Nooru Saami - செல்வி உடைத்த தாய்மை எனும் புனித பிம்பம் | திரை தேவதைகள் 31

Nooru Saami - செல்வி உடைத்த தாய்மை எனும் புனித பிம்பம் | திரை தேவதைகள் 31
Updated on
5 min read

“எத்தனை பேர் கனவுக்கு

அவள் வழி காட்டிய ஒரு கரை விளக்கு...

எத்தனை பேர் உறவுக்கு

அவள் தீபம் தெளித்த அகல் விளக்கு...

அவள் ஒண்ணும் புனிதமில்ல

அட மனிதரில் யாரை புனிதம் சொல்ல...

இருள் வாழும் மனிதனுக்கோ

அவள் போலே ஒளி தர ஆளே இல்ல...”

‘ஃபிராங்கிபானி’ என்ற தலைப்பிலான குறும்படத்தில் கபேர் வாசுகி என்ற இசைக் கலைஞர் எழுதி, இசையமைத்த பாடல் வரிகள் இவை. இந்தக் குறும்படம் மொத்தமும் அந்தப் பாடல்தான். தன் தோழி நிலாவைப் பற்றிய விவரிப்புகளில் ‘அவள் ஒண்ணும் புனிதமில்ல' என்று கபேர் குறிப்பிடுகிறார்.

ஆம், அவள் என்பவள் புனிதமல்ல. அவள் தாயாக, மகளாக, சகோதரியாக, தோழியாக, காதலியாக, மனைவியாக இன்னும் என்னவாக இருந்தாலும் அவள் என்பவள் புனிதமல்ல. அவளுடைய எந்த சமூக வேடங்களும் புனிதமல்ல. அப்படிப் புனிதப்படுத்ததலைப் போன்ற அடக்குமுறை வேறேதும் இல்லை.

செல்வியின் மரணத்தைப் பற்றி அவளது மகன் சித்தார்த்தன் கருணாநிதி பகிர்ந்த சமூக வலைதளப் பதிவில் ‘ஃபிராங்கிபானி’-யின் இந்தக் குறிப்பிட்ட வார்த்தைகளை மேற்கோள் காட்டியிருக்கிறார். செல்விக்கு இதை சமர்ப்பணம் செய்வதாகக் கூறியிருக்கிறார்.

செல்வியையும், அவளது மகன்களையும் தனிப்பட்டு விவரித்து அடையாளம் காட்ட மெனக்கிட வேண்டிய அவசியத்தை குறைத்திருக்கிறது ‘நூறு சாமி’ தமிழ்த் திரைப்படம்.

அதற்காக இயக்குநர் சசிக்கு அநேக நன்றிகள். தாய்மை என்பதன் மீது இச்சமூகம் கட்டியெழுப்பி நம்பவைத்த புனிதம் எல்லாம் புனிதமல்ல என்பதைப் புரிந்து தாய்க்கு நல்ல நண்பர்களாக செயல்பட்ட மகன்கள் சித்தார்த்தன் கருணாநிதிக்கும், விவேக்குக்கும் எண்ணிலடங்கா நன்றிகள்.

நாம் இப்படியெல்லாம் சிலாகித்துக் கொண்டிருக்கும் செல்வி, ‘நூறு சாமி’ படத்தால் சுவாசிகா வழியாக நித்திய வாழ்வை எய்தியுள்ளார். இறப்புக்குப் பிந்தைய மறுமை பற்றி எந்த நம்பிக்கையும் இல்லாவிட்டாலும், காலத்தை வென்று வாழும் திரைப் படைப்பின் மீது நம்பிக்கை இருக்கிறது என்பதால் செல்விக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

என் மனதில் இடம்பிடித்த திரை தேவதைகளில் செல்விக்கு என்றுமே ஒரு தனிச் சிறப்பான இடம் இருக்கும். ஏன் என்று சொல்கிறேன் வாருங்கள்.

பல வருடங்களுக்கு முன்னர் ஃபேஸ்புக்கில் ஒரு பதிவைப் படித்தேன். இரண்டு இளைஞர்களுக்கு இடையேயான உரையாடலாக அதில் இருந்ததன் சாராம்சம் இதோ:

“டேய் என் வயதுக்கு என்னால் ஒரு வாரத்துக்கும் மேல் சுயமைதுனம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. ஆனால், என் அம்மா துணை இழந்து இத்தனை ஆண்டுகள் எவ்வளவு தவித்திருப்பார்னு யோசித்தபோதுதான் அவருக்கு துணை தேவை என்பதே எனக்குப் புரிந்தது”.

