

அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக குற்றச்சாட்டு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தாக்குதலால் சம்பந்தப்பட்ட மூன்று தேசங்களைத் தாண்டி மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகள் அனைத்துமே பதற்றத்தில் திணறுகின்றன.
ஈரானை அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குவது இது முதன்முறை அல்ல என்றாலும் கூட, இப்போதைய தாக்குதல் ஒரு பயங்கர நிலநடுக்கம் போல் அதிர்வலைகளை, பாதிப்புகளை மத்திய கிழக்கு, வளைகுடா நாடுகள் முழுவதும் பரப்பியுள்ளதால் இந்தத் திணறல் ஏற்பட்டுள்ளது எனலாம்.
பொதுவாகவே வளைகுடா நாடுகள், அவற்றின் எண்ணெய் வளத்தால் சர்வதேச பொருளாதார தலையெழுத்தை நிர்ணயிப்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன. கூடவே, அவற்றின் கலாச்சார பாரம்பரியமும், மத ரீதியிலான அடையாளங்களும் அதனையொட்டிய உள்நாட்டு சச்சரவுகளும் அவற்றை எப்பவுமே ஊடக வெளிச்சத்தில் வைத்திருக்கின்றன.
இந்தச் சூழலில் பிப்.28 (சனிக்கிழமை) ஈரானை அமெரிக்கா - இஸ்ரேல் ஒன்றிணைந்து தாக்கத் தொடங்கியது. பதிலுக்கு ஒரே நேரத்தில் 120+ ஏவுகணைகளை ஈரான் ஏவியது. இஸ்ரேல் அயன் டோம் (Iron Dome) என்று அதன் வான் பாதுகாப்பு கவசத்துக்கு பெயர் வைத்து பீற்றிக் கொள்ளும் நிலையில், ஏற்கெனவே அதை ஹமாஸ்கள் பதம்பார்த்தது போக, இப்போது ஈரானும் துவம்சம் செய்து வருகிறது. கிட்டத்தட்ட 35+ ஏவுகணைகளை, இஸ்ரேல் இடைமறிக்கும் ஏவுகணைகளையும் தாண்டி இஸ்ரேலிய இலக்குகளில் இறக்கியுள்ளது ஈரான்.
இஸ்ரேல் மட்டுமல்ல குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இராக் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ, கடற்படை தளங்களைக் குறிவைத்தும் ஈரான் தாக்கி வருகிறது. ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேலை தாக்கிய மத்திய கிழக்கு நாடான லெபனான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.
‘சரணடையுங்கள்’ என்று எச்சரிக்கை விடுத்து Epic Fury ஆபரேஷனை ஆரம்பித்த ட்ரம்ப், இந்தத் தாக்குதல் ஒரு வாரம் அல்லது அதற்கும் கூடுதலாக நடக்கலாம் என்று இப்போது சில கால்குலேஷன்களை தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
ஆனால் ஈரான் பதிலடி வீச்சு சற்றும் எதிர்பாராத அளவுக்கு இருக்க போரை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்கில் ஈரான், அமெரிக்காவுடன் ஓமன் அரசு மூலம் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
அணுசக்தி தொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளும் இந்தப் பேச்சுவார்த்தையை ஈரான் முன்னெடுப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், “தனது ஆளுமையை நிலை நாட்டிக்கொள்வதற்கான விலையை, அமெரிக்க வீரர்கள் மற்றும் குடும்பங்கள் மீது ட்ரம்ப் சுமத்துகிறார். இன்று, ஈரான் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்கிறது. ஈரானிய ஆயுதப் படைகள் படையெடுப்பைத் தொடங்கவில்லை. தொடங்கியது அமெரிக்கா தான்!. நாங்கள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்” என்று ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் அலி லாரிஜானி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இப்படியாக ஈரான் எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் வளைகுடா நாடுகளையும் விட்டுவைக்காமல் தாக்குதல் நடத்தக் காரணம் என்ன?
நாம் ஏற்கெனவே பேசியதுபோல் வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்த முக்கியக் காரணம், அவற்றுக்கும், அமெரிக்க ராணுவத்துக்கும் உள்ள நெருக்கம். அமெரிக்க ராணுவத் தளங்கள் இந்த நாடுகளில் பரவிக் கிடக்கின்றன. அங்கிருந்துகொண்டு பாதுகாப்பு கண்காணிப்பு, ராணுவத் தளவாடங்களைக் கையாளுதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு அமெரிக்காவின் முக்கியப் பங்கு என்ற போர்வையில் தனது கால்களை வலுவாக ஊன்றியுள்ளது அமெரிக்கா.
இதனால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா - இஸ்ரேலின் ராணுவ பராக்கிரமம் அதிகரித்துள்ளது. இதனை ஈரான் முன்னமே பலமுறை உணர்ந்து வெளிப்படையாகப் பேசியது. அதனால் ஈரான் இப்போது வளைகுடா நாடுகள் மீது நடத்திவரும் இந்தத் தாக்குதல்கள் வெறும் அமெரிக்கா - இஸ்ரேலை பழிவாங்குதலையும் கடந்து விரிவானது, ஆழமானது.
