பாகிஸ்தானுக்கு ‘செக்’ - மெக்கா ஒப்பந்தத்துக்கு ‘நோ’ சொன்ன எகிப்தும், இந்திய வியூகமும்!

பாகிஸ்தானுக்கு ‘செக்’ - மெக்கா ஒப்பந்தத்துக்கு ‘நோ’ சொன்ன எகிப்தும், இந்திய வியூகமும்!
Updated on
3 min read

அரசியல் சதுரங்கத்தில் சில நகர்வுகள் சத்தமில்லாமல் நடக்கும். ஆனால், அதன் அதிர்வுகள் உலகத்தையே உலுக்கிவிடும். வளைகுடா மற்றும் தெற்காசியப் பிராந்தியத்தில் சவுதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து அண்மையில் நேட்டோ பாணி ‘மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டன.

ஆப்பிரிக்க கண்டத்தின் மிகப் பெரிய சக்தியான எகிப்தையும் இணைத்து கொண்டு, இந்தியாவைச் சுற்றி வலுவான ராணுவ வளையம் அமைக்க பாகிஸ்தான் தீவிரமாக திட்டமிட்டது. ஆனால், எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி, இந்தக் கூட்டணியில் இணைய மறுத்தது பாகிஸ்தானின் ராஜதந்திரக் கனவுகளுக்கு பலத்த அடியாக மாறி உள்ளது.

எகிப்து சாமர்த்தியமாக விலகியதன் பின்னணியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கும், ராஜதந்திரமும், இந்தியாவின் வலுவான பொருளாதார ஆதிக்கமும் முதன்மைக் காரணியாக உள்ளன.

ஒப்பந்த பின்னணியும் பாகிஸ்தானின் திட்டமும்:

இந்த ஒப்பந்தம் துருக்கி மற்றும் சவுதி அரேபிய நாடுகளுக்குப் பலன் அளிக்கிறதோ இல்லையோ, கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச ஆதரவு குறைந்து வரும் சூழலில் உள்ள பாகிஸ்தானுக்கு பல வழிகளில் மிகப் பெரிய பலன் அளிக்கும்.

கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேசத் தனிமைப்படுத்தலில் தவிக்கும் பாகிஸ்தானுக்குச் சவுதியிடமிருந்து கடனுதவிகளும், துருக்கியிடமிருந்து நவீன போர் ஆயுதங்களும் கிடைக்க இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும். மேலும், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வளைகுடா மற்றும் இஸ்லாமிய உலகப் பாதுகாப்பில் தன்னைத் தவிர்க்க முடியாத ஒரு பலமாக முன்னிறுத்தவும் பாகிஸ்தானுக்கு இது உதவுகிறது.

எகிப்து விலகியதன் பின்னணி

இந்தக் கூட்டணியில் எகிப்தையும் சேர்க்க பாகிஸ்தான் தீவிரமாக முயன்றது. ஏனென்றால், முக்கிய கடல் வர்த்தகப் பாதையான சூயஸ் கால்வாயை எகிப்து அதன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாலும், இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்படுத்தவும்  திட்டமிட்டு அந்நாட்டைச் சேர்க்க முயன்றது. ஆனால், எகிப்து ஒதுங்கியது பாகிஸ்தான் முயற்சிக்கு பலன் அளிக்கவில்லை.  இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

வலுவான இந்தியா - எகிப்து உறவு:

எகிப்தில் 700-க்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் இயங்குகின்றன. அங்கு, இந்தியா 550 கோடி டாலர் முதலீடு செய்துள்ளதுடன், கடந்த ஆண்டில் மட்டும் 40,000 எகிப்தியர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது. மேலும், தேஜஸ் போர் விமானங்கள், ஆகாஷ் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இந்தியாவிலிருந்து வாங்க எகிப்து ஆர்வமாக இருக்கிறது. இதனால் பாகிஸ்தானுடன் சேர்வது இந்தியாவுடனான ஆழமான நட்பைப் பாதிக்கும் என எகிப்து கருதியது.

கடந்த 2023-ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், இந்தியாவின் குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றதும், பிரதமர் மோடி எகிப்திற்குச் சென்று அந்நாட்டின் உயரிய விருதைப் பெற்றதும் இருநாட்டு உறவையும் ஆழமாக்கியது.

சவுதி அரேபியாவின் முன்னாள் தூதர் ஒருவர் எகிப்து ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “பாகிஸ்தானுடன் ராணுவ ரீதியான ஒப்பந்தத்தில் எகிப்து இணைவது சாத்தியமற்றது. ஏனென்றால், இந்தியாவுடனான நட்பிலும் பொருளாதார உறவிலும் எகிப்து முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆழமாகச் சென்றுவிட்ட நிலையில், இந்தியாவுக்குப் பாதிப்பு தரும் எதையும் செய்ய எகிப்து துணியாது” எனத் தெரிவித்துள்ளார்.

