

பிரதமர் நரேந்திர மோடிக்கு சீஷெல்ஸ் நாட்டின் மிக உயரிய ‘கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன்’ விருதை அந்த நாட்டு அதிபர் பாட்ரிக் ஹெர்மினி வழங்கினார். படம்: பிடிஐ
விக்டோரியா: சீஷெல்ஸ் நாட்டுக்குச் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் பாட்ரிக் ஹெர்மினியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகள் இடையே கல்வி, பாதுகாப்பு, மீன்வளம், விண்வெளி, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் 19 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சீஷெல்ஸ் தீவின் 50-வது தேசிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதையொட்டி, சீஷெல்ஸ் தலைநகர் விக்டோரியாவுக்கு அவர் நேற்று முன்தினம் சென்றார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடிக்கு சீஷெல்ஸ் நாட்டின் மிக உயரிய ‘கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன்’ விருது வழங்கப்பட்டது.
அந்நாட்டு அதிபர் பாட்ரிக் ஹெர்மினி, விருதை வழங்கி கவுரவித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள், சிறு நாடுகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் அக்கறை காட்டுவது ஆகியவற்றில் பிரதமர் மோடியின் பங்களிப்பை பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதையும் சேர்த்து பிரதமர் மோடி இதுவரை 33 சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார்.
சீஷெல்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நேற்று சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது: எனக்கு வழங்கப்பட்ட ‘கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹொரைசன்’ விருதுக்காக 140 கோடி இந்தியர்கள் சார்பில் சீஷெல்ஸ் மக்களுக்கும், அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சீஷெல்ஸ் நாடு 50-வது தேசிய தினத்தைக் கொண்டாடுகிறது. அத்துடன், இந்தியா - சீஷெல்ஸ் தூதரக உறவின் 50-வது ஆண்டையும் கொண்டாடுகிறோம். இரு நாடுகள் இடையே வர்த்தகம், கலாச்சார ரீதியான உறவு வலுவடைந்து வருகிறது.
கடந்த பிப்ரவரியில் சீஷெல்ஸ் அதிபர் பாட்ரிக் ஹெர்மினி இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அப்போது பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்ற உறுதி மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, சீஷெல்ஸ் நாட்டுக்குத் தேவையான டிஜிட்டல் தொழில்நுட்ப உதவிகளை இந்தியா வழங்கும். இதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் யுபிஐ டிஜிட்டல் பணப் பரிமாற்றத் திட்டத்தை செயல்படுத்த இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
சீஷெல்ஸ் தீவின் வீட்டு வசதி, உணவுப் பாதுகாப்பு, கல்வி, பாதுகாப்பு, அரசு நிர்வாகம் உள்ளிட்ட துறைகளுக்குத் தேவையான உதவிகளை இந்தியா வழங்கும். இந்தியாவின் மக்கள் மருந்தகம் திட்டம் சீஷெல்ஸில் அறிமுகம் செய்யப்படும். இதன்மூலம் இங்குள்ள மக்களுக்கு குறைந்த விலையில் தரமான மருந்துகள் கிடைக்கும். சீஷெல்ஸ் இளைஞர்களுக்கு திறன்சார் பயிற்சி வழங்கப்படும். எரிசக்தி, ஹைட்ரஜன் உற்பத்தி, மீன்வளம், விண்வெளி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். இதுதொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
சீஷெல்ஸ் அதிபர் பாட்ரிக் ஹெர்மினியை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். அப்போது இரு நாடுகள் இடையே 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியா சார்பில் சீஷெல்ஸுக்கு நேற்று அதிநவீன ரோந்து கப்பல் பரிசாக வழங்கப்பட்டது. இந்த ரோந்து கப்பலுடன் 5 ரோந்து படகுகள், 6 ஆம்புலன்ஸ் படகுகளும் வழங்கப்பட்டன. மேலும், இந்தியா சார்பில் 500 டன் அரிசி, 8,500 டன் சிமென்ட் வழங்கப்பட உள்ளது. இந்தியா உதவியுடன் சீஷெல்ஸில் கட்டப்பட உள்ள சிறப்பு தொழில்நுட்ப பயிற்சி மையத்துக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.
யுபிஐ டிஜிட்டல் பணப் பரிமாற்றம், மக்கள் மருந்தகம், வேளாண் துறை, கைதிகள் பரிமாற்றம், சீஷெல்ஸ் கடற்படை வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி, விண்வெளி, சீஷெல்ஸ் தலை நகரில் சிறப்பு மருத்துவமனை கட்டுவது தொடர்பாகவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தமிழர்களின் முக்கியத்துவம்: சீஷெல்ஸ் தீவு நாட்டில் மொத்தம் 115 தீவுகள் உள்ளன. கடந்த 1770-ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 15 பேர் அங்கு குடியேறினர். அவர்களோடு 7 ஆப்பிரிக்கர்கள், 5 இந்தியர்களும் அங்கு குடியமர்த்தப்பட்டனர். இதன்பிறகு இந்தியாவின் தமிழகம், பிஹார், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் சீஷெல்ஸ் தீவில் குடியேறினர். ஆப்பிரிக்க கண்டத்தின் மடகாஸ்கர், தான்சானியா, கென்யா, மொசாம்பிக் நாடுகளை சேர்ந்த மக்களும் அங்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தற்போது சீஷெல்ஸ் நாட்டில் சுமார் 1.35 லட்சம் பேர் வசிக்கின்றனர். இதில் 11 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர். இதில் பெரும்பாலானோர் தமிழர்கள். சீஷெல்ஸின் துணை அதிபர் செபாஸ்டியன் பிள்ளை இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவர். சீஷெல்ஸ் நாட்டில் வசிக்கும் தமிழர்கள், தலைநகர் விக்டோரியாவில் நவசக்தி விநாயகர் கோயிலை பிரம்மாண்டமாக கட்டியுள்ளனர். இந்த கோயிலில் பொங்கல், காவடி திருவிழா, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. சீஷெல்ஸ் மக்கள் தொகையில் 5.5 சதவீதம் பேர் இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.