

அலி லாரிஜானி, ஈரான் தளபதி சுலைமானி
டெல் அவிவ்: இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் 2-வது மிகப்பெரிய தலைவரான அலி லாரிஜானியும் மூத்த தளபதி கோலம்ரெசா சுலைமானியும் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.
கடந்த பிப்.28ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து அவரது மகன் மோஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் மோஜ்தபா பலத்த காயமடைந்து கோமாவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த சூழலில் மறைந்த அயத்துல்லா அலி காமேனியின் வலது கரமாக செயல்பட்ட அலி லாரிஜானி, ஈரானை வழி நடத்தி வந்ததாகக் கூறப்பட்டது. இந்த சூழலில் கடந்த திங்கள் கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை ஈரான் தலைநகர் டெஹ்ரானின் முக்கிய ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட வீடியோவில், “இஸ்ரேல் வான் வழி தாக்குதலில் அலி லாரிஜானி கொல்லப்பட்டுவிட்டார். இவர் இஸ்லாமிய புரட்சிகர படையின் தலைவராக இருந்தார். ஈரான் ராணுவத்தின் பசிஜ் படைத் தளபதி சுலைமானியும் கொல்லப்பட்டார். இந்த நேரத்தில் ஈரானின் ஆட்சியை பொதுமக்கள் கைப்பற்ற வேண்டும்” என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெஹ்ரானில் நடைபெற்ற பேரணியில் அலி லாரிஜானி பங்கேற்றார். அப்போது முதல் அவரை தீவிரமாக கண்காணித்து, அவர் தங்கியிருந்த ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் 300 ஈரான் ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாகவும் இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. அலி லாரிஜானி, சுலைமானியின் உயிரிழப்பை ஈரான் அரசு உறுதி செய்யவில்லை.