையவே இருக்கின்றன. உதாரணத்துக்கு ஒரு காட்சியைச் சொல்லலாம்.

மார்கரெட் சைமனுக்கும், அவளுடைய தோழிகளுக்கும் தங்கள் வகுப்புத் தோழி லாராவைப் போல் மார்பகங்கள் வளர்ந்து காணப்பட வேண்டும் என்று ஆர்வ மிகுதி. அதற்காக பிரா வாங்கிக் கொள்ள திட்டமிடுகிறார்கள்.

அதை தாயிடம் சொல்கிறாள் மார்கரெட். அந்தக் கேள்வியை மிக நேர்த்தியாகக் கையாள்வதோடு, மார்கரெட்டை கடைக்கு அழைத்துச் சென்று அவளுக்கு இப்போது ப்ரா தேவையில்லை, மார்பக வளர்ச்சி ஏற்படும்போது அணியக்கூடிய பிகினர் / க்ரோ ப்ரா போதும் என்பதை கடைக்காரப் பெண்மணி வாயிலாக புரியவைக்கும் காட்சியைப் பார்த்தபோது அது வளரிளம் பருவப் பெண்கள் வைத்துள்ள தாய்மார்களுக்கு நல்லதொரு ரெஃபரன்ஸ் எனத் தோன்றியது.

தோழி வீட்டில் மார்கரெட் அண்ட் குழுவினர், அனாடமி புத்தகத்தில் ஆண் உறுப்பு வரைபடத்தை பார்த்து சிரித்துக் கொள்வதும், தங்களது மார்பகங்கள் வேகமாக வளர உடற்பயிற்சி (அப்படியொன்று இல்லை) செய்வதும், தங்களுக்கு எப்போது மாதவிடாய் வரும் என்று பேசிக் கொள்வதும், சானிடரி பேட்களை வாங்கி அதை எப்படிப் பயன்படுத்துவது என்று சோதித்துப் பார்ப்பதும், தங்களுக்குப் பிடித்த பையன்களின் பெயர்களை பட்டியலிடுவதும், முத்தம் பற்றிப் பேசிக் கொள்வதும் வளரிளம் பருவத்தினரின் இயல்பின் பிரதி.

அதை அக்குழந்தைகளைக் குற்றவாளியாக்காமல், குறும்புத்தனம் கலந்து காட்சிகளாக்கியது, வளரிளம் பருவ பெற்றோருக்கு தங்களின் பிள்ளைகளின் மனநிலையை, எதிர்பார்ப்பை புரிந்துகொள்ள உதவியாக வடிவமைத்தது சிறப்பு.

பள்ளிகளில் இனப்பெருக்கம் மற்றும் பாலியல் கல்வி பாடங்கள் புறக்கணிக்கப்படுவது இன்றளவும்கூட இருக்கத்தான் செய்கிறது. இந்தப் படத்திலும் கூட மார்கரெட்டின் பள்ளியில் மாதவிடாய் சுழற்சி குறித்து விளக்க வீடியோ காட்டப்படுகிறது. ஆனால் அப்போது அதைப் பற்றி பேச அங்கு யாருமில்லை. ஆசிரியர் வெளியில் சென்றுவிடுகிறார்.

இந்த மாதிரியான தயக்கநிலைதான், அரைகுறையாக, தவறாக விஷயங்களைப் புரிந்துகொள்ளும் ஆபத்துக்குள் தள்ளுகிறது.

இந்தப் படம் 1970-களில் நடப்பதுபோன்ற கதை. நிச்சயமாக இன்றைக்கு மேலைநாடுகளில் இதுபோன்ற விஷயங்களில் பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது இங்கு நம் நாட்டில் இருப்பதைவிட ஒப்பீட்டளவில் மேம்பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

பள்ளிகளில் இனப்பெருக்கம் பற்றிய பாடங்களைப் புறக்கணிக்காமல் நடத்துவதிலிருந்து அதைத் தொடங்கலாம்.

வளரிளம் பருவக் குழந்தைகளுக்கு சின்னச் சின்ன பிரச்சினைகள் கூட ரோலர் கோஸ்டர் துயரங்கள் தான். உதாரணத்துக்கு தனது தோழி நான்சி வீலர், தான் பூப்பெய்திவிட்டதாக போஸ்ட் அனுப்ப, அது மார்கரெட்டை நிலைகுலையச் செய்கிறது.

