பெண்கள் வேலை வாய்ப்புகளை பெரிதும் குறிவைக்கிறதா ஏஐ? - அலர்ட் தரும் ஆய்வறிக்கை

பெண்கள் வேலை வாய்ப்புகளை பெரிதும் குறிவைக்கிறதா ஏஐ? - அலர்ட் தரும் ஆய்வறிக்கை
Updated on
3 min read

“செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தால் அனைத்து வேலைகளும் அழிக்கப்படும். ஒருகட்டத்தில் நம் யாருக்குமே வேலை இருக்காது. எதிர்காலத்தில் நீங்கள் வேலை பார்க்க விரும்பினால் மட்டுமே பார்க்கலாம். வேலை என்பது ஒருவித பொழுதுபோக்கு அம்சம் போல் ஆகிவிடும். மற்றபடி ரோபோக்கள் எல்லா சேவைகளையும் செய்துவிடும்” என்று 2024 மே மாதத்தில் டெஸ்லா நிறுவனர் எலான் மாஸ்க் பேசியிருந்தார்.

அவருடைய அந்தப் பேச்சுக்கு பல்வேறு விதமான எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக, மஸ்க்கின் பேச்சு ஒரு மேட்டுக்குடி முதலாளித்துவ மனப்பான்மை என்று அதிகப்படியாக விமர்சிக்கப்பட்டது.

எலான் மஸ்க் இதைச் சொல்லி 2 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், ஏஐ அவர் சொன்னபடியே இன்னும் அதிகமாகவே வளர்ந்திருக்கிறது. அவர் கணித்ததுபோலவே வேலைப் பறிப்பு வேலையையும் செய்ய ஆரம்பித்துவிட்டது.

செயற்கை நுண்ணறிவின் (AI) வீச்சு தொழிலாளர் சக்தியெங்கும் பரவி வருகிறது. இந்தச் சூழலில் ஏஐ தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படக் கூடிய அபாயத்தில் உள்ள வேலைகள் எவை என்பது குறித்த தொழிலாளர்களின் பதற்றமும் அதிகரித்தே வருகிறது.

நம் வேலைக்கு நம்மைவிட திறமையான ஒரு மனிதர் போட்டிக்கு வரலாம் என்ற நிலை ஏஐ இல்லாவிட்டாலும் கூட இருக்கத்தான் செய்கிறது. அது இயல்பு. மேலும், அத்தகையப் போட்டி மட்டுமே ஒருவர் தன்னைத்தானே தொழில் நிமித்தமாக தகுதிப்படுத்திக் கொள்ள, திறமையை வளர்த்துக் கொள்ள உந்தும். ஆனால், நாம் செய்யும் வேலையை ஊதியம் ஏதும் பெறாமல் ஒரு தொழில்நுட்பம் செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்பது அதீத பதற்றத்தில் ஆழ்த்தும். எதிர்காலம் நிச்சயமற்றதுதான் என்றால். எதிரி எப்படி, என்ன கொண்டுவரும் என்பது தெரியாமல் இருப்பது இன்னும் மோசமானது.

இப்படியான சூழலைத்தான் உலகெங்கும் உள்ள தொழிலாளர் சக்தி ஏஐ வளர்ச்சியால் எதிர்கொண்டிருக்கிறது. அதுவும் குறிப்பாக பெண் தொழிலாளர் சக்தியை ஏஐ தொழில்நுட்பம் பெரிதும் பதம் பார்க்கக்கூடும் என்று கணிக்கிறது ஆய்வறிக்கை ஒன்று.

இது முழுக்க முழுக்க ஆஸ்திரேலிய சூழலை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுதான் என்றாலும் கூட, அதன் ஆழ, அகலங்கள் உலகளாவிய தன்மை கொண்டவையே. வாருங்கள் அதைச் சற்று சுருக்கமாக அலசுவோம்.

மனிதர்களின் தேவை அவசியமாக உள்ள குழந்தைகள், நோயாளிகள், வயோதிகர்கள் பராமரிப்பு போன்ற சேவைத் துறையில் பெண்களே அதிகமாக இருக்கின்றனர். அதனால், பெண்கள் சார்ந்த துறைகளில் ஏஐ தலையீடு அதிகம் இருக்காது என்பதே இதுவரையிலான பொதுவான கருத்தாக இருக்கிறது.

ஆனால், ஆஸ்திரேலியாவை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு, உலகம் முழுவதும் உள்ள அரசு நிர்வாகங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தக் கூடும். ஏனெனில், உண்மையில், பெண்கள் அதிகம் உள்ள பணிப் பிரிவுகள் தான் ஏஐ வளர்ச்சியால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றன என்கிறது அந்த ஆய்வு. அதாவது நர்சிங் போன்ற துறைகளில் ஆட்டோமேஷன் (தானியங்குதல்) அதிகரித்துள்ளது என்கிறது அந்த ஆய்வு.

