

டெஹ்ரான்/ வாஷிங்டன்: ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா, சீனா, ரஷ்யா உட்பட 5 நட்பு நாடுகளின் சரக்கு கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிடையே, போர் நிறுத்தம் ஏற்படுத்த ட்ரம்ப் அறிவித்த 15 அம்ச திட்டம் நியாயமற்றது. பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்யவில்லை என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்.28-ம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய், எல்பிஜி எரிபொருள் கொண்டு செல்லும் கப்பல்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. ஒரு சில கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதனால் நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் அங்கு காத்துக் கிடந்தன.
இந்திய கப்பல்களுக்கு அனுமதி வழங்கும்படி ஈரான் அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதேபோல, ஈரானின் நட்பு நாடுகளும் பேச்சு நடத்தின. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா மற்றும் ஈராக் ஆகிய நட்பு நாடுகளின் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி கூறும்போது, ‘‘ஈரான் போர் சூழலில் உள்ளது. மேற்கு ஆசியா போர்க்களமாக உள்ளது. இதனால், இங்கு எதிரி நாடுகளின் கப்பல்கள் செல்ல அனுமதிக்க முடியாது. மற்றவர்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தி திறந்தே உள்ளது’’ என்றார்.
‘உச்ச தலைவராக நியமிக்க ஆசை’ - அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் ஆளும் குடியரசுக் கட்சி சார்பில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் அதிபர் ட்ரம்ப் கூறியதாவது: அமெரிக்கா - ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஈரானின் உச்ச தலைவராக என்னை நியமிக்க அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் நான் மறுத்துவிட்டேன். அமெரிக்க பிரதிநிதிகளுடன் ஈரான் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவுடன் வெகுவிரைவாக அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஈரான் விரும்புகிறது. ஆனால், ஈரான் பிரதிநிதிகளால் இதை வெளிப்படையாக கூற முடியவில்லை. ஈரான் ஆட்சியாளர்கள், ராணுவதளபதிகள் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வருகின்றனர். உயிர்பயம் காரணமாக ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய்ய ஈரான் பிரதிநிதிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் இதை பகிரங்கமாக அறிவித்தால் சொந்த நாட்டு மக்கள் அடித்துக் கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சுகின்றனர். ஒருவேளை, ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து, போரை நிறுத்த ஈரான் மறுத்தால் அந்த நாடு நரகமாக மாறும். இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.
போரை நீண்ட காலம் நீட்டிக்க ட்ரம்ப் விரும்பவில்லை. அடுத்த சில வாரங்களில் போர் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கிடையே, 5 நாட்கள் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்று ட்ரம்ப் கடந்த 23-ம் தேதி அறிவித்தார். போரை முடிவுக்கு கொண்டுவர, 15 அம்ச திட்டத்தையும் அறிவித்தார்.
இந்நிலையில், இந்த திட்டம் ஒருதலைப்பட்சமானது என்று ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: அமெரிக்காவின் 15 அம்ச போர் நிறுத்த திட்டம் பாகிஸ்தான் மூலம் தெரிவிக்கப்பட்டது. இதை ஈரான் ஆய்வு செய்தது. ஈரான் தனது பாதுகாப்பு திறனை கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் போர் நிறுத்ததிட்டம் ஒருதலைப்பட்சமானது, நியாயமற்றது. இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நலனுக்குத்தான் உதவும்.
ஈரான் - அமெரிக்கா இடையே சமரசம் செய்யும் முயற்சியில் துருக்கி, பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளன. நியாயமான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா முன்வர வேண்டும். ஆனால், முறையான பேச்சுவார்த்தைக்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை’’ என்றார். ‘‘தோல்வியை ஈரான் ஏற்க வேண்டும் இல்லாவிட்டால், இன்னும் கடுமையாக தாக்கப்படும்’’ என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.