இந்தப் பேச்சில் அம்மாவின் திருமணம் பற்றியும் பேச்சு இருந்ததாக மங்கலான நினைவு.

<div class="paragraphs"><p>செல்வி, ஏழுமலை, பாஸ்கர் மற்றும் விவேக்</p></div>

செல்வி, ஏழுமலை, பாஸ்கர் மற்றும் விவேக்

‘நூறு சாமி’ ஒரு பெண்ணின் மறுமணம், அதுவும் 40+களில் உள்ள ஒரு பெண்ணின் மறுமணத்தின் அவசியத்தையும், துணையை இழந்த ஒரு பெண்ணுக்கு இயல்பிலேயே ஏற்படக்கூடிய ஆசைகளையும், ஒரு பெண்ணின் ஆசைகளை எப்படிப் ‘பழி - பாவங்களாக’ சமூகத்தின் சில சதிகாரக் கூட்டம் உருமாற்றி குளிர் காய்கிறது என்பதையும், ஏழுமலைகள் போல் ஜீரோ ஈகோ ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற நம்பிக்கையையும் கடத்தியிருக்கிறது.

மறுமணம் பற்றிய படைப்புகளுக்கு இந்திய சினிமாக்களில் பஞ்சமில்லை தான். ஆனால், அதில் பெரும்பாலானவற்றில் ஒரு பேட்டர்ன் இருக்கும். அது பெரும்பாலும் ஆண்கள் ஒரு கைம்பெண் / விவாகரத்தனவர் மீது பரிதாபப்பட்டு, அந்தப் பெண்ணின் குடும்பத்தை சமாதானப்படுத்தி நடப்பதுபோல் இருக்கும். அதாவது தாராள மனத்துடன் வாழ்வு கொடுத்தது போல் திரை நாயகனை சமூகம் உச்சி முகரச் செய்வதாக இருக்கும்.

அதிலும் சில படங்களில் திருமணத்தன்றே கணவனை இழந்தவள், திருமணமாகியும் கணவனால் தீண்டப்படாதவள் என்றெல்லாம் ‘வாழ்க்கை பெற்ற பெண்கள்’ பின்புலம் பற்றிய பேட்டர்ன்கள் இருக்கும். உண்மையில் இவையெல்லாம் பெண்ணின் மீதான புனித சுமத்தல்களே.

சீரியல் கில்லர்களுக்கான இன்க்ரீடியன்ட்ஸ் போலவே தான் பெண்ணின் மறுமணம் பற்றிப் பேசும் படங்களுக்கும் இங்கே சில உப்பு, கார வகையறா சேர்மானங்கள் இருக்கின்றன.

‘நூறு சாமி’ செல்வி அந்த தட்டையான சேர்மானங்களுக்குள் அடங்கமாட்டாள். ஏனெனில், அவள் நிழலில் மட்டுமில்லை, நிஜத்திலும் அப்படித்தான். 'Right to Remarry' புத்தகத்தைப் பற்றி 2021-ல் சித்தார்த்தனிடம் நான் பேசியபோது, தாய் செல்வியைப் பற்றிய விவரிப்புகள் தான் என்னை அப்படி உறுதியாகச் சொல்ல வைக்கிறது.

Nooru Saami - செல்வி உடைத்த தாய்மை எனும் புனித பிம்பம் | திரை தேவதைகள் 31
தாய்க்குத் திருமணம் செய்துவைத்த மகன்கள்: கள்ளக்குறிச்சியில் நெகிழ்ச்சி சம்பவம்! - குவியும் பாராட்டுகள்

இனி, ஜி5 ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கும் ‘நூறு சாமி’ திரைப்படத்துக்குள் கொஞ்சம் உலாவி வருவோம் வாருங்கள்.

“ஆளான சிங்கம் இரண்டும் கைவீசி நடந்தால் காலடியில் பூமி எல்லாம் அடங்கும்” என்ற வரிகள் அடங்கிய ‘நீங்கள் கேட்டவை’ திரைப்படப் பாடல் நம்மில் பெரும்பாலானோருக்கும் தெரிந்திருக்கும்.

ஒரு பெண் கணவனை இழந்தால் அவளது ஒட்டுமொத்த உலகமும், அவளின் மீட்பர்களும், அவளின் வாழ்க்கைக்கு அர்த்தமும், மகிழ்ச்சியும் அவள் பெற்ற பிள்ளைகள் மட்டுமேதான் என்றே காலங்காலமாக நம்பவைக்கப்படுகிறது.