எந்த வேலைகளுக்கு அபாயம் அதிகம்?

‘automation exposure score’ அதாவது தானியங்கிமயமாக்கலுக்கு அதிகம் வாய்ப்புள்ள துறைக்கான மதிப்பீடு என்ற அடிப்படையில் சர்வே எடுகப்பட்டது. அதில் திரும்பத்திரும்ப செய்யக்கூடிய ஒரே மாதிரியிலான பணிகளைக் கொண்ட க்ளெரிக்கல் (எழுத்தர்கள்), நிர்வாக வேலைகள் ஏஐ-ஆல் அதிகம் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் மீண்டும் செய்யப்படும் வழக்கமான பணிகளுக்கான மனித முயற்சியைக் குறைப்பதற்கு ஏஐ மிகவும் பொருத்தமானது என்பதே ஏஐ நிறுவனங்களில் வணிக உத்தி. அப்படிப் பார்க்கையில் ஏஐ நிறுவனப் பரிந்துரைகளோடு க்ளெரிக்கல் பணிகள் மிகவும் ஒத்துப்போகிறது.

ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை தானியங்கிமயமாக்கலால் (ஆட்டோமேஷனால்) அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய எழுத்தர் மற்றும் நிர்வாகப் பணிகளில் 70%-க்கும் அதிகமான பெண்கள் பணிபுரிகின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். அதாவது 5-ல் 1 ஆஸ்திரேலிய பெண் இந்த இரண்டில் ஒரு துறையில்தான் பணி புரிகின்றனராம்.

இதை ஒரு மாதிரியாகக் கொண்டு 20 முக்கிய பணிகளை எடுத்துக் கொண்டு அதில் ஏஐ வளர்ச்சியால் பாதிக்கப்படக் கூடியவற்றை வரிசைப்படுத்தினால், முதல் 15 இடங்கள் பெண்கள் அதிக பங்களிப்பை செலுத்தும் துறைகளாக இருக்கின்றன. அதாவது 80% வரை பெண்கள் பங்களிப்பை கொண்ட துறைகளாக அந்த 15 துறைகளும் இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக செயலாளர்கள், வரவேற்பாளர்கள், கணக்குப் பதிவாளர்கள் மற்றும் கணக்கியல், மனிதவளம் மற்றும் ஊதியப் பட்டியல் எழுத்தர்கள் போன்ற பதவிகளை சுட்டிக்காட்டலாம்.

இந்த முதல் 20 பட்டியலில் உள்ள ஒரே ஒரு தொழில் மட்டுமே ஓரளவு ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் தொழிலாகும்: நிதி வர்த்தகர்கள். மீதமுள்ள நான்கு தொழில்கள் பாலின சமநிலையில் உள்ளன.

அதேவேளையில், ஏஐ வளர்ச்சியால் மிகக் குறைந்த அளவில் பாதிக்கப்படக் கூடிய 20 வேலைகளில் 17 ஆண்கள் அதிகம் வேலை பார்க்கும் தொழிலாளாக இருக்கின்றன. இவற்றில் பெண்கள் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வேலைகள் 3 மட்டுமே.

வேலை பறிப்பை ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டதா ஏஐ?

வேலைவாய்ப்பின்மை எப்போதுமே சமூகத்தில் நிலவுகிறது தான் என்றாலும், வேலையின்மை மோசமான அளவில் அதிகரிப்பது ஏஐ ஏற்கெனவே தனது தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டது என்பதன் அர்த்தமே.

‘ஜாப்ஸ் அண்ட் ஸ்கில்ஸ் ஆஸ்திரேலியா’ அமைப்பால் இணையவழியில் சேகரிக்கப்பட்ட வேலைவாய்ப்பு காலியிடங்கள் தொடர்பான தரவுகள், ஏஐ வருகையால் அதிகளவில் தாக்கத்துக்கு உள்ளான வேலைகளில் பலவற்றுக்கான காலியிடங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாகவே தொடர்ந்து குறைந்து வருவதைக் காட்டுகின்றன.

உதாரணத்துக்கு ஆஸ்திரேலியாவில் தனிப்பட்ட காரியதரிசிகள், புத்தகப் பராமரிப்பாளர்கள் போன்ற வேலைகளுக்கான வேலையாட்கள் தேவை கடந்த ஜூனுடன் ஒப்பிடுகையில் 2026 ஜூனில் 22% குறைந்துள்ளது. எழுத்தர்கள் பணிக்கான தேவையும் 9% குறைந்துள்ளது.

ஏஐ வருகையால் பாதிக்கப்படாத கான்க்ரீட் போடுவோர், எலக்ட்ரீசியன்கள் போன்ற பணிகளுக்கான வேலையாட்கள் தேவை முறையே 5.5%, 14.3% என்றளவில் அதிகரித்துள்ளது.

