

சென்னை: “வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது நவ.17ம் தேதி தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது” என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், “நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இன்று (நவ.15) காலை 05:30 மணி நிலவரப்படி, இது தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 3 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் ஏறக்குறைய வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் திரிகோணமலையிலிருந்து கிழக்கே சுமார் 630 கி.மீ தொலைவிலும், ஸ்ரீ விஜயபுரத்திலிருந்து (அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்) மேற்கு-தென்மேற்கே 690 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்கே 840 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 1010 கி.மீ தொலைவிலும், ஒடிசாவின் கோபால்பூரிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 1130 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது மேலும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 16 அன்று தெற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய-மேற்கு வங்கக் கடற்பகுதியில் 'அக்வான் புயலாக' வலுவடையக்கூடும். தொடர்ந்து, நவம்பர் 17 அன்று மத்திய-மேற்கு வங்கக் கடற்பகுதியில் 'தீவிர புயலாக' வலுவடைய வாய்ப்புள்ளது.
அதன்பிறகு, இது மேலும் வலுவடைந்து, அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.