

ஆக்ஸ்போர்டு: ஐபிஎல் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி, தான் அதிகாரப்பூர்வமாக இங்கிலாந்து குடிமகனாக மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு யூனியனில் உரையாற்றிய லலித் மோடி, தான் இங்கிலாந்து குடிமகனாக மாறியுள்ளதாக அறிவித்தார். மேலும், பிரிட்டிஷ் குடியுரிமையைப் பெறுவதற்கான தனது பயணம் மற்றும் இங்கிலாந்துடனான தனது நீண்டகாலத் தொடர்பு குறித்தும் பேசினார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள லலித் மோடி, ‘செப்டம்பர் 15 அன்று ஆக்ஸ்போர்டு யூனியனில் நடைபெற்ற ஒரு சிறப்பு விழாவில் எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் இங்கிலாந்து குடியுரிமை பெற்றதைக் கொண்டாடினேன். பல ஆண்டுகளாக இங்கிலாந்துதான் எனது இல்லமாக இருந்து வருகிறது. அந்நாட்டு மக்கள், நிறுவனங்கள், மரபுகள் மற்றும் விழுமியங்கள் மீது எனக்கு மிகுந்த மதிப்பும் அன்பும் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து குடிமகனாக மாறுவது ஒரு பாக்கியம்; அதே சமயம் அது ஒரு பொறுப்பும் கூட. இதை நான் பெருமையுடனும், நன்றியுணர்வுடனும் ஏற்றுக்கொள்கிறேன். எனது வீடான இந்த நாட்டிற்கு ஆக்கபூர்வமான பங்களிப்புகளை வழங்க ஆவலாக உள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட்டின் நிறுவனரான லலித் மோடி, ஐபிஎல் தொடர்பான நிதி முறைகேடு புகார்கள் குறித்த விசாரணைகள் நடந்தபோது, 2010-ம் ஆண்டில் இந்தியாவிலிருந்து வெளியேறினார். அப்போது முதல் அவர் இங்கிலாந்திலேயே வசித்து வருகிறார்.