நம்மால் இந்த உலகுக்கு வந்த குழந்தைகளை எந்தச் சூழலிலும் கைவிடக் கூடாது. பிள்ளைகள் பெற்றுக் கொள்வதில் வேண்டும், வேண்டாம் என்ற தனிப்பட்ட விருப்பங்களை முன்னிறுத்தலாம். ஆனால் பிள்ளைகள் இருந்தால் அதற்கான நீதி செய்வது பொறுப்பு என்பதைவிட சுய ஒழுக்கம்.

துணையை இழந்தவர்கள் அவர்கள் பிள்ளைகளை முன்னிறுத்தி வாழ்வதை நான் குறைத்து மதிப்பிடவில்லை. என் எதிர்ப்பு அதைப் புனிதப்படுத்தி மறுமணம் செய்து கொள்வதில் விருப்பம் உள்ள பெண்களைக் கட்டுப்படுத்தும் சமூகத்துக்கானது மட்டுமே.

கணவனை இழந்த பின்னர் பிள்ளைகளை பார்த்துப் பார்த்து வளர்த்தாலும், செல்வி இயல்பிலேயே ‘எல்லோரையும் போல் வாழ வேண்டும்’ என்ற விருப்பத்தில் தான் இருக்கிறாள்.

மறுமணம் பற்றிப் பேசும் வாத்தியாரிடம் அவள் மருதாணி பூசிக் கொள்வதிலும், பொட்டு வைத்துக் கொள்வதிலும் இருக்கும் ஆசையை சொல்லிவிட்டு “இந்த ஆசையெல்லாம் எனக்கு இப்போ இருக்கக் கூடாது சார். ஏன்னா எனக்கு புருஷன் இல்ல. கால் செருப்புல ஒண்ணு அறுந்துட்டாலும் இன்னொண்ணையும் தூக்கி எறிஞ்சிடுறோம். ஆனா நான் ஒண்ணும் செருப்பில்லையே சார், தூக்கி எறிய!” என்று கேட்பாள்.

வாத்தியாரின் உதட்டோரச் சிரிப்பும் ஒரே பிரச்சினையில் இந்தச் சமூகம் எப்படி ஆணுக்கொரு நீதியும், பெண்ணுக்கொரு நீதியும் வைத்திருக்கிறது என்பதைச் சொல்லும்.

இங்கே துணையை இழந்த ஆண்களிடம் ‘ஏம்பா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலாம்ல, பிள்ளைகளை வச்சுக்கிட்டு கஷ்டப்படுற’ என்று பரிந்து பேசும் அதே சமூகம்தான், செல்விக்கள் மறுமணம் செய்ய முடிவு செய்தால், ‘உனக்கு இன்னும் அடங்கலையா?’ என்று குற்ற உணர்ச்சிக்குள்ள தள்ளுகிறது.

இந்தச் சமூகத்தில் துணையை இழந்த 40+ வயதை எட்டிய செல்விக்களின் மறுமணமும் இளம் காதலர்களின் திருமணம், துணையை இழந்த இளம்பெண்களின் மறுமணம் போலவே சம அளவில் முக்கியமானதுதான். இன்னும் சொல்லப்போனால் அது மறுமணமாக இல்லாமல் தனக்குப் பிடித்த இணையுடன் அவள் வாழ்ந்து கொள்வதாகக் கூட இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அவளின் முடிவுகளை சமூகம் கேள்வி கேட்காமல் இருக்க வேண்டும்.

அதைக் கல்லூரி பயிலும் வயதில் புரிந்து கொள்ளாத சித்தார்த்தன் புத்தகங்கள் வாசித்து அறிவு விசாலமாகும்போது வேலை, சம்பாத்தியம் என்று வளரும்போது புரிந்து கொள்கிறான்.

திருமணம் என்ற சமூக நிறுவனத்தின் தேவை பற்றி ஒரு கன்னியாஸ்திரியைப் பேசவைத்தது துணிச்சல் என்றால், அதற்காக இந்த சமூகமும், ஏன் சம்பந்தப்பட்ட மதத்தினரும் கூட எதிர்ப்பு தெரிவிக்காதது சமூக வளர்ச்சிக்கான குறியீடு.

“மனிதனின் அடிப்படைத் தேவைகள் உணவு, உறக்கம், இணை. இதில் முதல் இரண்டும் இல்லாமல் வாழவே முடியாது. மூன்றாவது இல்லாவிட்டாலும் வாழலாம். ஆனால் அது உயிரைக் குடித்துக் கொண்டே இருக்கும்” என்று சித்தார்த்தனுக்கு ஞானம் போதிக்கும் கன்னியாஸ்திரியின் வார்த்தைகள் இந்த அடிப்படை உண்மைகள் கேட்க மறுப்போருக்கு ஒலிப்பெருக்கி! அது அடங்காமல் ஒலிக்கும்.

