செர்பிய சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி மாணவர் சக்தி வென்றது எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை

செர்பிய சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி மாணவர் சக்தி வென்றது எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை
Updated on: 
3 min read

கிழக்கு ஐரோப்பிய நாடான செர்பியாவில், 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நோவி சாட் (Novi Sad) ரயில் நிலையத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்து 16 அப்பாவி உயிர்கள் பலியாகின. இந்தத் துயர நிகழ்வு வெறும் விபத்தாக மட்டும் மக்களால் கருதப்படவில்லை. மாறாக, கடந்த 14 ஆண்டுகளாக அந்நாட்டில் நிலவி வந்த சர்வாதிகாரம், லஞ்சம் மற்றும் கட்டமைக்கப்பட்ட ஊழலுக்கு எதிரான மக்களின் கோபக் கனலாக உருவெடுத்தது.

விளைவு, அதிபர் அலெக்சாண்டர் வுசிச்சின் (Aleksandar Vučić) பலம் வாய்ந்த கோட்டையைத் தகர்க்கும் ஒரு வரலாற்றுப் புரட்சியின் தொடக்கமாக இந்த சம்பவம் அமைந்தது.

 ‘கட்சி, தலைமை இல்லா’ உத்தி

ரயில் நிலைய கட்டுமானத்தில் நடந்த ஊழலும், அரசாங்கத்தின் கவனக் குறைவுமே இந்த விபத்துக்குக் காரணம் என மக்கள் குற்றம்சாட்டினர். பல்கலைக்கழக மாணவர்கள் உடனடியாகத் தெருவில் இறங்கி, ஊழல் அதிகாரிகளும் அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தைத் தொடங்கினர்.

2024-ஆம் ஆண்டில் பல்கலைக்கழக அளவில் சாதாரணமாகத் தொடங்கிய மாணவர்களின் போராட்டம், நாளுக்கு நாள் வளர்ந்து பெரும் மக்கள் போராட்டங்களாக உருவெடுத்தது. இந்த இயக்கத்தில், ஆசிரியர்கள், கலைஞர்கள் மற்றும் விவசாயிகள் எனச் சமூகத்தின் மற்ற தரப்பினரும் தங்களை இணைத்துக் கொண்டனர்.

சாலை முற்றுகைகள், நடைபயணங்கள் மற்றும் டிக்டாக், யூடியூப் போன்ற சமூக வலைதளப் பிரசாரங்கள் மூலம் அது தேசிய இயக்கமாகவும் உருவெடுத்தது. “செர்பியாவா அல்லது மாஃபியாவா?” (Serbia or the Mafia?) என்ற மாணவர்களின் முழக்கம் மக்கள் மத்தியில் காட்டுத் தீயாகப் பரவியது.

இந்த ஆட்சியை எதிர்கொள்ள மாணவர்கள் ‘தலைவரற்ற இயக்கம்’ மற்றும் ‘நிபுணர்கள் ஆட்சி’ என்ற உத்தியைக் கையில் எடுத்தனர். இந்தப் புதுமையான உத்தி உலகின் பாரம்பரிய அரசியல் மரபுகளையே உடைத்து எறிந்து உள்ளது. இதனால், போராட்டத்தைக் கட்டுப்படுத்தவோ, அதை வழிநடத்தும் தலைவர்களைக் கைது செய்து இயக்கத்தை முடக்கவோ அரசாங்கத்தால் முடியாமல் போனது.

2 ஆண்டுகளாக தீவிரமடைந்த மக்கள் போராட்டத்தைக் சமாளிக்க முடியாமல், அதிபர் வுசிச் தனது பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவசரமாக தேர்தலை அறிவித்தார்.

கடந்த 2 ஆண்டுகளில் மாணவர்கள் நடத்திய சாலை முற்றுகைகள், 16 நாட்கள் தொடர் நடைபயணங்கள் மற்றும் சமூக ஊடக விழிப்புணர்வுப் பிரசாரங்கள் மூலம் மக்களிடத்தில் கொண்டு செல்லப்பட்ட உண்மைகள், அதிபர் வுசிச்சின் கோட்டையைத் தகர்த்தெறிந்து செர்பியாவின் புதிய விடியலுக்கான கதவைத் திறந்து வைத்துள்ளன.

தேர்தலில் சாதித்த மாணவர்கள்

போராட்டத்தில் வென்ற மாணவர்கள் நேரடியாக அரசியலில் நுழைந்து அதிகாரத்தைக் கைப்பற்ற ஆசைப்படவில்லை. தங்களை வழக்கமான அரசியல் கட்சியாக மாற்றிக் கொள்ளாமல், "Students' List" (மாணவர்கள் பட்டியல்) என்ற பெயரில் ஒரு மக்கள் கூட்டணி இயக்கமாகத் தேர்தலை எதிர்கொண்டனர்.

நாட்டின் சிறந்த 160-க்கும் மேற்பட்ட முனைவர் பட்டதாரிகள், மருத்துவர்கள், பேராசிரியர்கள், நடிகர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட 250 நேர்மையான வல்லுநர்களை வேட்பாளர்களாக நிறுத்தினர். ஊடக சுதந்திரம், ஊழல் எதிர்ப்பு, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் கல்விச் சீரமைப்பு ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து பிரசாரம் செய்தனர்.

