வட கொரியா ஏவுகணை சோதனை எதிரொலி: ஜப்பான் பிரதமர் அவசர ஆலோசனை

வட கொரியா ஏவுகணை சோதனை எதிரொலி: ஜப்பான் பிரதமர் அவசர ஆலோசனை
Updated on
1 min read

டோக்கியோ: வட கொரியா நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை குறித்து ஜப்பான் பிரதமர் அலுவலகம் சந்தேகம் எழுப்பியுள்ளது. இதன் எதிரொலியாக ஜப்பான் பிரதமர் அலுவலகம் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்.28-ம் தேதி தாக்குதல்களைத் தொடங்கின. இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. ஈரானும் பதில் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு வட கொரியா ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடான ஜப்பான் மீது வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக தகவல் வெளியானது. இது குறித்து பொதுமக்களை எச்சரிக்கும் வகையில் ஜப்பான் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘அவசர எச்சரிக்கை. வட கொரியா சந்தேகத்துக்கு உரிய பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியுள்ளது. கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து ஏவுகணையின் பாதையை கண்காணிக்க உத்தரவிட்ட ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, நெருக்கடி மேலாண்மை மையத்துடன் தொடர்புடைய அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகளைக் கொண்ட அவசர கால சிறப்புக் குழுவின் கூட்டத்தை கூட்டியுள்ளார்.

இது குறித்து ஜப்பான் செய்தி நிறுவனமான என்ஹெச்கே வெளியிட்ட செய்தியில், ‘‘பிற்பகல் 1.30 மணி அளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. வட கொரியாவில் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணை போல தோன்றும் ஒன்று ஏவப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்கு வெளியே உள்ள கடல் பகுதியில் விழுந்ததாக அதிகாரிகள் நம்புகின்றனர். பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்கு வெளியே இந்த ஏவுகணை விழுந்ததால் ஆபத்து குறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. சேதம் குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை. சேதத்தை மதிப்பிடுவதற்கு அதிகாரிகள் விரைவாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட கொரியாவின் ஏவுகணைத் தாக்குதலை தென் கொரியா உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவும் தென் கொரியாவும் தங்கள் வருடாந்திர கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், வட கொரியா கிழக்கு நோக்கி அடையாளம் தெரியாத ஒரு ஏவுகணையை ஏவியது என தென் கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் கியோட்டா வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘இந்த சம்பவம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்ததைப் போலவே நடந்துள்ளது. வட கொரியா கடந்த ஜனவரி 27-ம் தேதி ஜப்பான் கடலை நோக்கி இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. அவை ஜப்பானின் பிரத்யேக பொருளாதார மண்டலத்துக்கு வெளியே விழுந்ததாக கண்டறியப்பட்டது’’ என தெரிவித்துள்ளது.

வட கொரியா ஏவுகணை சோதனை எதிரொலி: ஜப்பான் பிரதமர் அவசர ஆலோசனை
‘‘எஞ்சியிருப்பதை காப்பாற்றிக் கொள்வதே புத்திசாலித்தனம்’’ - ஈரானுக்கு ட்ரம்ப் அறிவுரை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in