

மத்திய கிழக்குப் போர் வெறும் எல்லை மோதலாக இல்லாமல் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் அமைதியையும் குலைத்துள்ள சூழலில், இஸ்ரேலின் 26-வது நாடாளுமன்ற (Knesset) தேர்தல் அக்டோபர் 27-ம் தேதி நடைபெறுகிறது.
காசா, லெபனான், ஈரான் முப்பரிமாணப் போர், உளவுத் துறைத் தோல்வி, பொருளாதாரச் சரிவு மற்றும் பிணைக் கைதிகளின் உறவினர்களின் கண்ணீர் என பல பிரச்சினைகளோடு காலம் கடத்திய நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
காசாவின் இடிபாடுகளுக்கு அடியிலும், லெபனானின் தீப்பிடித்த வீதிகளிலும், ஈரானின் ஏவுகணை அச்சத்திலும் வாழும் லட்சக்கணக்கான அரபு மக்கள், இஸ்ரேல் ஆட்சி மாற்றம் தங்களுக்குச் சிறிய அளவிலான அமைதியையோ அல்லது நிரந்தர போர் நிறுத்தத்தையோ கொண்டுவராதா என்று ஏங்குகிறார்கள்.
அமெரிக்கா முதல் இந்தியா வரை, அரபு நாடுகள் முதல் ஐரோப்பிய ஒன்றியம் வரை அனைத்து உலக நாடுகளும் டெல் அவிவ் நகரை உற்று நோக்குகின்றன.
இஸ்ரேலிய அரசியலில் ‘தந்திர அரசியல்வாதி’ (Political Houdini) எனப்படும் பெஞ்சமின் நெதன்யாகு இந்த முறை எதிர்க்கட்சிகளை மட்டும் எதிர்கொள்ளவில்லை, தன் ஆட்சியின் பாதுகாப்புத் தோல்வியையும் மக்களின் எதிர்ப்பையும்தான் எதிர்கொள்கிறார்.
நெதன்யாகுவின் வீழ்ச்சி என்பது வெறும் ஒரு தலைவரின் தோல்வி மட்டுமல்ல... அது அமெரிக்காவின் வெளியுறவு உத்தி, இந்தியாவின் சமநிலை ராஜதந்திரம் மற்றும் மேற்கு ஆசியாவின் அமைதிச் சூழல் ஆகிய மூன்றிலும் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடியது.
இஸ்ரேல் தேர்தல்: ஒரு கண்ணோட்டம்
இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மொத்தம் 120 இடங்கள் உள்ளன. ஆட்சி அமைக்க குறைந்தபட்சம் 61 இடங்கள் தேவை. இஸ்ரேல் வரலாற்றில் இதுவரை எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைத்ததில்லை.
கருத்துக் கணிப்பு நிலவரம்:
நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டணிக்கு 48 முதல் 50 இடங்களை மட்டுமே கிடைக்கும் என கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. காடி ஐசன்கோட் மற்றும் நப்தாலி பென்னட் தலைமையிலான எதிர்க்கட்சிக் கூட்டணி 52 முதல் 56 இடங்கள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் கருத்துக் கணிப்பு கூறுகிறது.
அரபுக் கட்சிகளின் ஆதரவு:
அரபுக் கட்சிகள் மற்றும் இதர கட்சிகள் அளிக்கும் ஆதரவைப் பொறுத்தே ஆட்சி அமைப்பது யார் என தீர்மானிக்கப்படும். அரபுக் கட்சிகள் நிச்சயமாக நெதன்யாகுவுக்கு ஆதரவு அளிக்கமாட்டார்கள். அரபுக் கட்சிகளுக்கு 10 இடங்கள் கிடைத்தாலே ஆட்சி மாற்றம் உறுதி.
மக்களின் மனநிலை:
பிரதமர் பதவிக்கான போட்டியில் காடி ஐசன்கோட்டுக்கு 49% ஆதரவும், நெதன்யாகுவுக்கு 41% ஆதரவும் உள்ளது. பொருளாதார நெருக்கடி (34%), பாதுகாப்புத் தோல்வி (32%), பிணையக் கைதிகள் மீட்பில் தோல்வி (18%) ஆகியவை மக்களின் கவலைகளாக உள்ளன.
ஆட்சி மாற்றத்துக்கான 5 சாத்தியக்கூறுகள்:
1. எதிர்க்கட்சிகள் ஆட்சி:
ஐசன்கோட், நாப்தாலி பென்னட் ஆகியோரின் மிதவாத கூட்டணிக் கட்சிகள், அரபு கட்சிகளின் ஆதரவோடு இணைந்து 61+ இடங்களைப் பெற்று புதிய அரசை அமைக்க வாய்ப்பு உள்ளது.
2. தேசிய ஒற்றுமை அரசு:
தீவிர வலதுசாரிகளைத் தவிர்த்து, லிக்குட் கட்சியும் எதிர்க்கட்சிகளும் இணைந்து சுழற்சி முறையில் பிரதமரை நியமிக்கும் ஒற்றுமை அரசை உருவாக்க வாய்ப்பு உள்ளது.