உடனே சிலர் குதர்க்கமாக யோசிக்கலாம், ‘இணையின் தேவை உயிரைக் குடிக்கிறது’ என்றால் ஏன் அவள் வீட்டு ஜன்னலில் நம்பர் எழுதி வைத்தவர்களை, அவள் வீட்டுக் கூரை வழியாக பூவை தூக்கி எறிந்தவர்களை செல்வி ஏற்கவில்லை என்று!

செல்வி ஆசைப்பட்டது ஒரு முழுமையான குடும்ப கட்டமைப்பு. அவள் ‘எல்லோரையும் போல் வாழவேண்டும்’ என்று ஆசைப்பட்டாளே தவிர, எல்லோரின் இச்சைகளுக்கும் தன் சுயமரியாதையை இழக்க ஆசைப்படவில்லை. என் வாழ்க்கை என் முடிவு என்பதில் செல்வி நிழலிலும், நிஜத்திலும் உறுதியாகவே இருந்திருக்கிறாள்.

‘நூறு சாமி’ செல்வி சுயசார்புடன் இருந்தாலும் மகன்கள் மீதான அதீத பாசத்துடனும் இருந்திருக்கிறாள். அதனாலேயே ஆரம்பகாலத்தில் தன் மறுமண முடிவுக்கு தனது மகன்களின் அங்கீகாரத்தை எதிர்பார்த்து நிற்கிறாள்.

பெண்கள் பிடிவாதமான சுயசார்புடன் (Stubbornly Independent) இருப்பது அவசியம்.

அதனாலேயே பின்னாளில் நீ மறுமணம் செய்துகொள்ள வேண்டும் என்று மகன் தீவிர முன்னெடுப்புகளை மேற்கொள்ளும்போது, “நீ யாரு என் வாழ்க்கையை முடிவு செய்ய?” என்று கேட்டு லேட் 30-களில் இருந்த தன் விருப்பமும், 40+களில் தன்னுள் என்ன விருப்பம் இருக்கிறது என்பதையும் உறுதிப்படுத்த தனக்கான கால அவகாசத்தை தானே உறுதி செய்கிறாள் செல்வி.

செல்வியின் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றிப் பேசும்போது குடும்ப அமைப்பு மற்றும் வெத்துவேட்டு சமூகத்தைப் பற்றிப் பேசாமல் கடக்க முடியாது.

20+ வயதில் கணவனை இழந்துவிட்டு சிறுபிள்ளைகளுடன் “எனக்குத் துணையாக வாருங்களேன்” என்ற செல்வியின் கோரிக்கைகளை சுயநலத்துடன் புறந்தள்ளுவர் மாமனார், மாமியார், அம்மா - அப்பா மற்றும் அண்ணன் குடும்பத்தினர்.

அவள் சுயமாக சிந்தித்து 40+ வயதில் தனக்கொரு மறுமணம் செய்ய முடிவு செய்தபோது அவளைக் கொல்லத் துணிகின்றனர். இது செல்விக்கு நடந்தது அல்லது சினிமாவுக்காக கதையில் சேர்க்கப்பட்ட காட்சி என்று மட்டும் சுருக்கிக் கொள்ளாதீர்கள். இப்படியான உண்மைகளை விவரிக்கத் தொடங்கினால் தனிக் கட்டுரைகள் எழுதித் தீராது.

<div class="paragraphs"><p>செல்வி, ஏழுமலை - அவர்கள் திருமண நாளில்..</p></div>

செல்வி, ஏழுமலை - அவர்கள் திருமண நாளில்..

தமிழ்ச் சமூகத்தில், ஏன் பரவலாக இந்தியச் சமூகத்தில் என்றுகூட சொல்லலாம், ஒரு துணை இழந்த பெண்ணுக்கு ஆதரவாக குடும்பத்தினர் யாரும் இடம்பெயர்ந்து வந்துவிடுவதில்லை. வேண்டுமானால், “இங்கேயே ஒரு குடிசையை போட்டுக்கோ செல்வி,” என்று அவள் அம்மா சொன்னதுபோல் அண்டிப்பிழைக்கவே அழைக்கின்றனர்.

