ஈரான் உச்ச தலைவர் பதவிக்கு யார் வந்தாலும் படுகொலை உறுதி: இஸ்ரேல் எச்சரிக்கை

படுகொலை செய்யப்பட்ட ஈரான் உச்ச தலைவர் காமேனி.

படுகொலை செய்யப்பட்ட ஈரான் உச்ச தலைவர் காமேனி.

Updated on
1 min read

டெல் அவிவ்: “ஈரான் உச்ச தலைவர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவரை படுகொலை செய்வது உறுதி” என்று இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

ஈரான் மீது இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில், ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்ட நிலையில், அந்நாடு புதிய உச்ச தலைவரை தேர்வு செய்யவுள்ள சூழலில், இத்தகைய எச்சரிக்கையை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் ஹீப்ரூ மொழியில் பகிர்ந்த பதிவில், “ஈரான் உச்ச தலைவர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவரை படுகொலை செய்வது உறுதி. அவரது பெயர் என்னவாக இருந்தாலும், அவர் எங்கு பதுங்கியிருந்தாலும் அவரைத் தேடி அழிப்போம்.

இதற்காக, நாங்கள் அமெரிக்காவுடன் இணைந்து முழு பலத்துடன் செயல்படுவோம். தற்போதைய ஈரான் ஆட்சி தன்னை மீள்கட்டமைப்பதற்கான வாய்ப்புகளை நசுக்குவோம். ஈரானிய மக்கள் இந்த ஆட்சியை தூக்கி எரிந்துவிட்டு புதிய ஆட்சியை அமைக்கும் சூழலை உருவாக்குவோம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இஸ்ரேலிய பிரதமருக்கும், இஸ்ரேலியப் படைகளுக்கும், எப்போதும் தயார் நிலையில் இருக்கும்படியும், போரில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தியுள்ளேன்” என்று காட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஈரான் ஊடகத் தகவலின்படி செவ்வாய்க் கிழமை இரவு ஈரானின் அடுத்த உச்ச தலைவராக காமேனியின் மகன் மோஜ்டபா (Mojtaba) தேர்வு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. புரட்சிகர இஸ்லாமியப் படைகளில் அழுத்தத்தின் பேரில் இத்தேர்வு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் கடந்த பிப்.28 அன்று காமேனி கொல்லப்பட்டார். அவருடன், அவரது மகள், மருமகன், பேத்தி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த காமேனியின் மனைவி கோஜஸ்தேஹ் பாகெர்ஸதேவும் உயிரிழந்தார்.

காமேனியின் இறுதி அஞ்சலி நிகழ்வு இன்று (மார்ச் 4) மாலை நடைபெறுகிறது. இதனையடுத்து இன்று மாலை முதல் 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் - இஸ்ரேல் மோதல் 5-வது நாளை எட்டியுள்ள நிலையில், உள்ளூர் ஊடகத்துக்கு பேட்டியளித்த ஈரான் மூத்த தலைவர் ஒருவர், “இஸ்ரேல் இன்று ஈரானின் பல்வேறு பகுதிகளிலும் லெபனானில் குடியிருப்புப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்களுக்கு அஞ்சி பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை. அமெரிக்கா மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர்களுடன் சமரசத்துக்கான எந்தவொரு அடித்தளமும் இல்லை. எங்கள் விருப்பப்படி இந்தப் போர் தொடரும்” என்று கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p>படுகொலை செய்யப்பட்ட ஈரான் உச்ச தலைவர் காமேனி.</p></div>
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளை ஈரான் குறிவைப்பது ஏன்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in