“கடவுளே நீங்க இருக்கீங்களா? நான் தான் மார்கரெட்.” என்று புலம்பித் தீர்க்கிறாள்.

தன்னைத் தூய்மையாகப் பேணுவதில் தொடங்கி, ஆண்கள் மற்றும் பெண்களின் உடல் வளர்ச்சி, மாதவிடாய் சுகாதாரம், வளரிளம் பருவத்தில் மனதில் எழும் எண்ண அலைகள், அந்த உணர்வுகளைச் சரியாகக் கையாளத் தெரியாவிட்டால் ஏற்படக்கூடிய உடல் மற்றும் மனநலப் பாதிப்புகள் என அனைத்தைப் பற்றியும் அவர்கள் தங்களுக்குள் சுதந்திரமாகப் பேசிக்கொள்வது இயல்பானதாக இருந்தாலும், அதுவே முழுமையான சரியான வழியாகிவிடாது. அந்தத் தருணத்தில், “நான் இருக்கிறேன், உங்களுக்கு உதவுகிறேன்” என்று அன்புடன் கைபிடித்து வழிகாட்டக்கூடிய பெரியவர்களின் அரவணைப்பும், தெளிவான வழிகாட்டுதலும் மிகவும் அவசியம்.

மார்கரெட்டின் கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைக்கவுமில்லை, அவள் வேண்டுதல்களும் நிறைவேறவில்லை. அந்தச் சமயத்தில்தான் மார்கரெட் பள்ளிக் கூடத்தில் அவளுக்கு வாத்தியார் பெனடிக்ட் ப்ராஜக்ட் ஒன்றைக் கொடுக்கிறார். மதம் பற்றி அவளை உணர்ந்து எழுதச் சொல்கிறார்.

வாத்தியாருக்கும் மார்கரெட்டுக்கும் இடையேயான உரையாடல் கூட, ஒரு குழந்தை மதத்தை ஏற்க மறுக்கிறது என்றால், அதற்கு எப்படியாவது அதை நாசுக்காக அறிமுகப்படுத்தலாமே என்ற சமூகப் பதற்றத்தின் வெளிப்பாடகவே எனக்குத் தோன்றியது.

தன் தாய் ஒரு யூதரை திருமணம் செய்து கொண்டதற்காக பெற்றோரால் புறக்கணிக்கப்பட்டபோது மார்கரெட் கடவுளைக் கூப்பிடுவாள். பாட்டி வீட்டுக்குத் தனியாகப் போகும்போது பதற்றமாகும் அவள், பின்னிருக்கையில் அமர்ந்திருக்கும் கன்னியாஸ்திரிகளைக் கண்டு ஆசுவாசமடைந்து கடவுளுக்கு நன்றி சொல்வாள்.

கேள்வி கேட்க, சலித்துக் கொள்ள, நொந்து கொள்ள, கோபத்தைக் கொட்ட, ஆசுவாசம் அடைய அவ்வப்போது அவளுக்கு கடவுள் தேவைப்படுவார்.

கடவுளைப் பின்பற்றும் பலருக்குமே இப்படி டீல் செய்வதற்காகத் தான், அதுவும் தனது செயால்பாட்டுக்கு ரியாக்ட் செய்யாமல் இருக்கவே கடவுள் தேவைப்படுகிறார் போல என்ற சந்தேகம் மார்கரெட்டை பார்க்கும்போது எனக்குள் எழுந்தது.

வாத்தியார் கொடுத்த ப்ராஜக்ட்டுக்குப் பின்னர், Are You There God? It's Me, Margaret. என்று புலம்பிக் கொண்டிருந்த மார்கரெட், மதத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள பாட்டி வீட்டுக்குப் புறப்படுகிறாள். பாட்டியிடம் நான் உங்களுடன் கோயிலுக்கு (யூத கோயில்) வரலாமா என்று கேட்ட தருணத்தில் அவளது பாட்டிக்கு அத்தனை துள்ளல் ஏற்படுகிறது. குடும்பப் பாரம்பரியத்துக்குள் பேத்தி ஐக்கியமாகிவிட்டாள் என்று அடுத்த நாளே கூட்டிச் செல்கிறார்.