இப்போதைய சூழலில் ஆஸ்திரேலியாவில் வர்த்தகம் மற்றும் கூலித் தொழிலில் தான் ஏஐ தாக்கம் குறைவாக இருக்கிறது. சூழலுக்கு ஏற்ற மனிதத் தலையீடு, ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியாக செய்யக்கூடிய கைத்திறன் தேவைப்படும் இதுபோன்ற வேலைகளில் தான் ஏஐ இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

கண்காணிப்பு அவசியம்

இந்தச் சூழலில் டெக் நிறுவனங்கள், அரசாங்கங்கள், கல்வி நிலையங்கள், ஆராய்ச்சியாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தொழில்துறையில் ஏஐ எந்த மாதிரியான பணிகளை எல்லாம் பறிக்கும் என்ற ஆய்வைத் தொடங்கிவிட்டன.

இந்நிலையில், பாலின பேதத்தை தடுக்கும் பார்வையை செலுத்தாவிட்டால், ஏஐ தாக்கங்களில் உள்ள பாலின வடிவங்களை நாம் புறக்கணித்துவிடக் கூடும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஜூலை 2026-ல் ஆஃபீஸ் ஆஃப் ஏஐ (Office of AI), என்ற அரசு அலுவலகம் உருவாக்கப்படுவதாக அறிவித்தார். இதன்மூலம் பெரிய அளவிலான AI டேட்டா சென்டர்களுக்கான (தரவு மையங்கள்) கட்டாய விதிகளை உருவாக்குவது ஆஸ்திரேலிய அரசின் திட்டம்.

அதாவது ஏஐ தரவு மையங்கள் தங்களுக்கு தேவையான மின்சாரத்தை அவர்களே உருவாக்கிக் கொள்ளுதல், நீர் மேலாண்மையை கடைப்பிடித்தல். ஆஸ்திரேலிய படைப்பாளர்களின் பதிப்புரிமையைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை வகுத்தல். பல்வேறு துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கத்தை சீராகக் கையாளுதல் ஆகியவற்றை மேற்கொள்ள ஆஸ்திரேலிய அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதில், ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கத்தை சீராகக் கையாளுதல் என்பது மிக முக்கியமானது. ஏற்கெனவே அரசு தனது அனைத்துக் கொள்கைகளையும் பாலின சமத்துவத்துடன் அணுக வேண்டிய அவசியம் உள்ள நிலையில், ஆஃபீஸ் ஆஃப் ஏஐ (Office of AI) செயல்பாடுகளையும் பாலின சமத்துவத்தோடு அணுகவேண்டும் என்று பரிந்துரைக்கிறது இந்த ஆய்வறிக்கை.

ஏஐ-க்கு ஏற்ப தொழிலாளர் சந்தையை மாற்றியமைப்பதை பாலின கண்ணட்டோத்துடன் அணுகுவது அரசு அதன் கொள்கைகளை வடிவமைப்பதற்கு உறுதுணையாக இருக்கும்.

இப்படியான மதிநுட்பம் மட்டுமே பாலின அடிப்படையில் ஏஐ வேலை பறிப்பை விரிவுபடுத்துவதற்கு முன் மனித சமுதாயம் விழித்துக் கொள்ள வழிவகுக்கும் என்கிறது ஆய்வறிக்கை.

உதாரணமாக, ஏஐ ஊடுருவலுக்கு அதிக வாய்ப்புள்ள பெண்கள் அதிகம் சார்ந்த சில துறைகளைக் கண்டறிந்து அவற்றை புதிய வாய்ப்புகளுடம் பொருத்த அரசுகள் முயற்சிக்கலாம். அதாவது வழக்கமான பணியாக இருந்தாலும் கூட அதில் மனிதர்களின் முடிவும், தலையீடும் அவசியம், அவற்றை எந்த ஏஐ-யாலும் நிரப்ப முடியாது என்றளவில் வடிவமைக்கலாம்.

இந்த மாதிரியான மனிதனுக்கே உரித்தான மதிநுட்பத்துடன் மட்டும்தான் பாலின சமத்துவப் பொருளாதாரத்துடன் கைகோத்து, ஏஐ ஊடுருவலுக்கு ஈடுகொடுத்து, ஒரு தொழிலாளர் சந்தையை தகவமைக்க முடியும் என்கிறது ஆய்வறிக்கை.

இதை இப்போது ஆஸ்திரேலியா தொடங்கியிருக்க, உலகின் ஒவ்வொரு நாடும் இதை பரிசீலிப்பது அவசியம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

உறுதுணைக் கட்டுரை: தி கான்வர்சேஷன்

பெண்கள் வேலை வாய்ப்புகளை பெரிதும் குறிவைக்கிறதா ஏஐ? - அலர்ட் தரும் ஆய்வறிக்கை
Nooru Saami - செல்வி உடைத்த தாய்மை எனும் புனித பிம்பம் | திரை தேவதைகள் 31

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in