போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக அமெரிக்கா சென்றார் ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி

போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக அமெரிக்கா சென்றார் ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி
Updated on
1 min read

நியூயார்க்: ஈரான் - அமெரிக்கா இடையே போர் தொடங்கிய பிறகு ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி முதல் முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க் நகரில் நடைபெறும் ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் அவர் கலந்துகொள்ள உள்ளார்.

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கியது. அமெரிக்காவின் முதல் நாள் தாக்குதலிலேயே ஈரானின் உச்ச தலைவராக இருந்த கமேனி கொல்லப்பட்டார். தொடர்ந்து அமெரிக்கா ஈரானின் பல்வேறு நிலைகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்தியது. இதற்கு பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளை குறிவைத்து ஈரானும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் பல மாதங்கள் நீடித்த நிலையில், கடந்த ஜூன் 17ம் தேதி இரு நாடுகள் இடையே தற்காலிக அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. எனினும், அதன் பிறகும் அவ்வப்போது இருதரப்புக்கும் இடையே தாக்குதல்கள் நிகழ்ந்தன.

இந்நிலையில், போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகருக்குச் சென்றுள்ள அவர், அங்கு நடைபெற உள்ள ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.

அப்பாஸ் அராக்சி நியூயார்க் சென்றது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய், “ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர உச்சிமாநாட்டு விவாதங்களில் பங்கேற்பதற்காக தூதரகக் குழுவின் தலைவராக நியூயார்க் நகருக்கு வந்துள்ளார்.

ஐநா பொதுச் சபையின் பல்வேறு அமர்வுகளில் பங்கேற்று ஈரானின் நிலைப்பாட்டை முன்வைப்பதுடன், உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளையும் சந்தித்து அராக்சி ஆலோசனை நடத்த உள்ளார்.” என தெரிவித்துள்ளார்.

தனது நியூயார்க் பயணம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பாஸ் அராக்சி, “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஆட்சியால் எங்கள் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற போர் மற்றும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, சொல்லப்போனால் போர்ச் சூழல் தொடர்ந்து நிலவும் நிலையில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

முதலாவதாக, ஐக்கிய நாடுகள் சபை போன்ற ஒரு பெரிய சர்வதேச அரங்கில் பங்கேற்று, ஈரானிய மக்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதே எங்கள் முதன்மையான நோக்கம்.” என தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் நடைபெற உள்ள ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் அமெரிக்கா செல்கிறார். நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ள பொதுச் சபையில் மசூத் பெசெஷ்கியான் பங்கேற்று உரையாற்றுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

போர் தொடங்கிய பிறகு முதல்முறையாக அமெரிக்கா சென்றார் ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி
‘மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சியா?’ - வன்னியரசின் கருத்துக்கு கிருஷ்ணசாமி கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in