

புதுடெல்லி: அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்ட ஈரானின் மூன்று எண்ணெய் கப்பல்களை இந்திய கடலோர காவல்படை பறிமுதல் செய்துள்ளது.
அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட ஈரானைச் சேர்ந்த மூன்று எண்ணெய் கப்பல்கள் அனுமதியின்றி இந்திய கடற் பகுதிக்குள் இந்த மாதம் வந்ததை அடுத்து அந்த மூன்று கப்பல்களை இந்திய கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மூன்று கப்பல்களும் மும்பையை ஒட்டிய கடற்பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒரு கப்பலில் இருந்து பொருட்களை மற்றொரு கப்பலுக்கு மாற்றும் நடவடிக்கைக்கு இந்திய கடற்பகுதி அனுமதி இன்றி பயன்படுத்தப்படுவதை தடுப்பதே தங்கள் நோக்கம் என இந்திய கடலோரா காவல்படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டெல்லர் ரூபி, அஸ்பால்ட் ஸ்டார், அல் ஜாஃப்சியா ஆகிய பெயர்களைக் கொண்ட மூன்று கப்பல்கள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த கப்பல்கள் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க அடிக்கடி தமது அடையாளங்களை மாற்றிக்கொண்டவை என்றும் அவற்றின் உரிமையாளர்கள் வெளிநாடுகளில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனிடையே, இந்திய கடலோர காவல்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள மூன்று எண்ணெய் கப்பல்களுக்கும் ஈரான் அரசுக்கு சொந்தமான தேசிய எண்ணெய் நிறுவனத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், அந்த கப்பல்களில் இருந்த சரக்குகளுக்கும் தங்கள் நிறுவனத்துக்கும்கூட எந்த தொடர்பும் இல்லை என்று அது கூறியுள்ளது.
இந்திய அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், ‘‘மும்பைக்கு மேற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டதை அடுத்து அந்த மூன்று கப்பல்களும் பறிமுதல் செய்யப்பட்டன’’ என்று தெரிவிக்கப்பட்டது.
எனினும், பின்னர் அந்த பதிவு நீக்கப்பட்டது. அதேநேரத்தில், தொடர் விசாரணைக்காக மூன்று கப்பல்களும் மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ஆதாரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன.
இதனிடையே, இந்திய கடலோர காவல்படை தனது ரோந்துப் பணிகளைத் மேலும் தீவிரப்படுத்த நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையேயான உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைத் தொடர்ந்து பறிமுதல் மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த அதன் பல்வேறு கப்பல்களுக்கு அமெரிக்கா தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.