3. நெதன்யாகுவின் கூட்டணித் தந்திரம்:
நெதன்யாகு தனது கூட்டணி தவிர்த்து, தீவிர வலதுசாரி மற்றும் சுயேச்சை எம்.பி-க்களை ஒன்றுதிரட்டி 61 இடங்களுடன் மீண்டும் ஆட்சியில் நீடிப்பதற்கான சாத்தியமும் உண்டு.
4. மறுதேர்தல்:
எந்தக் கூட்டணியாலும் பெரும்பான்மையை எட்ட முடியாமல் போனால் நாடு மீண்டும் தேர்தலைச் சந்திக்க வாய்ப்பு உள்ளது.
5. அவசரநிலை ஆட்சி நீடிப்பு:
நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் காட்டி தேர்தலைத் தள்ளிவைத்து நெதன்யாகு ஆட்சியைத் தொடரவும் வாய்ப்பு இருக்கிறதாம்.
நெதன்யாகு எதிர்கொள்ளும் சவால்கள்:
பொருளாதாரப் பாதாளம்:
போர்ச் செலவுகளால் பாதுகாப்புப் பட்ஜெட் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. அரசின் கடன் ஜிடிபியில் 70%-ஐ கடந்துள்ளது. உற்பத்தி, விவசாயம் மற்றும் வர்த்தகத் துறைகள் முடங்கியுள்ளன.
சர்வதேச முதலீடுகள் விலகல்:
மூடிஸ், எஸ்&பி போன்ற தரமதிப்பீட்டு நிறுவனங்கள் இஸ்ரேலின் வளர்ச்சியைக் குறைத்துள்ளன. இஸ்ரேல் கோடீஸ்வரர்கள் நாட்டின் சூழலை அறிந்து தங்கள் முதலீடுகளை வெளிநாடுகளுக்குக் கடத்தியுள்ளனர்.
மக்களின் கொந்தளிப்பு:
அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை மற்றும் பிணையக் கைதிகளை மீட்காதது நெதன்யாகு மீது மக்களின் கோபத்தை உச்சத்துக்குக் கொண்டு சென்றுள்ளது. வளைகுடா நாடுகளை பகைத்துக்கொண்டதால் கச்சா எண்ணெய் கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது, எரிபொருள் தட்டுப்பாடு, கடும் விலை ஏற்றம் கச்சா அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி மக்களை வாட்டுகின்றன.
நெதன்யாகு தோற்றால்...?
ஒருவேளை, நெதன்யாகு தோற்றுவிட்டால், உலக அரங்கில் ஏற்படும் அதிர்வுகளைப் பார்ப்போம்.
அமெரிக்கா, ட்ரம்ப் நிலை:
நெதன்யாகு போரை நீட்டிப்பதை டிரம்ப் விரும்பவில்லை. காடி ஐசன்கோட் போன்ற மிதவாத ராணுவப் பின்னணி கொண்ட தலைவர்கள் ஆட்சிக்கு வந்தால், வாஷிங்டனுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் முறையான அரசு ரீதியில் மேலும் சீராகும்.
இந்தியாவுக்கான தாக்கம்:
நரேந்திர மோடி - நெதன்யாகு இடையேயான தனிப்பட்ட நட்பு வலுவாக இருப்பினும், இந்தியா - இஸ்ரேல் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப உறவுகள் முறையான நிறுவனக் கட்டமைப்பின் கீழ் தொடரும்.
முதலீடுகள், வெளியுறவு:
ஹைஃபா துறைமுகத் திட்டமும், IMEC பெருவழித் திட்டமும் எந்த ஆட்சி வந்தாலும் பாதுகாப்பாக இருக்கும். நெதன்யாகுவின் வீழ்ச்சி, இந்தியா தனது பாரம்பரிய ‘சமநிலை வெளியுறவுக் கொள்கை’யை மேற்கு ஆசியாவில் எந்தத் தர்மசங்கடமும் இன்றிப் பின்பற்ற வழிவகுக்கும்.
மேற்கு ஆசியாவின் நிலை:
புதிய மிதவாத அரசு, அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளின் உதவியுடன் காசா மற்றும் லெபனானில் போரை முடிவுக்குக் கொண்டுவரவும், பிணைக் கைிகளை மீட்கவும் தீவிரமாக முயலும். போர் நின்றால் சர்வதேச பொருளாதாரம் ஸ்திரமடைந்து, எரிபொருள் விலையும் குறையும். உலகின் பல நாடுகளில் தற்போது நடந்து வரும் பொருளாதாரம் தொடர்பான போராட்டங்கள் முடிவுக்கு வரும்.
நெதன்யாகுவின் தோல்வி என்பது ஒரு தனிநபரின் வீழ்ச்சி மட்டுமல்ல. அது தீவிர வலதுசாரி மற்றும் சுயநல அரசியலுக்கு மக்கள் தரும் சாட்டையடியாகும். போரால் மட்டுமே தேசத்தின் பாதுகாப்பை ஸ்திரப்படுத்த முடியாது. ராஜதந்திரமும் ஜனநாயகமும் அவசியம் என்பதை உலகுக்கு தேர்தல் முடிவுகள் சொல்லும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இஸ்ரேல் தேர்தல் முடிவுகள் வெளியாகும் நவம்பர் 4-ல் இதற்கான விடை தெரியும்.