

அபுதாபி: ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக மூடப்பட்டிருந்த துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றில் திங்கள்கிழமை (மார்ச் 2) மாலை முதல் குறைந்த அளவிலான விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன.
விமானச் சேவைகள் தொடங்கப்பட்டாலும், பயணிகள் தங்களது விமான நிறுவனத்திடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட பயண நேரத் தகவல் வராமல் விமான நிலையத்துக்கு வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எமிரேட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மாலை முதல் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்களை இயக்க உள்ளதாகவும், ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மாற்றியமைக்கப்பட்ட பயணத் தேதிகள் குறித்த தகவல்கள் பயணிகளுக்கு நேரடியாகத் தெரிவிக்கப்படும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
இதேபோல் ஃபிளை துபாய் நிறுவனமும் இன்று மாலை முதல் சில விமானங்களை இயக்கி வருகிறது. பயணிகள் தங்களது தொடர்பு விபரங்களை இணையதளத்தில் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
போர்ச் சூழல் காரணமாக மத்திய கிழக்குப் பகுதியில் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், மார்ச் 3-ஆம் தேதியும் பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்படலாம் அல்லது தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் உடனான போர் நீடிக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ள சூழலில், இந்தத் தற்காலிக விமானச் சேவைகள் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களுக்குச் சிறிதளவு நிம்மதியைத் தந்துள்ளன.