

வாஷிங்டன்: ஈரான் உடனான போர் 26 நாட்களை எட்டியுள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் அரசு ஒப்பந்தம் செய்துகொள்ளத் தன்னிடம் கெஞ்சிக் கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வியாழக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், ஈரான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தாலும், அமெரிக்கா இனி ஒப்பந்தம் செய்ய முன்வருமா என்பது சந்தேகமே என்று குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர், “இந்தப் போரை முடிக்க நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகும் என்று கணித்திருந்தோம். ஆனால் 26 நாட்களிலேயே இலக்குகளை விஞ்சி, கால அட்டவணையை விட வெகுவாக முன்னேறியுள்ளோம். ஈரானியர்கள் மோசமான போர்வீரர்கள், ஆனால் சிறந்தப் பேச்சாளர்கள். ஈரான் தனது அணுசக்தி கனவுகளை நிரந்தரமாகக் கைவிட்டால் மட்டுமே புதிய பாதை பிறக்கும், இல்லையெனில் அமெரிக்கா அவர்களின் மிக மோசமான கனவாக" மாறும்” என்று தெரிவித்துள்ளார்
இதற்கிடையே, அமெரிக்கா முன்வைத்துள்ள 15 அம்ச போர் நிறுத்த ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமானது என்று ஈரான் தெரிவித்துள்ளது. தூதரக ரீதியான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும், அமெரிக்காவின் கடுமையான நிபந்தனைகளை ஏற்க ஈரான் தயக்கம் காட்டி வருகிறது.
முன்னதாக, ஈரானின் பந்தர் அப்பாஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் கடற்படைத் தளபதி அலிரெசா டங்சிரி கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். அவருடன் சேர்ந்து ஈரானின் மூத்த கடற்படைத் தளபதிகள் பலரும் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும், இது குறித்து ஈரான் ராணுவம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
ஒரு மாத காலமாக நீடித்து வரும் இந்தப் போரில் இதுவரை ஈரானில் 1,900-க்கும் அதிகமானோரும், லெபனானில் சுமார் 1,100 பேரும் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் மற்றும் இதர பகுதிகளில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அமெரிக்கத் தரப்பில் இதுவரை 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஈரான் மற்றும் லெபனானில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இடம்பெயர்ந்துள்ளனர்.