கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு: ஜூன் 23 வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவு

கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு: ஜூன் 23 வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவு
Updated on
2 min read

சென்னை: கடந்த திமுக ஆட்சி காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட பணி நியமனங்களுக்கு ரூ.634 கோடி வரை லஞ்சம் பெற்று முறைகேடாக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது.

அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக எம்.பி ஐ.எஸ்.இன்பதுரை வழக்கு தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது. ஆனால், லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்யவில்லை எனக்கூறி, உயர்நீதிமன்றத்தில் இன்பதுரை அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதேபோல் வழக்குப்பதிவு செய்ய பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கே.என்.நேரு மற்றும் தமிழக அரசு தரப்பிலும் மறுஆய்வு மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டி ருந்தன. இதன் மீதான விசாரணை ஜூன் 23-க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேரு தரப்பில் ஆஜரான மூத்தவழக்கறிஞர் பி.எச்.அர்விந்த் பாண்டியன் முறையீடு செய்தார்.

அப்போது அவர், ‘‘இதற்கு முன்பாக இருந்த அரசு தலைமை வழக்கறிஞர், இந்த வழக்குகள் விசாரணைக்கு வரும்வரை எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டோம் என ஏற்கெனவே நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தி ருந்தார்’’ என்றார்.

அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ‘‘நகராட்சி பணி நியமனங்களில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை ஆதாரப்பூர்வமாக அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் கே.என்.நேரு உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி. ‘‘இந்த விவகாரம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட வழக்குகள் இம்மாத இறுதியில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அதுவரை எந்தநடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என முந்தைய அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவாதம் அளித்திருந்தார்.

ஆனால் அதை மீறி தற்போது எதற்காக அவசர கதியில் வழக்குப்பதிவு செய்துள்ளீர்கள்?’’ என கேள்வி எழுப்பினார். அதற்கு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘‘முந்தைய அரசு தலைமை வழக்கறிஞர் அளித்துள்ள உத்தரவாதம், தற்போது எங்களைக் கட்டுப்படுத்தாது. மேலும் வாய்மொழியாகவே அவர் உத்தரவாதம் அளித்துள்ளார்.

அதுதொடர்பாக எனக்கு தெரியாது’’ என்றார். அதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் விசாரணைக்கு வந்த போது அடுத்த விசாரணை வரை எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என முந்தைய அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவாதம் அளித்திருந்தார்.

எனவே தற்போதைய சூழலில் லஞ்ச ஒழிப்புத்துறையின் மேல் நடவடிக்கையை நிறுத்திவைப்பதால் அரசுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடாது. எனவே இந்த வழக்கில் ஜூன் 23 வரை யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு: ஜூன் 23 வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது என நீதிபதிகள் உத்தரவு
மாநிலங்களவை இடைத்தேர்தலில் தவெக ஆதரவில் காங்கிரஸ் போட்டி: விஜய் முன்னிலையில் பிரவீன் சக்ரவர்த்தி வேட்புமனு தாக்கல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in