அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளை ஈரான் குறிவைப்பது ஏன்?
அணு ஆயுதங்களைத் தயாரிப்பதாக குற்றச்சாட்டு உள்ளிட்ட காரணங்களை முன்வைத்து, ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தாக்குதலால் சம்பந்தப்பட்ட மூன்று தேசங்களைத் தாண்டி மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகள் அனைத்துமே பதற்றத்தில் திணறுகின்றன. இஸ்ரேல் மட்டுமல்ல குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இராக் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ, கடற்படை தளங்களைக் குறிவைத்தும் ஈரான் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது.
‘ஈரான் எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் வளைகுடா நாடுகளையும் விட்டுவைக்காமல் தாக்குதல் நடத்தக் காரணம் என்ன?’ என்ற கேள்வி இங்கே எழுகிறது. வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்த முக்கியக் காரணம், அவற்றுக்கும், அமெரிக்க ராணுவத்துக்கும் உள்ள நெருக்கம். அமெரிக்க ராணுவத் தளங்கள் இந்த நாடுகளில் பரவிக் கிடக்கின்றன. அங்கிருந்துகொண்டு பாதுகாப்பு கண்காணிப்பு, ராணுவத் தளவாடங்களைக் கையாளுதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு அமெரிக்காவின் முக்கியப் பங்கு என்ற போர்வையில் தனது கால்களை வலுவாக ஊன்றியுள்ளது அமெரிக்கா.
மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா - இஸ்ரேலின் ராணுவ பராக்கிரமம் அதிகரித்துள்ளது. இதனை ஈரான் முன்னமே பலமுறை உணர்ந்து வெளிப்படையாகப் பேசியது. அதனால் ஈரான் இப்போது வளைகுடா நாடுகள் மீது நடத்திவரும் இந்தத் தாக்குதல்கள் வெறும் அமெரிக்கா - இஸ்ரேலை பழிவாங்குதலையும் கடந்து விரிவானது, ஆழமானது. ஈரானை தாக்கினால் விளைவுகள் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்திய அமைதிக்கு ஊறு விளைவிக்கும் என்ற செய்தியைக் கடத்த இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்றொரு கோணத்திலும் அணுகலாம்.
மேலும், ஈரானின் இந்தத் தாக்குதலால் வளைகுடா நாடுகளில் பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. வளைகுடா நாடுகள் பலவும் இதுகாலம் வரை அமெரிக்காவுடன் வலுவான பாதுகாப்பு உறவுகளைப் பேணிக் கொண்டே ஈரானுடன் ஸ்திரமான தூதரக உறவைப் பேணுவதையும் செய்து கொண்டிருந்தன. ஆனால், இந்த ராஜதந்திரம் என்பது புவியியல் ரீதியாக ஒர்க் அவுட் ஆகவில்லை. வளைகுடா பிராந்தியத்தில் பரவலாக அமெரிக்கா தனது ராணுவ நிலைகளை ஏற்படுத்திக் கொண்ட நிலையில், அமெரிக்காவை எதிர்க்க / தடுக்க வேண்டுமென்றால், இந்த நாடுகளும் தாக்குதலுக்கு உள்ளாக வேண்டியது தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. இப்போது இருதலைக் கொள்ளி போல் இந்த நாடுகள் சிக்கிக் கொண்டு தவிக்கின்றன.
ஈரானுக்கும் சில வளைகுடா நாடுகளுக்கும் இடையே இதுகாலம் வரை சைபர் தாக்குதல்கள், துல்லியத் தாக்குதல், ப்ராக்ஸி போர்கள் என்று கனன்று கொண்டிருந்தது, இப்போது எரிமலையாக வெடித்துச் சிதறியுள்ளது. இதன்மூலம் ஈரான் ஒரு வலுவான அரசியல் கருத்தையும் கடத்தியுள்ளது. உள்நாட்டில் அந்நிய தாக்குதலுக்குப் பின்னர், தலைவர்கள் அதீத தடுக்கும் திறனோடு இருக்க வேண்டும் என்பதோடு, உலகுக்கு அது சொல்லும் செய்தியானது, ‘ஈரானை சீண்டினால் மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்திய அமைதிக்கு மிகப் பெரிய குந்தகம் ஏற்படும்’ என்பதே.
தாங்கள் சண்டையில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் கூட, தம் நாட்டு மக்கள் அச்சத்தில் தவிப்பதையும், தமது வான் பரப்பு பாதுகாப்பற்றதாக மாறிவிட்டதையும் கண்டு திகைத்து நிற்கின்றன வளைகுடா நாடுகள். மத்திய கிழக்கு - வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை அருகருகே இருத்தல் என்பது ஆபத்துக்கும் அருகிலே இருத்தல்தான்.
ஈரானில் தொடங்கப்பட்டது இன்று எல்லைகள் கடந்து பரவியுள்ளது. இதன் தாக்கம் குறித்து தூர தேசங்களில் விவாதிக்கப்படுகிறது. எண்ணெய் வளம் ரீதியாக வளைகுடா நாடுகளைச் சார்ந்திருக்கும் மேற்குலகுக்கும் இது தலைவலிதான். அதனால் சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு பலரும் நிர்பந்திக்க, அதற்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை. அடுத்தது என்ன என்ற எதிர்பார்ப்பு இஸ்ரேல், அமெரிக்காவை விட மற்ற நாடுகளுக்கு இன்னும் அதிகமாகியிருக்கின்றன.