துருக்கியுடனான வரலாற்று மோதல்:

2013-ம் ஆண்டில் எகிப்தில் முர்சி தலைமையிலான ‘முஸ்லிம் பிரதர்ஹுட்’ அரசைப் பதவியில் இருந்து இறக்கி, அல்-சிசி ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனால், முர்சிக்கு துருக்கி ஆதரவு அளித்து வந்தது. அப்போது இருந்து எகிப்து, துருக்கி இடையே கசப்பான உறவே நீடிக்கிறது. கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் இயற்கை எரிவாயு எடுக்கும் போட்டியில் எகிப்து, கிரீஸ் மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகள் ஒரு அணியாகவும், துருக்கி தனியாகவும் மோதி வருகின்றன. மேலும் லிபிய உள்நாட்டுப் போரிலும் இரு நாடுகளும் எதிரெதிர் துருவங்களாகச் செயல்பட்டன.

யு.ஏ.இ. உதவி:

ஐக்கிய அரபு அமீரகத்துடன் எகிப்து 35 பில்லியன் டாலர் மதிப்பிலான ‘ராஸ் எல் ஹெக்மா’ முதலீட்டு ஒப்பந்தத்தைச் செய்துள்ளது. ஆனால், சவுதி அரேபியாவுடன் சில விவகாரங்களில் முரண்பட்ட நிலையில், கூட்டணியில் இணைவது அமீரகம் மற்றும் ஈரானுடனான உறவைச் சிதைக்கும் என்று எகிப்து தயங்கியது.

சவுதியின் கசப்பான அனுபவம்: 2013-ம் ஆண்டு முதல் சவுதி அரேபியா பில்லியன் கணக்கில் நிதியுதவி அளித்தும், அதற்கு ஈடாக ராணுவ ரீதியாக எகிப்து எந்தப் பயனும் தரவில்லை என்ற அதிருப்தி சவுதியிடமும் இருப்பதால், எகிப்தை மறைமுகமாக எதிர்த்தது.

அரசியலமைப்புத் தடை:

எகிப்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 152-வது பிரிவின்படி, தேசியப் பாதுகாப்பு கவுன்சிலுடன் கலந்து ஆலோசிக்காமலும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஒப்புதல் பெறாமலும் அந்நாட்டு அதிபரால் வெளிநாட்டுப் போர்களுக்கு ராணுவத்தை அனுப்ப முடியாது. இது மெக்கா ஒப்பந்தத்துக்கு முரணாக இருக்கும் என்பதால் எகிப்து கூட்டணியில் சேர ஆர்வம் காட்டவில்லை.

இந்தியாவுக்கு தாக்கம் என்ன?

துருக்கியின் நவீன ஆயுதத் தொழில்நுட்பங்கள் பாகிஸ்தானுக்குச் செல்வது எல்லைப் பாதுகாப்புக்கு கூடுதல் கண்காணிப்பைக் கோரும் என்றாலும், இந்தியாவுக்குப் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதுவும் ஏற்படாது.

சவுதி - இந்தியா வர்த்தகம்:

சவுதி அரேபியாவுக்கு இந்தியா மிகப் பெரிய கச்சா எண்ணெய் சந்தையாகவும் முதலீட்டுப் பங்காளியாகவும் இருப்பதால், பாகிஸ்தானுக்காக இந்தியாவுடனான வர்த்தக உறவை சவுதி கெடுத்துக்கொள்ளாது.

இந்தியாவின் பதிலடி வியூகம்:

இந்தியா ஏற்கெனவே ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, கிரீஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் தனது பாதுகாப்பு மற்றும் வர்த்தக வட்டத்தைப் பலப்படுத்தியுள்ளது. சூயஸ் கால்வாய் பொருளாதார மண்டலத்தில் இந்திய நிறுவனங்களுக்குச் சிறப்பு நிலத்தையும் எகிப்து ஒதுக்கியுள்ளது.

 ஆப்பிரிக்காவின் முதன்மை ராணுவ சக்தியான எகிப்து, மெக்கா ஒப்பந்தத்தில் சேராமல் ஒதுங்கியதால் கூட்டணியின் பிராந்தியப் பலம் தானாகவே குறைந்துவிட்டது என்பது நிதர்சனம். எகிப்து இக்கூட்டணியில் இணையாமல் விலகியிருப்பது இந்திய வெளியுறவுக் கொள்கைக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும்.

பாகிஸ்தானுக்கு ‘செக்’ - மெக்கா ஒப்பந்தத்துக்கு ‘நோ’ சொன்ன எகிப்தும், இந்திய வியூகமும்!
குடிமக்கள் வங்கிக் கணக்கில் ரூ.30,000 - தைவான் அரசு வாரி வழங்குவது ஏன்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in