

டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல் காரணமாக ஈரானில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமேனி உட்பட 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ முகாம்கள் உள்ள வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியுள்ளது. அத்துடன் அங்குள்ள விமான நிலையங்கள், கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்தும் ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
இவற்றை வான் பாதுகாப்பு கருவிகளை கொண்டு வளைகுடா நாடுகள் தடுத்து வருகின்றன. குவைத்தில் உள்ள அஹமதி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்த வந்த ட்ரோன்கள் நடுவானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதன் துகள்கள் சிதறி விழுந்ததில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் 2 ஊழியர்கள் காயம் அடைந்தனர்.
ஈரான் மீதான தாக்குதல் விரைவில் முடிவுக்கு வரும் சூழல் தெரியவில்லை. லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதால், லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பினர் சட்டவிரோதமாக தாக்குதலை தொடங்கியுள்ளனர், இதற்கும் லெபனான் அரசுக்கும் தொடர்பில்லை என அந்நாட்டு பிரதமர் நவாப் சலாம் கூறியுள்ளார்.
ஏமன் வளைகுடா பகுதியில் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என ஓமன் கூறியுள்ளது. மார்ஷல் தீவுக்கு சொந்தமான ஆயில் டேங்கர் கப்பல் மீது, ட்ரோன் படகு மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஓமன் தெரிவித்துள்ளது.
ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது அங்குள்ள தீவிரவாத அமைப்பு ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை என ஈரான் கூறிவிட்டது. இதனால் ஈரான் மீதான தாக்குதல் தொடரும் எனத் தெரிகிறது. ஈரான் பதில் தாக்குதலை தொடரும் என தெரிகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்து வருகிறது.