

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவின் நாசா விண்வெளி வீரர் அனில் மேனன் கடந்த ஜூலை 14-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார். மருத்துவரான அவர் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளார்.
தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தின் வெளிப்புறம் பொருத்தப்பட்டு இருக்கும் சூரிய மின் உற்பத்திக்கான சாதனத்தில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டிய அவசியம் எழுந்தது. இதற்காக நாசாவை சேர்ந்த விண்வெளி வீராங்கனை ஜெசிகாவும் இந்திய வம்சாவளி வீரர் அனில் மேனனும் நேற்று விண்வெளியில் நடந்து சூரிய மின் உற்பத்தி சாதனத்தில் தேவையான மாற்றங்களை செய்தனர். இருவரின் விண்வெளிநடை, சுமார் 7 மணி நேரம் வரை நீடித்தது.
இதுகுறித்து நாசா விஞ்ஞானிகள் கூறியதாவது: சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயல்பாட்டுக்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படுகிறது. இதற்காக விண்வெளி நிலையத்தின் வெளிப்புறம் உள்ள 3பி பவர் சேனல் சாதனத்தில் நாசா விண்வெளி வீரர்கள் மாற்றங்களை செய்து உள்ளனர். இதன்மூலம் கூடுதல் சூரிய மின்சார தகடுகளை பதிக்க முடியும்.
இந்த ஆண்டு இறுதியில் 3பி பவர் சேனலில் கூடுதல் தகடுகளை பதிக்க திட்டமிட்டு உள்ளோம். அப்போதும் நாசா வீரர்கள், விண்வெளி நடையை மேற்கொள்வார்கள். விண்வெளி நிலையத்துக்கு முதல்முறையாக சென்றுள்ள அனில் மேனன் முதல்முறை வெற்றிகரமாக விண்வெளி நடையை மேற்கொண்டு உள்ளார். ஜெசிகாவுக்கு இது 6-வது விண்வெளி நடை ஆகும். இவ்வாறு நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.