2026 அக்டோபரில் நடந்த தேர்தலில், யூகோஸ்லாவியப் பிரிவுக்குப் பின் எப்போதும் இல்லாத அளவாக 70 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இதில் மாணவர்களின் ‘நிபுணர்கள் கூட்டணி’ 53.3 சதவீதம் வாக்குகளுடன் 141 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் வரலாற்று வெற்றி பெற்றது. கடந்த 14 ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த வுசிச்சின் எஸ்என்எஸ் (SNS) கட்சி 103 இடங்களை மட்டுமே பெற்றுத் தோல்வியடைந்தது.

 பொருளாதாரம் மற்றும் வெளியுறவு

பால்கன் பிராந்தியத்தின் வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் செர்பியாவும் ஒன்று. கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு துறைகளின் விரிவாக்கத்தால் 3 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்திருந்தாலும், சீனாவின் அதிக அளவிலான முதலீடுகள், வெளிப்படைத் தன்மையற்ற தனியார் மயமாக்கல் மற்றும் ஊழல் ஆகியவை பொருளாதாரத்திற்குப் பின்னடைவாக இருந்தன.

வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்த வரை, ரஷ்யாவுடன் வரலாற்று ரீதியான நட்புறவையும், எரிபொருள் சார்ந்து நெருக்கத்தையும் செர்பியா கொண்டிருந்தது. அதேநேரத்தில்  ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவுடன் வணிக உறவை வைத்திருந்தது. உக்ரைன் போருக்குப் பின் ரஷ்யா மீது தடைகள் விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் வற்புறுத்தியபோதும் செர்பியா அதனை ஏற்க மறுத்தது.

மேலும், கொசோவோ பிரச்சினையில் ரஷ்யாவும் சீனாவும் ஐ.நா-வில் செர்பியாவுக்கு ஆதரவாகச் செயல்பட்டன. இத்தகைய சிக்கலான சர்வதேச சூழலில்தான் இந்த உள்நாட்டு அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது.

புதிய ஆட்சியும் சர்வதேச எதிர்பார்ப்பும்

நீண்ட காலமாக பால்கன் அரசியலில் ஆதிக்கம் செலுத்திய அலெக்சாண்டரின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது வெற்றி பெற்றுள்ள மாணவர் கூட்டணியின் சார்பில், பிரபல இதயநோய் நிபுணர் டாக்டர் இலியா ஸ்ர்டானோவிச் (Iliya Strdanović) பிரதமராகவும், பொருளாதார நிபுணர் டேஜன் ஷோஸ்கிச் (Dejan Šoškić) முக்கியப் பொறுப்புகளையும் ஏற்கவுள்ளனர்.

‘மாணவர் பட்டியல்’ (Student List) அமைப்பின் வெற்றி

வெற்றி பெற்ற்றிருக்கும் வேட்பாளர்களுக்கு நேரடி அரசியல் அனுபவம் இல்லாததால், அவர்கள் அதிகாரத்திற்கு வந்த பிறகு எவ்வாறு செயல்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

யார் இந்த அலெக்சாண்டர் வுசிச்?

செர்பிய அரசியலில் கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து அலெக்சாண்டர் வுசிச் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். முதலில் பிரதமராகவும், பின்னர் அதிபராகவும் பதவி வகித்தார்.

யூகோஸ்லாவியப் போர்களின் போதும், 1999-ல் ‘நேட்டோ’ செர்பியா மீது குண்டு வீசியபோதும், அவர் ஒரு முக்கிய தீவிர தேசியவாதத் தலைவராக உருவெடுத்தார். பின்னர் அவர் செர்பிய முற்போக்குக் கட்சியை (SNS) நிறுவி மக்களிடம் செல்வாக்குப் பெற்றார்.

அலெக்சாண்டர் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, செர்பியாவைச் சீன முதலீட்டிற்குத் திறந்து விட்டு, தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். பெல்கிரேட் - புடாபெஸ்ட் அதிவேக ரயில் திட்டம் உட்பட சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியாலும் செர்பியா பயனடைந்துள்ளது.

செர்பியா சொல்லும் புதிய செய்தி

ஹங்கேரி போன்ற நாடுகளில் தலைதூக்கும் சர்வாதிகாரப் போக்குக்கு மத்தியில், வன்முறையின்றி ஜனநாயக வழியிலும் தேர்தல் பங்கேற்பின் மூலமும் ஒரு அடக்குமுறை ஆட்சியை வீழ்த்த முடியும் என்பதைச் செர்பிய மாணவர்கள் நிரூபித்துள்ளனர். தலைவரற்ற இயக்கம் மற்றும் நிபுணர்களின் ஆட்சி என்ற புதுமையான உத்தி மூலம், செர்பியாவில் ஒரு புதிய ஜனநாயக விடியல் பிறந்துள்ளது!

செர்பிய சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி மாணவர் சக்தி வென்றது எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை
இஸ்ரேல் தேர்தல் 2026: நெதன்யாகு ஆட்சி வீழ்ந்தால் ஏற்படும் அதிர்வுகள் என்னென்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in