

குவைத்: ஈரான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் குவைத் சர்வதேச விமான நிலையத்தின் ‘டி1’ கட்டிடத்தின் மீது இன்று அதிகாலையில் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்ததாக குவைத் அரசு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, குவைத் விமான நிலையத்தின் செயல்பாடுகள் இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பேசிய குவைத் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் சவுத் அப்துல் அஜிஸ் அல்-ஒதைபி, "ஈரானின் பல ட்ரோன்கள் குவைத் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் கட்டிடத்தை இலக்காகக் கொண்டு கடுமையாக தாக்கின. இந்தத் தாக்குதலில் கட்டிடம் கடுமையாகச் சேதமடைந்ததுடன், பல நபர்கள் காயமடைந்தனர்" என்று தெரிவித்தார்.
தங்கள் நாட்டின் கெஷ்ம் தீவின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
முன்னதாக, குவைத்தை நோக்கி ஈரான் ஏவிய இரண்டு ஏவுகணைகள் பாதியிலேயே தாக்கி அழிக்கப்பட்டன என்றும், பஹ்ரைனை நோக்கி ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டன என்றும் அமெரிக்க ராணுவம் தெரிவித்திருந்தது.
வளைகுடாவில் உள்ள தங்கள் நட்பு நாடுகள் மீது ஈரான் நடத்திய தொடர் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்துவிட்டதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்ததுடன், ஈரானின் கெஷ்ம் (Qeshm) தீவின் மீது தற்காப்புத் தாக்குதல்களையும் நடத்தியதாகவும் கூறியது.
மேலும், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது படைப்பிரிவின் தலைமையகத்தையும், அங்குள்ள மற்றொரு விமானத் தளத்தையும் தாக்கியதாக ஈரான் ராணுவம் வெளியிட்ட அறிவிப்பை அமெரிக்கா மறுத்துள்ளது.
நெதன்யாகு மீது ட்ரம்ப் காட்டம்:
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி இறுதியில் தாக்குதல் நடத்தின. இது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போராக வெடித்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் போர் நிறுத்தம் அறிவித்த அமெரிக்கா, ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில், லெபனான் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கோபம் அடைந்துள்ளார்.
இதன் எதிரொலியாக, சமீபத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ட்ரம்ப் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல் கடும் வாக்குவாதமாக மாறியதாக அமெரிக்க ஊடகமான ‘ஆக்ஸியோஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. தொலைபேசி உரையாடலின்போது நெதன்யாகுவை மிகக் காரசாரமான வார்த்தைகளால் திட்டிய ட்ரம்ப், அவர் நன்றி கெட்டவர் என்றும் சாடினார்.
நெதன்யாகுவின் ஊழல் வழக்கைக் குறிப்பிட்டு, “நான் மட்டும் இல்லையென்றால் நீ இப்போது சிறையில் இருந்திருப்பாய். நான்தான் உன்னைக் காப்பாற்றுகிறேன். ஆனால், உன்னுடைய இந்த நடவடிக்கையால் இப்போது உலக நாடுகள் அனைத்தும் உன்னையும், இஸ்ரேலையும் வெறுக்கின்றன. நீ ஒரு பைத்தியக்காரன்” என்று ட்ரம்ப் ஆவேசமாகப் பேசினார். இந்தத் தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, லெபனான் மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்த வேண்டாம் என்ற தனது கோரிக்கையை நெதன்யாகு ஏற்றுக்கொண்டதாக ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.