

லண்டன்: பிரிட்டன் தலைநகர் லண்டனை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண் வர்ஷாவுக்கும், மூத்த வழக்கறிஞர் பத்ரேஷுக்கும் 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு 3 பிள்ளைகள் பிறந்தன.
அதன்பின் பல பெண்களுடன் பத்ரேஷுக்கு தொடர்பு ஏற்பட்டதால் 2002-ம் ஆண்டில் லண்டனில் உள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வர்ஷா வழக்கு தொடர்ந்தார். அப்போது அவருக்கு ரூ.3.5 கோடி ஜீவனாம்சம், ஒரு கார் வழங்கப்பட்டது. இருவரும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர்.
ஆனால், கடந்த 2011-ல் பத்ரேஷ் பண மோசடி வழக்கில் சிக்கிய போது அவருக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கூடுதல் ஜீவனாம்சம் கேட்டு லண்டன் நீதிமன்றத்தில் வர்ஷா மீண்டும் வழக்கு தொடர்ந்தார். விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவை வர்ஷாவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதை எதிர்த்து பத்ரேஷ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வில்லியம்ஸ், ‘‘ வருமானத்தை மறைத்து மனைவிக்கு குறைந்த ஜீவனாம்ச தொகையை பத்ரேஷ் வழங்கியுள்ளார். எனவே, அவருக்கு ரூ.85 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இதன்படி சுமார் 23 ஆண்டுக்குப் பிறகு வர்ஷா ரூ.85 கோடி ஜீவனாம்சத்தைப் பெற்றிருக்கிறார்.