செல்விக்களின் உழைப்பை, அவளின் சுயமரியாதையை விதந்தோதுவோர் அவளின் ஆசையை மட்டும் பழிக்க முக்கியக் காரணம் சமூகத்தின் சாதிய கட்டமைப்பு.

விலங்குகள் தன் இணையை தானே தேடிக் கொள்ளும் சுதந்திரம் கொண்டவை. ஆனால், சமூகமாக கூடி வாழும் 6 அறிவு கொண்ட விலங்குகளான மனிதர்கள் மட்டும்தான் இணை தேடுதலில், இணை சேர்தலில் சாதி, மதம், வர்க்கம், பாலினம், வயது என அத்தனை அத்தனை கட்டுப்பாடுகளை வகுத்து வைத்துள்ளனர்.

துணை இழந்த பெண்களை இந்தச் சமூகம் “பரவாயில்லையே தனி மனுஷியா ஆளாக்கிட்ட, தனி மனுஷியா சாதிச்சுட்ட” என்று அவள் பிள்ளைகளின் வளர்ச்சியை போற்றிப் புகழ்ந்து தள்ளும்.

செல்வி போன்ற பெண்களை வாய்வார்த்தைகளில் சிலை வடித்து அவளை புனிதராக்குவதில் அவசரம் காட்டிக் கொண்டே இருக்கும்.

அந்த அவசரத்தின் பின்னணியில் சாதியும், மதமும், குடும்பமும், ஆணாதிக்கமும் மிகுந்து இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

“செல்வி மறுமணம் செய்துகிட்டா நம்மையெல்லாம் சகிச்சு வாழ்ற நம்ம வீட்டுப் பெண்கள் விவாகரத்து, மறுமணம்னு கிளம்பிடுவாங்கன்னு” என்று படத்தில் வரும் பச்சைபெருமாள் கதாபாத்திரம் காட்டும் பதற்றம் சாதியால், மதத்தால், இன்னும் பிற ஆதிக்க சிந்தனைகளால் ஆக்கிரமிப்பட்ட சமூகத்தின் பதற்றம்.

ஆனால், அந்த அவசரத்தையும், தாய்மை மீதான புனிதத்தையெல்லாம் தான் செல்வி 43 வயதில் மறுமணம் செய்து சுக்குநூறாக உடைத்திருக்கிறாள்.

“அந்த சாமி, இந்த சாமின்னு நூறு சாமியாவெல்லாம் உங்க அம்மாவ ஆக்காம, அவளோட ஆசையை மதிச்சீங்களே...” என்று மகன்களை ஏழுமலை (விஜய் ஆண்டனி) புகழ்வதும், “அம்மா கையில் இருந்த கத்தி மட்டும்தான் நாங்க. அதை சுழற்றியது என்னவோ அம்மா தான். அவுங்க ஒரு ரோல் மாடல்” என்று பாஸ்கர் (மூத்த மகன்) சொல்வதும் தாய்மை மீதான புனித பிம்பங்கள் நொறுங்கிய தருணம். அதனை சாத்தியமாக்கிய அத்தனை பெருமையும் செல்விக்கே செல்லும்.

இந்த அத்தியாயத்தை இன்னொரு நிஜ சம்பவத்தைக் குறிப்பிட்டே முடிக்க விரும்புகிறேன். ஒரு நல்ல படைப்பின் வெற்றி அதன் நோக்கத்தை சமூகம் கச்சிதமாக உள்வாங்கிக் கொள்வதில்தான் இருக்கிறது.

‘நூறு சாமி’ படத்தைப் பார்த்த 17 வயது உறவுக்கார சிறுமி, கணவனை இழந்த 45+ல் உள்ள எனது இன்னொரு உறவுக்காரப் பெண்ணிடம், “நூறு சாமி பார்த்தவுடன் எனக்கு ஏன் உங்களுக்கும் மறுமணம் செய்யக் கூடாதுன்னு தோணுச்சு” என்று கேட்டதை நான் நேரடியாகப் பார்த்தேன்.

செல்வி இன்ஸ்பிரேஷனாக, ரோல் மாடலாக வாழ ஆரம்பித்துவிட்டாள் சித்தார்த்தன், விவேக். அவள் என்றும் வாழ்ந்துகொண்டே இருப்பாள்.

| தேவதைகள் தொடர்ந்து வலம் வருவர் |

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

Nooru Saami - செல்வி உடைத்த தாய்மை எனும் புனித பிம்பம் | திரை தேவதைகள் 31
Balan: The Boy - இந்து, மேரி, ஃபர்ஸானா... இன்னும் சில விக்டிம்கள் | திரை தேவதைகள் 30

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in