

கொல்கத்தா: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இன்று இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியே அரை இறுதிக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இப்போட்டியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வருகின்றன. லீக் சுற்று போட்டிகள் முடிந்து தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தா மைதானத்தில் நடைபெறும் கடைசி சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் மோதவுள்ளன.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணியே அரை இறுதிக்கு முன்னேறவுள்ளதால் போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் 8 சுற்றில் இரு அணிகளுமே தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் களம் காண்கிறது. சூப்பர் 8 சுற்றின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி கண்டது. இதைத் தொடர்ந்து 2-வது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டது.
ஜிம்பாப்வேயுடனான ஆட்டத்தின்போது தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 55 ரன்களைக் குவித்தார். டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் முதல் 3 ஆட்டங்களில் ரன் எடுக்காமலும், 4-வது ஆட்டத்தில் 15 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்த அபிஷேக் சர்மா ஃபார்முக்குத் திரும்பியிருப்பது அணிக்கு புத்துணர்ச்சியை அளித்துள்ளது. இது அணிக்கு கூடுதல் பலமாக விளங்குகிறது. எனவே, இன்றைய ஆட்டத்திலும் அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தைக் காண முடியும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் அபிஷேக் சர்மாவிடமிருந்து மற்றுமொரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆட்டத்தில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அதிரடி காட்டிய சஞ்சு சாம்சனிடமிருந்து மற்றுமொரு சிறப்பான இன்னங்ஸ் வெளிப்பட வாய்ப்புள்ளது.
அதேபோல் கேப்டன் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோரிடமிருந்து மிகச்சிறந்த ஆட்டம் வெளிப்பட வாய்ப்புள்ளது. கடந்த ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் அதிரடியாக விளையாடி அரை சதமடித்த ஹர்திக் பாண்டியா, 16 பந்துகளில் 44 ரன்கள் குவித்த திலக் வர்மா ஆகியோரும் மேற்கு இந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.
இறுதிகட்ட ஓவர்களில் ஷிவம் துபே, அக்சர் படேல் ஆகியோரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும். அதேபோல் பவுலிங்கிலும் இந்திய அணி வீரர்கள், எதிரணி வரிசைக்கு அழுத்தம் கொடுக்கத் தயாராக உள்ளனர். கடந்த ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் பந்துவீசி 24 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஜஸ்பிரீத் பும்ரா விக்கெட்டை வீழ்த்தவில்லையென்றாலும் 3 ஓவர்கள் பந்துவீசி 21 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ரன்களை வெகுவாகக் கட்டுப்படுத்தினார்.
ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே ஆகியோரும் எதிரணி பேட்ஸ்மேன்களின் மட்டை வீச்சுக்கு முட்டுக்கட்டை போடக்கூடும். சுழல்பந்துவீச்சு மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்யும் வகையில் பந்துவீச அக்சர் படேலும், வருண் சக்ரவர்த்தியும் காத்திருக்கின்றனர்.
இந்திய அணியைப் போலவே, மேற்கு இந்தியத் தீவுகள் அணியும், இந்தப் போட்டியில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பிரண்டன் கிங், ஷாய் ஹோப், ஷிம்ரன் ஹெட்மயர், ரோமன் பாவெல், ஷெர்பான் ருதர்போர்ட், ஜேசன் ஹோல்டர் ஆகியோர் எதிரணியின் பந்துவீச்சை சிதறடிக்கக் கூடியவர்கள்.
எந்தவொரு நிலையில் இருந்தும் ஆட்டத்தின் போக்கையே மாற்றக்கூடிய வீரர்கள் மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் இடம்பிடித்துள்ளனர். எனவே, மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் பேட்டிங் வரிசை, இந்திய அணியின் பந்துவீச்சுக்கு சிம்மசொப்பனமாக இருக்கும்.
அதைப் போலவே மேத்யூ போர்ட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேசன் ஹோல்டர், ஷமார் ஜோசப், குடகேஷ் மோடி, ராஸ்டன் சேஸ் ஆகியோரும் இந்திய அணியின் பேட்டிங் வரிசையை சோதனைக்குள்ளாக்க காத்திருக்கின்றனர்.
இரு அணிகளுமே வெற்றிக்காக கடுமையாக மோதும் என்பதால் ரசிகர்களுக்கு மிகச்சிறப்பான விருந்து காத்திருக்கிறது.
இடம்: கொல்கத்தா, நேரம்: இரவு 7 மணி