பதவி விலகும் முன் முகமது யூனுஸ் ஆற்றிய உரை - இந்தியாவுக்கு எதிரான பேச்சால் சர்ச்சை

பதவி விலகும் முன் முகமது யூனுஸ் ஆற்றிய உரை - இந்தியாவுக்கு எதிரான பேச்சால் சர்ச்சை
Updated on
1 min read

டாக்கா: நேபாளம், பூட்டான் நாடுகளுடன் இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களைச் சேர்த்து தனது பிரியாவிடை உரையில் முகமது யூனுஸ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடைபெற்ற மாணவர் போராட்டத்தால் அவர் அந்நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து, அதன் தலைமை ஆலோசகராகப் பொறுப்பேற்றவர் முகமது யூனுஸ். வங்கதேச நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தலில் வங்கதேச தேசியவாத கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து, முகமது யூனுஸ் தனது பதவியில் இருந்து விடைபெற்றுள்ளார்.

விடைபெறும் முன்பாக அவர் ஆற்றிய உரையில், ‘‘வங்கதேச அரசின் தலைமை ஆலோசகராக பதவி வகித்த இந்த 18 மாத காலத்தில், வங்கதேச வெளியுறவுக் கொள்கையில் இறையாண்மை, தேசிய நலன், கண்ணியம் ஆகியவற்றை மீட்டுள்ளேன். நாடு, வேறு எந்த ஒரு நாட்டுக்கும் அடிபணியவில்லை. அவர்களின் உத்தரவுப்படி நாம் நமது அரசை நடத்தவில்லை’’ என தெரிவித்தார்.

மேலும் அவர், ‘‘நமது கடல் பகுதி ஒரு புவியியல் எல்லை மட்டுமல்ல, உலக நாடுகளுடன் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான ஒரு நுழைவு வாயில். நேபாளம், பூட்டான், ஏழு சகோதரிகளுடன் இந்த பிராந்தியம் மிகப் பெரிய பொருளாதார ஆற்றலைக் கொண்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

இதில், இந்தியாவின் பெயரைக் குறிப்பிடாமல், இந்தியாவுக்கு உட்பட்ட அசாம், மேகாலயா, திரிபுரா உள்ளிட்ட வட கிழக்கில் உள்ள 7 மாநிலங்களை நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கு இணையாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தனது பதவிக்காலத்தில், இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் வங்கதேச வெளியுறவுக் கொள்கைகளை வழிநடத்தியவர் முகமது யூனுஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவி விலகும் முன் முகமது யூனுஸ் ஆற்றிய உரை - இந்தியாவுக்கு எதிரான பேச்சால் சர்ச்சை
அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட 3 ஈரானிய எண்ணெய் கப்பல்கள் பறிமுதல்: இந்திய கடலோர காவல்படை நடவடிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in