நமக்குப் புரியாதபடி யாரேனும் ஏதாவது சொன்னால், ஏதோ லத்தீன், ஹீப்ரூ மாதிரி இருக்கிறது என்று சொல்லிக் கொள்வோம் அல்லவா? மார்கரெட் அங்கே கேட்ட முதல் மதம் சார்ந்த பிரசங்கமே ஹீப்ரு மொழியில்தான் நடக்கிறது. எதுவும் புரியாது, தன் கேள்விக்கும் விடை ஏதும் கிடைக்காது ஊர் திரும்பும் மார்கரெட் தேவாலயத்துக்கு செல்கிறாள். கிறிஸ்துமஸ் பிரசங்கம் அவளுக்குள் இன்னும் பல கேள்விகளை உருவாக்குகிறது. இப்போது நான் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற குழப்பமும் ஒட்டிக் கொள்கிறது.

அப்போதுதான் மார்கரெட் வாழ்வில் ஒரு திருப்புமுனை சம்பவம் நிகழ்கிறது.

‘தவறுக்கு துணிந்த மனிதன் அழுவதில்லையே’ என்றொரு தமிழ்த் திரைப்படல் பாடல் வரி உண்டு. மனிதர்கள் தவறு செய்யும்போது மனதில் வருந்த வேண்டும். வருந்தாத மனங்கள் தான் திருந்தாமல் மீண்டும் மீண்டும் தப்பு செய்யும், தப்பு நாளடைவில் குற்றங்களாக மாறும்.

அந்த வகையில் தன் வகுப்பில் எல்லோரைவிடவும் வயதுக்கு மீறிய உடல் வளர்ச்சி இருப்பதாலேயே தொந்தரவு செய்யப்படும் லாராவின் துயரங்களை அறியும்போது மார்கரெட் மனதுக்குள் வருந்துகிறாள். லாராவின் வழியில் தன் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க தேவாலயத்தின் கன்ஃபெஷன் கூண்டுக்குள் செல்லும் அவளால், நான் தவறு செய்துவிட்டேன் என்பதைத் தாண்டி வேறேதுவும் சொல்லத் தோன்றாமல் ஓடிவிடுகிறாள். மதப் பிரசங்கமும், மதக் கட்டமைப்பும் அவளுக்கு ஆசுவாசத்தைத் தரவில்லை.

ஆனால், தன் தவறுக்கு வருந்திய மார்கரெட் பின்னாளில் லாராவுடன் அதிக இணக்கம் பாராட்டுகிறாள்.

ஆனாலும், தான் வேண்டியது போல் மார்பகங்கள் பெரிதாகாதது, மாதவிடாய் வராதது, நான்சி பொய் சொன்னது, லாராவை தான் வேதனைப்படுத்தியது, விரும்பியபடி பாட்டியுடன் ஃப்ளோரிடா செல்வது தடைபடுவது என்று அடுத்தடுத்து நேரும் நிகழ்வுகள் எல்லாம் தான் ஒரு மனித வாழ்வில் பெருந்துயரம் என்று நினைத்துக் கொள்கிறாள் மார்கரெட்.

உண்மையில் வளரிளம் பருவத்தினரின் மனப் போராட்டம் அப்படித்தான் இருக்கும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

சந்தேகங்களும், கேள்விகளும் வலுத்துக் கொண்டே செல்ல மார்கரெட் ஒரு நாள் வெடித்துச் சிதறுகிறாள். மார்கரெட் கிறிஸ்துவப் பெண் என்று தாய் வழிப் பாட்டி, தாத்தாவும், யூதப் பெண் என்று தந்தை வழி பாட்டியும் உரிமை கொண்டாட மார்கெரட் ‘மதத்தால் நீங்கள் எல்லோரும் சண்டை போட்டுக் கொள்வது முட்டாள்தனம். மதமே முட்டாள்தனம். எனக்கு கடவுள் நம்பிக்கையே இல்லை” என்று ஆர்ப்பரிக்கிறாள்.

அதன்பின்னர் மதம் பற்றி ஆசிரியர் பெனடிக்ட் கொடுத்த ப்ராஜக்ட்டை எழுதுகிறாள்.