ஈரானை தாக்கினால் விளைவுகள் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்திய அமைதிக்கு ஊறு விளைவிக்கும் என்ற செய்தியைக் கடத்த இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்றொரு கோணத்திலும் அணூகலாம்.
மேலும், ஈரானின் இந்தத் தாக்குதலால் வளைகுடா நாடுகளில் பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அதில் சிலவற்றை குறிப்பிட வேண்டுமென்றால், போர்ப் பதற்றம் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) துபாய் விமான நிலையத்துக்கு வரும் விமானங்களும், புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் துபாய் விமான நிலையத்துக்கு தினந்தோறும் ரூ.2,000 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது.
வளைகுடா நாடுகள் பலவும் இதுகாலம் வரை அமெரிக்காவுடன் வலுவான பாதுகாப்பு உறவுகளைப் பேணிக் கொண்டே ஈரானுடன் ஸ்திரமான தூதரக உறவைப் பேணுவதையும் செய்து கொண்டிருந்தன. ஆனால், இந்த ராஜதந்திரம் என்பது புவியியல் ரீதியாக ஒர்க் அவுட் ஆகவில்லை.
வளைகுடா பிராந்தியத்தில் பரவலாக அமெரிக்கா தனது ராணுவ நிலைகளை ஏற்படுத்திக் கொண்ட நிலையில், அமெரிக்காவை எதிர்க்க / தடுக்க வேண்டுமென்றால், இந்த நாடுகளும் தாக்குதலுக்கு உள்ளாக வேண்டியது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. இப்போது இருதலைக் கொள்ளி போல் இந்த நாடுகள் சிக்கிக் கொண்டு தவிக்கின்றன.
ஈரானுக்கும் சில வளைகுடா நாடுகளுக்கும் இடையே இதுகாலம் வரை சைபர் தாக்குதல்கள், துல்லியத் தாக்குதல், ப்ராக்ஸி போர்கள் என்று கனன்று கொண்டிருந்தது, இப்போது எரிமலையாக வெடித்துச் சிதறியுள்ளது.
மார்ச் 2 (திங்கள்கிழமை) காலை நிலவரப்படி, ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபி, கத்தார் தலைநகர் தோஹாவில் வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
முன்னதாக, கத்தார் தனது வான் பாதுகாப்பு அமைப்பான ‘பேட்ரியாட்; (Patriot) ஏவுகணை இடைமறிப்பு அமைப்பைக் கொண்டு வான்வெளியில் ட்ரோன்களை தடுத்து வந்தது. தற்போது போர் விமானங்களையும் பயன்படுத்துவதாக உறுதி செய்துள்ளது. கத்தாரில் இரண்டு இடங்களில் எரிசக்தி நிலையங்களை ஈரான் தாக்கியுள்ளதாக கத்தார் உறுதிப்படுத்தியுள்ளது.
இதில் விதிவிலக்காக தனது நண்பனான ஓமனையும் ஈரான் இம்முறை விட்டுவைக்கவில்லை. ஓமன் கடற்பாதுகாப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது எண்ணெய் டாங்கர் MKD VYOM மீது வெடிப்பொருட்கள் தாங்கிய படகு மோதியது. இதில் இன்ஜின் அறையில் தீ விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார் என்று தெரிவித்துள்ளது.
குவைத் ராணுவம் திங்கள்கிழமை காலை வெளியிட்ட அறிக்கையில், தங்கள் நாட்டை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் பல அதிகாலை வேளையில் இடைமறித்து அழிக்கப்பட்டன என்று கூறியுள்ளது.
அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதலுக்கு இவ்வாறாக பரவலான பதிலடியைக் கொடுத்ததன் மூலம் ஈரான் ஒரு வலுவான அரசியல் கருத்தையும் கடத்தியுள்ளது. உள்நாட்டில் அந்நிய தாக்குதலுக்குப் பின்னர், தலைவர்கள் அதீத தடுக்கும் திறனோடு இருக்க வேண்டும் என்பதோடு, உலகுக்கு அது சொல்லும் செய்தியானது, ‘ஈரானை சீண்டினால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்திய அமைதிக்கு மிகப் பெரிய குந்தகம் ஏற்படும்’ என்பதே.
தாங்கள் சண்டையில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் கூட, தம் நாட்டு மக்கள் அச்சத்தில் தவிப்பதையும், தமது வான் பரப்பு பாதுகாப்பற்றதாக மாறிவிட்டதையும் கண்டு திகைத்து நிற்கின்றன வளைகுடா நாடுகள். மத்திய கிழக்கு - வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை அருகருகே இருத்தல் என்பது ஆபத்துக்கும் அருகிலே இருத்தல்தான்.
அடுத்தது என்ன?
ஈரானில் தொடங்கப்பட்டது இன்று எல்லைகள் கடந்து பரவியுள்ளது. இதன் தாக்கம் குறித்து தூர தேசங்களில் விவாதிக்கப்படுகிறது. எண்ணெய் வளம் ரீதியாக வளைகுடா நாடுகளைச் சார்ந்திருக்கும் மேற்குலகுக்கும் இது தலைவலிதான். அதனால் சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு பலரும் நிர்பந்திக்க, அதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பு இஸ்ரேல், அமெரிக்காவை விட மற்ற நாடுகளுக்கு இன்னும் அதிகமாகியிருக்கின்றன.