

வாஷிங்டன்: அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால் ஈரானின் அனைத்து எரிசக்தி நிலையங்கள், அனைத்து பாலங்களும் தகர்க்கப்படும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே போர் நடைபெற்று வந்தது. கடந்த 8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டது. இந்த போர் நிறுத்தம் வரும் 22-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.
இதனிடையே கடந்த 11, 12-ம் தேதிகளில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா - ஈரான் பிரதிநிதிகள் நடத்திய அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், இருதரப்பு இடையே இஸ்லாமாபாத்தில் இன்று அல்லது நாளை மீண்டும் அமைதிப் பேச்சு வார்த்தை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “கடந்த சனிக்கிழமை ஹார்முஸ் ஜலசந்தியில் பிரான்ஸ், பிரிட்டனை சேர்ந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. இது போர் நிறுத்த ஒப்பந்த மீறல் ஆகும். அமைதிப் பேச்சுவார்த்தைக்காக எனது பிரதிநிதிகள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்’’ என்றார்.
அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் நேற்றிரவு வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஈரானுக்கு நல்ல வாய்ப்பை வழங்கியிருக்கிறோம். நேர்மையான, ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒப்பந்தத்தை முன்வைத்திருக்கிறோம். இதைப் பயன்படுத்தி அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தை மேற்கொள்வது ஈரானுக்கு நல்லது. இல்லையெனில் ஈரானின் அனைத்து எரிசக்தி நிலையங்கள், அனைத்து பாலங்களையும் தகர்ப்போம்.
இனிமேலும் பொறுமை காக்க முடியாது இது இறுதி எச்சரிக்கை. இவ்வாறு ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் நேற்று கூறும்போது, “நாங்கள் எந்த நாட்டின் மீதும் தாக்குதல் தொடுக்கவில்லை. எங்கள் நாட்டின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டது. எங்களை தற்காத்துக் கொள்ளவே பதில் தாக்குதல்களை நடத்தினோம். ஈரானுக்கு அணு சக்தி உரிமை இருக்கக்கூடாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருக்கிறார். இது எங்களின் உரிமை’’ என்று தெரிவித்து உள்ளார்.