

தி ஹாக்: ஒலிம்பிக் போட்டி நடத்துவது, உலக உற்பத்தி மையமாக இருப்பது உட்பட இந்தியாவுக்கு மிகப் பெரிய ஆசைகள் உள்ளன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி 5 நாடுகள் பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடி எல்பிஜி, கச்சா எண்ணெய் விநியோகம், சேமிப்பு தொடர்பான ஒப்பந்தங்களை மேற்கொண்டார். அங்கிருந்து அவர் நெதர்லாந்து சென்றார். தி ஹாக் நகரில்
அங்குள்ள இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது: வளர்ச்சியடைந்த நாடுகள் போல், ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியாவும் விரும்புகிறது. அதேபோல் உலகளாவிய உற்பத்தி மையமாகவும் பசுமை எரிசக்தி மையமாகவும் உலக பொருளாதார வளர்ச்சி மையமாகவும் இருக்க இந்தியா விரும்புகிறது.
இந்தியாவின் ஆசைகள், எண்ணங்கள், முயற்சிகளுக்கு எல்லையே இல்லை. எல்லா பொருட்களும் ‘மேக் இன் இந்தியா’-வாக இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கிறோம். இதன் மூலம் இந்தியா உலகளாவிய உற்பத்தி மையமாக மாறும்.
இந்திய இளைஞர்கள் நவீன தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குகின்றனர். அவர்களின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வளர்ச்சியடைந்து வருகின்றன. செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பாதுகாப்பு, விண்வெளித் துறை ஆகிய அனைத்திலும் சிறப்புடன் செயல்படும் இந்திய இளைஞர்களுக்கு நன்றி. இந்தியா செமி கண்டக்டர் மையமாக மாறி வருகிறது. தற்போது 12 செமி கண்டக்டர் மையங்கள் இந்தியாவில் அமைக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் இரண்டில் உற்பத்தி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. தற்போது கம்ப்யூட்டர் சிப்ஸ்கள் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. செல்போன் உற்பத்தியில் புரட்சி ஏற்பட்டு, உலக செல்போன் உற்பத்தியில் இந்தியா 2-வது பெரிய நாடாக உள்ளது.
மிகப் பெரிய ஏஐ உச்சி மாநாடு இந்தியாவில் கடந்தாண்டு வெற்றிகரமாக நடைபெற்றது. பசுமை எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க எனது ஆட்சியில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இந்தியாவில் அமைக்கப்படும் சோலார் பூங்காக்கள் உலகின் மிகப் பெரிய சோலார் பூங்காக்களில் ஒன்றாக உள்ளன.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் பிரேசிலை பின்னுக்கு தள்ளி இந்தியா 3-ம் இடம் பிடித்துள்ளது. அடுத்த 2036-ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. இதற்காக நெதர்லாந்துடன் கிரிக்கெட் மற்றும் ஹாக்கி விளையாட்டு போட்டிகளில் ஒத்துழைப்புடன் செயல்பட இந்தியா விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.