“அன்புள்ள பெனடிக்ட், மதம் பற்றி நான் என்ன தெரிந்து கொண்டேன் என்றாள், அது ஒருவரை இன்னொருவருடன் சண்டையிட வைக்கிறது. எல்லா மதங்களுமே, நீங்கள் வேண்டினால் இறைவன் அதைக் கேட்பார், உதவி செய்வார், எல்லாவற்றையும் மேம்படுத்துவார் என்கிறது. நான் பலமுறை வேண்டினேன். எல்லாம் இன்னமும் மோசமடைந்தது. ஒருவேளை கடவுள் என்று மேலே யாரும் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம். நாம் சொல்வதை யாரும் கேட்டுக் கொண்டிருக்கவில்லை. எனக்கு நான் மட்டும்தான்” என்று எழுதி முடித்திருப்பாள்.

மார்கரெட்டின் விரக்தி மதத்தைப் பற்றி, கடவுளைப் பற்றி ஒருவித முடிவுக்கு வர வைத்திருக்கும்.

உலகில் மதத்தைப் பின்பற்றுபவர்கள், சிலர் அதன் மீது உண்மையான ஈடுபாடு கொள்கிறார்கள்; வேறு சிலரோ அதன் மீது கண்மூடித்தனமான வெறியைக் கொட்டுகிறார்கள். சிலர் அதை வைத்துப் பிழைக்கிறார்கள், சிலர் அதை வியாபாரமாக்குகிறார்கள், இன்னும் சிலர் அதைக் கொண்டு மற்றவர்களை அடிமைப்படுத்துகிறார்கள். இதற்காக ஆயிரமாயிரம் கற்பிதங்களை உருவாக்கி செயல்படுகிறார்கள்.

மதம் என்பது எதுவரை, எதற்காக என்பதில் அதை உருவாக்கிய மனிதன் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.

மார்கரெட் ஆசிரியர் பெனடிக்டுக்கு எழுதிய கடிதத்தின் சாராம்சம் அந்தத் தெளிவை நோக்கிய தொடக்கப் புள்ளியாகக் கூட இருக்கலாம்.

ஆசிரியர் பெனடிக்டுக்கு மதத்துக்கு பொழிப்புரை கொடுத்துவிட்டு இயல்புக்குள் சென்றுவிடும் மார்கரெட் சில நாட்களில் பூப்பெய்திவிடுவாள். அவள் சற்றும் எதிர்பாராத தருணத்தில் அது நிகழ்ந்துவிடும். இயற்கை அப்படித்தானே சம்பவிக்கும். ‘நான் பெண்ணாகிவிட்டேனா!’ என்று தாயிடம் கேட்டுப் பூரிப்பாள்.

அந்த நொடியில் அவள் மனதில், “கடவுளே நீங்கள் இன்னும் இருக்கிறீர்கள். நான் தான் மார்கரெட். மிக்க நன்றி.” (Are u still there God, It's me, Maragaret. Thanks an awful lot.) என்று எண்ணிக் கொண்டே மேலே பார்ப்பாள். அத்துடன் படமும் முடிந்துவிடுகிறது. மார்கரெட்டின் சந்தேகம் நீள்கிறது என்பதை மட்டும் நாம் புரிந்து கொள்ளலாம்.

தனக்கு சாதகமானவை நடக்கும்போது நன்றி சொல்லவும், தனக்கு எதிரானது நடக்கும்போது பழிபோடவும் தான் நம்மில் பலர் கடவுளை நம்பிக் கொண்டிருக்கிறோமோ என்னவோ!

“சந்தேகம் என்பது தனிமையான ஒரு வலி. நம்பிக்கை தான் தன் இரட்டைச் சகோதரன் என்று அது அறியாது” - என்கிற கலீல் கிப்ரான் தத்துவத்தைப் போல.

| தேவதைகள் தொடர்ந்து வலம் வருவர் |

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

Are You There God? It's Me, Margaret. - கடவுளை நோக்கிய மார்கரெட்டின் கேள்விகள் | திரை தேவதைகள் 33
All We Imagine As Light: இளைப்பாறுதல் தேடும் மனிதிகள் பார்வதி, பிரபா, அனு | திரை தேவதைகள் 32

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in