

தெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலைத் தொடங்கியது. அமெரிக்க ராணுவ, விமான, கடற்படைத் தளங்களை குறிவைத்து ஏவுகணைகளை வீசி வருவதால, மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நீடிக்கிறது.
ஈரானில் மதத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி (88) தலைமையிலான ஆட்சியில் அணுகுண்டுகள் தயாரிக்க முயற்சி நடப்பதாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. கடந்த 2025 ஜூன் மாதம் ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதில் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் உள்ளிட்ட அணுசக்தி தளங்கள் தரைமட்டமாகின.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கமேனி ஆட்சிக்கு எதிராக ஒரு தரப்பினர் நடத்திய போராட்டத்தில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்தார். மத்திய கிழக்கில் அமெரிக்க போர்க் கப்பல்கள், போர் விமானங்கள் குவிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, ஈரான் அணு ஆயுத திட்டத்தை கைவிட மறுப்பதாக கூறி இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா இப்போது அந்நாட்டின் மீது தீவிரத் தாக்குதலை நடத்தி வருகிறது.
ஈரான் தலைநகர் தெஹ்ரான் மற்றும் இஸ்பகான், லோரஸ்தான், இலாம், கெர்மன்ஷா, குவாம், கராஜ், தப்ரிஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அணுசக்தி தளங்கள், ராணுவ தளங்களை குறிவைத்து அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. தெஹ்ரானில் உள்ள கமேனியின் வீடு, அலுவலகம், ராணுவ அலுவலகம், உளவுத் துறை அலுவலகத்தை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இஸ்ரேல், அமெரிக்காவின் தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் பலியானதாக தகவல்கள் வெளிவருகின்றன. குறிப்பாக, ஹார்மோஸ்கன் மாகாணம் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப் பள்ளியில் சில குண்டுகள் விழுந்ததில் மாணவிகள் உட்பட 85 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈரான் பதில் தாக்குதல்:
அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலைத் தொடங்கியது. இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, ஜெருசலேம் நகரங்கள் மற்றும் வடக்கு, மத்திய, தெற்கு பகுதிகளில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியது.
ரியாத், தோஹா, அபுதாபி, குவைத் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ, விமான, கடற்படைத் தளங்களை குறிவைத்து 400-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியது. இதில் பெரும்பாலான ஏவுகணைகள் நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்டன.
சவுதி கண்டனம்
ஈரான் ஏவுகணை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சவுதி அரேபியா, ‘ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், கத்தார், குவைத் மற்றும் ஜோர்டான் மீது ஈரான் நடத்திய தாக்குதல் இறையாண்மை விதிமீறல். இந்த தாக்குதல் தொடர்ந்தால் ஈரான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என தெரிவித்துள்ளது.
வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர் தாக்குதல் நடத்தினால், வளைகுடா நாடுகள் ஒன்றிணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அபாயமும் எழுந்துள்ளது.
புர்ஜ் கலீஃபா கட்டிடம்
ஈரானின் ஏவுகணை தாக்குதல் காரணமாக அமீரகத்தின் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டு உள்ளது. துபாயில் உள்ள உலகின் மிக உயரமான புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் 900-க்கும் மேற்பட்ட சொகுசு வீடுகள் உள்ளன. ஈரான் ஏவுகணை அச்சுறுத்தல் காரணமாக புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் வசிக்கும் மக்கள் நேற்றிரவு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வளைகுடா நாடுகளில் பதற்றம்
அமெரிக்க கடற்படையின் 5-வது படைப் பிரிவு பஹ்ரைனில் உள்ளது. இதனால் பஹ்ரைன் மீது ஈரான் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) அபுதாபியில் உள்ள அல் தர்பா விமானப் படை தளத்தை யுஏஇ விமானப் படை மற்றும் அமெரிக்க விமானப் படை ஆகியவை பகிர்ந்துள்ளன. இதனால் யுஏஇ நோக்கியும் ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
துபாயின் ஜெபல் அலி துறைமுகத்தில் அமெரிக்க கடற்படை முகாம் உள்ளது. மத்திய கிழக்கு பகுதிக்கு செல்லும் அமெரிக்க போர்க் கப்பல்களுக்கு இங்குதான் எரிபொருள் உட்பட அனைத்து பொருட்களும் விநியோகம் செய்யப்படுகின்றன. அதனால் துபாய் மீது ஈரான் நேற்று ஏவுகணைகளை வீசியது.
கத்தார் நாட்டின் தோஹா நகரில் உள்ள அல் உதித் விமானப் படை தளத்தில் அமெரிக்க விமானப் படையின் மத்திய கட்டுப்பாட்டு தலைமையகம் உள்ளது. இதனால் தோஹா மீதும் ஈரான் ஏவுகணைகளை வீசியது.
சவுதி அரேபியாவில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 2,000 பேர் முகாமிட்டுள்ளனர். இதனால் ரியாத் நோக்கி ஈரான் ஏவுகணைகள் பாய்ந்தன. ஈரான் ஏவுகணைகள், துபாய், தோகா, ரியாத் ஆகிய நகரங்களில் விழுந்து வெடித்ததால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.