‘மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சியா?’ - வன்னியரசின் கருத்துக்கு கிருஷ்ணசாமி கண்டனம்

விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என எச்சரிக்கை
‘மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சியா?’ - வன்னியரசின் கருத்துக்கு கிருஷ்ணசாமி கண்டனம்
Updated on
2 min read

சென்னை: சமூக நீதி - அரசு மாணவர் விடுதிகளில் மாட்டுக்கறி விநியோகம் குறித்து பரிசீலிக்கப்படும் என கூறியுள்ள அமைச்சர் வன்னியரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கிருஷ்ணசாமி, இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம் என எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் சமூகநீதித் துறையின்கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கிப் பயில்வதற்காக ஆயிரக்கணக்கான உண்டு உறைவிடப் பள்ளிகளும், விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.

பள்ளி மாணவர்களுடைய உடல்நலம் மற்றும் மனநலம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்த 1996 - 2001 காலகட்டத்தில் தொடர்ந்து குரல்கொடுத்து, வெறும் 150 ரூபாயாக இருந்த மாணவர்களுக்கான மாதாந்திர உணவுக் கட்டணம் 450 ரூபாயாக மூன்று மடங்கு உயர்த்திக் கொடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. அதன் காரணமாக மாணவர்களுக்குத் தரமான உணவு வழங்கப்பட்டது.

இப்பொழுது அதற்குப் பிறகு ஏறக்குறைய 30 வருடங்கள் ஆகிவிட்டன. இன்றைய விலைவாசியின் அடிப்படையில், மாணவர்களுடைய உணவுக் கட்டணம் கணிசமான அளவு உயர்த்தப்பட்டிருக்கிறது.

பொதுவாக உணவு வழங்குவதில் புரதச்சத்துக்கள் கணிசமான அளவுக்கு இடம்பெற வேண்டும். புரதச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்புச்சத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் இடம்பெற வேண்டும். அதைச் சரிசெய்வதற்காகவே தினமும் முட்டை வழங்குதல் மற்றும் வாரத்திற்கு இருமுறையாவது கோழி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

உணவுப் பழக்கவழக்கங்கள் ஒவ்வொரு தனிநபருக்கும், குடும்பத்திற்கும், சமுதாயங்களுக்கும் மாறுபடுகிறது. அசைவப் பிரியர்களில் கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி ஆகியவற்றை பெரும்பாலானோர் விரும்பி ஏற்றுக்கொள்வர்.

மாட்டிறைச்சி என்பது நமது தமிழகத்தில் பொதுவான உணவு அல்ல; அது நமது கலாச்சாரத்திலும் இல்லை. அது சில தனிப்பட்ட நபர்கள், குடும்பங்கள், சமூகங்களுடைய பழக்கவழக்கங்கள் ஆகும். அது அவர்களுடைய சொந்த விருப்பம்.

ஆனால் பல்வேறு தரப்பட்ட மாணவர்கள் பயிலும் சமூகநீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்ற வன்னியரசின் கருத்து, தனது தனிப்பட்ட விருப்பத்தை சில மாணவர்களுடைய கோரிக்கை என்பதைப் போலப் பேசி ஒரு பொது விவாதத்திற்குக் கொண்டுவந்துள்ளார். அதுபோன்ற ஒரு தவறான, விபரீதமான முடிவை ஜெயராஜ் என்ற வன்னியரசு எடுத்துவிட மாட்டார் என்று கருதுகிறோம்.

அவர் ஓர் அமைப்பினுடைய பொறுப்பாளர் என்ற வகையிலே கடந்த காலங்களிலே பொதுவெளியில் பேசியது என்பது வேறு. மாட்டிறைச்சி மேளா நடத்தியது என்பதெல்லாம் வேறு; அப்போதே நாம் கண்டித்திருகிறோம். ஆனால், இப்பொழுது அமைச்சர் பொறுப்பிலே அமர்ந்துகொண்டு, தங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளை ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீது திணிக்க எத்தனிக்கக் கூடாது.

மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சி குறித்து பரிசீலிக்கப்படும் என்ற கருத்தை அவர் கூறியதே தவறானது; குற்றமானது; கண்டிக்கத்தக்கது; தண்டிக்கத்தக்கது. அது எந்தவிதமான பரிசீலனைக்கும் எடுத்துக்கொள்வதற்குத் தகுதியற்றது. உடனடியாக அந்த கருத்தை அவர் திரும்பப் பெற வேண்டும்.

ஒருவேளை அதை அமல்படுத்துவதற்கு உண்டான ஏதாவது செயலில் ஈடுபடும் பட்சத்தில், அவர் எதிர்பாராத கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதையும், அமைச்சரவை இருக்கையிலேயே அமர முடியாத சூழ்நிலைகூட ஏற்படும் என்பதையும் எச்சரிக்கை செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம். எனவே, வன்னியரசு மாட்டுக்கறி குறித்த தனது கருத்தை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்துகிறேன்.”என தெரிவித்துள்ளார்.

‘மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சியா?’ - வன்னியரசின் கருத்துக்கு கிருஷ்ணசாமி கண்டனம்
தங்கம் விலை பவுனுக்கு ரூ.680 குறைவு: இன்றைய விலை நிலவரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in